
posted 4th February 2023
இவ்வருடம் பெப்ரவரி மாதம் 4ம் திகதி சிங்களப் பெரும்பான்மையினருக்கு சுதந்திர தினமாக அமையினும் அவ்வாறு அவர்கள் கொண்டாடுவார்கள் எனினும் வட கிழக்கு வாழ் தமிழ் பேசும் மக்களுக்கு அது சுதந்திரமற்ற, உரிமைகள் அற்ற, சிங்கள ஏகாதிபத்தியத்திற்கு அடிமைப்பட்டிருக்கும் ஒரு நாளாகவே அவர்கள் அதனைப் பார்க்கின்றார்கள்.
எனவே தான் யாழ் பல்கலைக்கழக மாணவ ஒன்றியமும், கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களும் ஒன்றிணைந்து குறித்த நாளை கரிநாளாக அடையாளப்படுத்தியுள்ளனர். அவ்வாறு குறித்த நாளைப் பிரகடனப்படுத்த முன் அவர்கள் மக்கள் பிரதிநிதிகள், சிவில் சமூகத்தினர், மதத் தலைவர்கள் போன்றோருடன் கலந்துறவாடிய பிறகே இந்தத் தீர்மானத்தை எடுத்துக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பெப்ரவரி 4ம் திகதியன்று வடக்கு கிழக்கு தழுவிய வர்த்தக சமூகத்தினர், கடற்றொழிலாளர்கள், தனியார் மற்றும் அரச பேரூந்து உட்பட அனைத்து தொழிற்சங்கங்களும் தொழில் புறக்கணிப்பிலும் முழுமையான கடையடைப்பிலும் ஈடுபட உள்ளனர்.
எமது மனோநிலையை மன ஏக்கத்தை உலகுக்கு வெளிப்படுத்த இது ஒரு நல்ல சந்தர்ப்பமாக அமைந்துள்ளது.
பிரிட்டிஷாரின் ஆதிக்கத்தினுள் இருந்து சிங்களப் பெரும்பான்மையினரின் ஆதிக்கத்தினுள் இந்நாடு 1948ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ம் திகதியன்று சென்றமையை சுட்டிக் காட்டும் நாளாக இந்த நாள் அமைகின்றது.
ஒற்றையாட்சி மூலம் சிங்களப் பெரும்பான்மையினர் பெற்ற அரசியல் ஆதிக்கத்தை கடந்த 75 ஆண்டுகளாக சிங்கள அரசியல்வாதிகள் கட்டிக்காத்து வருகின்றனர். தந்திரமாக அவர்கள் பெற்றுக்கொண்ட ஒற்றையாட்சி முறையில் மாற்றத்தை ஏற்படுத்தி நாட்டில் வாழும் தமிழ் மக்கள் என்று பூரண அதிகாரப் பகிர்வைப் பெற சிங்கள மக்கள் அனுமதிக்கின்றார்களோ அன்றே தமிழ் மக்களின் விடிவு நாள். அதுவரையில் வருடந்தோறும் பெப்ரவரி நான்காம் திகதி என்ற கரிநாள் வந்து போய்க்கொண்டிருக்கும். நாமும் அன்றைய தினம் எமது மனோநிலையை வெளிப்படுத்திக்கொண்டே இருப்போம்.
இளைஞர், யுவதிகளின் பேரணியை வரவேற்கும் அதே நேரத்தில் அவர்கள் பயணம் பாதுகாப்புடனும், பொறுப்புடனும், வெற்றியுடனும் நடந்தேற வேண்டும் என்று இறைவனை இறைஞ்சுகின்றேன்.
அன்புடன்
நீதியரசர் க.வி. விக்னேஸ்வரன்
பாராளுமன்ற உறுப்பினர்
யாழ்ப்பாணம்.
அசலை வாசிக்க இங்கே அழுத்தவும் >>>>நீதியரசர் க.வி. விக்னேஸ்வரனின் ஒறியினல் படிவம்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)