
posted 27th March 2023
துயர் பகிர்வோம்
வீதிகளைச் சேதமாக்கும் மண் ஏற்றும் வாகனங்கள்
வீதிகளைச் சேதமாக்கும் மண் ஏற்றும் வாகனங்கள்
மன்னார் நானாட்டான் பிரதேசத்திற்கு உட்பட்ட மடுக்கரைக் கிராமத்தில் ஸ்திரத்தன்மை அற்ற வீதிகளூடாக கனரக வாகனங்களில் மணல் ஏற்றிச் செல்வதால் வீதிகள், சிறிய பாலங்கள் சேதமடைந்து போக்குவரத்துக்கு உதவாத தன்மையாக மாறி வருவதாக பொது மக்களால் கவலை தெரிவிக்கப்படுகின்றது.
அவ்வழியால் செல்லும் பாடசாலை மாணவர்கள், பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள், நோயாளிகள், என்று பலரும் பாதிக்கப்பட்டு வருவதாக மடுக்கரை மற்றும் இராசமடு கிராமத்து மக்கள் குற்றம் சுமத்தியுள்ளார்கள்..
மேலும் பல வருடங்களாக அபிவிருத்தி எதுவும் காணாத குறித்த வீதி தற்போது புதிதாக அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போதே இவ்வாறு ஒரு நாளைக்கு அளவு கணக்கில்லாதவாறு கனரக வாகனங்கள் அதிக பாரத்துடன் சென்றால் புதிய வீதி தாங்குமா? என்றும் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.
மேலும் மண் ஏற்றிச் செல்ல அனுமதி வழங்கப்பட்டது ஒரு பாதை. ஆனால் இவர்கள் அந்த பாதை ஊடாக செல்வதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இவர்கள் மடுக்கரை இராசமடு பாதையை சேதப்படுத்துவதாகவே குற்றம் சுமத்தப்படுகின்றது.
மேலும், இந்த வீதிகளால் கனர வாகனங்கள் மண் ஏற்றி செல்வது தொடர்பாக உரிய அதிகாரிகளுக்கு தெரிவித்தும், அதிகாரிகள் மண் மாபியாக்கள் பக்கம் சார்ந்து நின்று தவறுகளை நியாயப்படுத்துகிறார்களே தவிர பொதுமக்களுக்கு அதரவாக பேச மறுக்கிறார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
நானாட்டட்டான் பிரதேச செயலாளர், மன்னார் மாவட்டச் செயலாளர், மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் அவர்கள் இந்த விடயத்தில் கரிசணை கொண்டு பொது மக்களுக்கு சார்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)