
posted 22nd March 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
எந்த இனத்தை சேர்ந்தவரானாலும் காணி உரிமை கிடைக்க வேண்டும்
எந்த இனத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் அனைவருக்கும் காணி உரிமை கிடைக்க வேண்டும். அதற்காகவே 'உறுமய' வேலைத்திட்டம் அண்மையில் தம்புளையில் ஆரம்பிக்கப்பட்டது. இன்று (22) வெள்ளி ஒருசிலருக்கு மாத்திரம் அதன் பலன் கிடைத்திருந்தாலும், ஜூன் மாதமளவில் அந்த வேலைத் திட்டத்தை முழுமையாக நிறைவு செய்யுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளேன் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளர்.
“விவசாயத்தை நவீனமயமாக்கும் திட்டத்தை தொடங்கியுள்ளோம். இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு பிரதேச செயலகத்தை தெரிவு செய்துள்ளோம். இது யாழ்ப்பாணத்தில் கோப்பாயில் செய்யப்படுகிறது. இதன் மூலம் இந்த மாகாணம் நவீன விவசாயத்தைப் பெறுகிறது. அதே சமயம் வருமானமும் அதிகரிக்கிறது.
யுத்தத்தின் பின்னர் பெருமளவிலான காணிகள் இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் எடுக்கப்பட வேண்டியிருந்தது. இதுவரை 31 ஆயிரம் ஏக்கர் அரச காணிகளையும், 24 ஆயிரம் ஏக்கர் தனியார் காணிகளையும் அரசாங்கம் விடுவித்துள்ளது. மொத்தம் 63 ஆயிரம் ஏக்கர் விடுவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடற்படையின் கட்டுப்பாட்டில் இருந்த ஆயிரத்து 800 ஏக்கர் அரச காணி, 856 ஏக்கர் தனியார் காணி விடுவிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 2 ஆயிரத்து 600 ஏக்கர் விடுவிக்கப்பட்டுள்ளது.
2 ஆயிரத்து 600 ஏக்கர் அரச காணிகளையும் 68 ஏக்கர் தனியார் காணிகளையும் விமானப் படை விடுவித்துள்ளது. மேலும், சில நாட்களுக்கு முன்னர், 101 ஏக்கர் காணி மக்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது. இன்று 234 ஏக்கர் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும், பல கிராமங்களைச் சேர்ந்த நிலங்களுக்கு வனப் பாதுகாப்புத் துறையினர் வனப் பாதுகாப்புப் பகுதிகள் என பெயரிட்டிருந்தனர். 1985 வரைபடத்தின்படி, செயல்பாடுகளைத் தொடர அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளேன்.
முன்னதாக இந்த இடத்தின் காணி உரிமையாளர்களும், படையினரும் இணைந்து பலாலி ஸ்மார்ட் விவசாய திட்டத்தை ஆரம்பித்து வைத்தனர்.
இந்த காணிகள் அனைத்தும் நவீன விவசாயத் திட்டத்தில் மீண்டும் உரிமையாளர்களால் பயன்படுத்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளோம். இதை அவர்களால் தனியாக செய்ய முடியாது என்பதால், அவர்களுக்குத் தேவையான ஆதரவை வழங்க முப்படைகளும் இணைந்து செயல்பட்டு வருகின்றன.
வடக்கில் புதிய வேலைத் திட்டத்தை யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கின்றோம். யுத்தத்தின் பின்னர் ஏற்பட்ட பிரச்சினைகளை நாம் தற்போது தீர்த்து வருகின்றோம். நாங்கள் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஆரம்பித்தோம். அதனுடன் நாம் மட்டுப்படுத்தவில்லை. மக்களை பாதிக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்க வேண்டும். மேலும், அவர்களின் வருமான மூலங்கள் அதிகரிக்கப்பட வேண்டும். எனவே, இந்த மாகாணத்தில் புதிய பொருளாதாரத்தை உருவாக்கி வருகிறோம்.
வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் வரை விவசாயத்தை ஊக்குவிக்கவும், இந்த மாகாணத்தில் உள்ள சூரிய சக்தி மற்றும் காற்றாலை சக்தியை பயன்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம். அதற்கு இந்தியாவுடன் ஒத்துழைக்க வேண்டும் என்பதே எங்களது எதிர்பார்ப்பு. இதன் மூலம் சுற்றுலா தொழில் மற்றும் மீன்பிடித் தொழிலையும் ஊக்குவிக்க முடிகிறது. மேலும், முதலீட்டு வலயங்களுக்கும் காணி ஒதுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஐந்து - பத்து வருடங்களில் இந்த செயல்பாடுகளை நடைமுறைப்படுத்தி வடக்குக்கு வலுவான பொருளாதாரத்தை வழங்குவதற்கு நாம் செயல்பட்டு வருகின்றோம். வடக்கை ஒரு பெரிய பொருளாதார மையமாக மாற்ற அனைவரையும் நான் அழைக்கிறேன் என்றார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)