
posted 27th March 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அனுதாபம்
நெஞ்சுக்கு நெருக்கமான நண்பரும் தமிழ் மொழி மூல வாசகர்களின் பேரன்பைப் பெற்றவருமான ஆசுகவி அன்புடீன் காலமான செய்தியறிந்து ஆழ்ந்த கவலையடைகின்றேன். இவ்வாறு ஆசுகவி அன்புடீனின் மறைவு குறித்து முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சந்தக் கவி பாடுவதில் மிகவும் ஆற்றல்மிக்கவராக இருந்த அவர், சிறுகதை, நாடகம் முதலான அனைத்து படைப்பிலக்கியத் துறைகளிலும் சிறந்து விளங்கினார். சொல்லழகும், எளிமையும் நிறைந்த அவரது ஆக்கங்கள் உள்நாட்டில் மட்டுமல்லாது, கடல் கடந்த நாடுகளிலும் கூட அவருக்கு ஏராளமான ரசிகர்களையும் வாசகர்களையும் பெற்றுக் கொடுத்தது.
ஆரம்ப காலங்களில் பாட்டாளி வர்க்கத்தினரின் விடுதலைக்காக இலக்கியங்களைப் படைத்துக் குவித்த அவர் முஸ்லிம் காங்கிரஸ் தோற்றுவிக்கப்பட்ட பின்னர் பெருந் தலைவர் அஷ்ரஃப் அவர்களின் முஸ்லிம் இனத்துவ அரசியலில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார். அதனால், மர்ஹூம் அஷ்ரஃப் அவர்களின் அன்புக்கும் நெருக்கத்திற்கும் உரித்தானவராக அவர் திகழ்ந்தார்.
தென்கிழக்குப் பிராந்தியம் அவரை நன்றியுடன் கௌரவித்து, மலர் வெளியிட்டு மாபெரும் விழாவையும் எடுத்திருந்தது. குறித்த விழாவுக்கு என்னையே பிரதம அதியாக அழைக்க வேண்டும் என்பதில் அவர் மிகவும் கரிசனை கொண்டிருந்தார். அத்தகைய அன்பும் பண்பும் நிறைந்த ஓர் இலக்கிய நண்பரின் பிரிவு கண்களைக் குளமாக்குகின்றது.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாருக்கு ஜென்னத்துல் பிர்தௌஸ{ல் அஃலா என்ற மேலான சுவன பாக்கியத்தை வழங்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்வதோடு, அவரது இழப்பினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், ஒலுவில், பாலமுனை, அட்டாளைச்சேனை மக்கள், இலக்கிய நண்பர்கள் முதலான அனைவரினதும் துயரத்தில் நானும் பங்கு கொள்கின்றேன்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)