
posted 27th March 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
ரஹ்மத் மன்சூர் ஆழ்ந்த அனுதாபம்
எனது தந்தையாரின் அரசியல் காலம் தொட்டு இன்று வரை எமது குடும்ப உறவாகத் திகழ்ந்த எனது நேசத்திற்கும் மதிப்புக்குமுரிய மௌலவி யூ.எல்.எம். காஸிம் அவர்களின் மறைவு மிகவும் கவலையளிக்கிறது என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய ஒருங்கிணைப்பு செயலாளரும் கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வருமான ரஹ்மத் மன்சூர் தெரிவித்துள்ளார்.
சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர், சபையின் முன்னாள் பிரதித் தலைவரும், பைத்துஸ் ஸக்காத் நிதியத்தின் முன்னாள் தலைவருமான அல்ஹாஜ் மௌலவி யூ.எல்.எம். காஸிம் அவர்களின் மறைவு குறித்து அவர் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது;
எனது தந்தையார்- முன்னாள் அமைச்சர் ஏ.ஆர். மன்சூர் அவர்களின் அரசியல் பயணத்தில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து, அவரது வெற்றிக்கு என்றும் உறுதுணையாக இருந்து செயற்பட்ட காஸிம் மெளலவி அவர்களின் மறைவு தனிப்பட்ட முறையில் எனக்கு பெரும் நெருடலை ஏற்படுத்தியிருக்கிறது.
தந்தையின் மறைவுக்குப் பின்னரும் காஸிம் மௌலவி அவர்கள் என்னுடனும், குடும்பத்தினருடனும் உறவுகளைப் பேணி வந்தார். தேவையான சந்தர்ப்பங்களில் எனக்கு உரிமையுடன் ஆலோசனைகளையும் அறிவுறுத்தல்களையும் வழங்கி நெறிப்படுத்தியிருந்தார்.
நானும் எனது தந்தைக்கு நிகராக அவர்களை நேசித்து, மதித்து, அன்பு பாராட்டி வந்துள்ளேன். அதன் ஊடாக அவர்களது பிள்ளைகளுடனும் நட்புறவைப் பேணி வருகின்றேன்.
அன்னார் இப்பிரதேசத்திற்கும் சமூகத்திற்கும் ஆற்றிய சேவைகள் அளப்பரியதாகும். அவரது இழப்பு எமது சமூகத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாக அமைந்திருக்கிறது.
வல்ல இறைவன் அன்னாரது சேவைகள் அனைத்தையும் பொருந்திக் கொண்டு ஜன்னத்துல் பிர்தெளஸ் எனும் உயர்ந்த சுவர்க்கத்தை வழங்கப் பிரார்த்திக்கிறேன்.
மேலும், அன்னாரது மறைவால் துயருற்றிருக்கும் மனைவி, பிள்ளைகளுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதுடன் இந்த இழப்பைத் தாங்கும் சக்தியை இறைவன் அவர்களுக்கு வழங்கவும் பிரார்த்திக்கிறேன்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)