
posted 13th February 2023
“நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலையில், மனம் சோர்ந்த நிலையில் பணிகளை முன்னெடுக்க வேண்டிய நிலையிலுள்ளோம். எனினும் இத்தகைய சவால்களுக்குமுகம் கொடுத்து மக்கள் சேவையைத்தளராது முன்னெடுப்பொம்”
இவ்வாறு, அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வீ. ஜெகதீஸன் கூறினார்.
நிந்தவூர் பிரதேச செயலக ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற “தூறல்” நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், ஊழியர்களின் வருடாந்த ஒன்று கூடலும், பிரதேச செயலகத்தில் கடமையாற்றி ஓய்வு பெற்ற மற்றும் இடமாற்றம் பெற்றுச் சென்றோரைக் கௌரவிக்கும் நிகழ்வும் ஒருங்கே “தூறல்” எனும் தலைப்பில் பெரு நிகழ்வாக நடைபெற்றது.
நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ.எம். அப்துல் லதீப் தலைமையில், நிந்தவூர் அமீர் மஹால் திறந்த வெளி அரசங்கில் நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்வில் கல்முனை, சம்மாந்துறை, சாய்ந்தமருது, பொத்துவில் பிரதேச செயலாளர்கள் உட்பட முக்கிய உயரதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
உதவி பிரதேச செயலாளர் ஜெசான் ஆசிக், நிருவாக உத்தியோகத்தர் எம்.ரி.எம். சரீம், சமுர்த்தி தலைமைப் பீட முகாமையாளர் ஏ.சி. அன்வர் உட்பட பிரதேச செயலாளர் சட்டத்தரணி அப்துல் லதீப் ஆகியோர் சேவை நலன் பாராட்டு உரைகளை நிகழ்கில் ஆற்றினர்.
பிரதம அதிதி மேலதிக அரசாங்க அதிபர் ஜெகதீஸன் தொடர்ந்து உரையாற்றுகையில் பின்வருமாறு கூறினார்.
“மாவட்ட ரீதியாகவும், தேசிய ரீதியாகவும் நிந்தவூர் பிரதேச செயலகம் சிறப்பான இடங்களைப் பெற்று பெருமை சேர்த்திருப்பதற்கு, சிறந்த தலைமை நிருவாகமும், உத்தியோகத்தர்கள், ஊழியர்களின் அர்ப்பணிப்பான மக்கள் சேவைகளுமே காரணமாகும்.
பேதமின்றி உணர்வுகளைப் பகிரும் இந்த நிகழ்வில் இத்தகைய சாதனைகளைத் தொடரும் வண்ணம் நாம் உறுதி கொள்ள வேண்டும்.
நாட்டின் இன்றைய இக்கட்டான பொருளாதார நெருக்கடி சூழ்நிலையில், அரச பணிப்பாளர்களாகிய நாமும் பெரும் பொருளாதார சுமைக்கு உட்பட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.
இதனால் மனம் சோர்ந்த நிலையில் பணிகளை முன்னெடுக்க வேண்டிய நிலமையிருப்பினும், மாற்றுச் சிந்தனையோடு, பொருளாதார நெருக்கடிபற்றிய மன நிலை நீங்கி இயலுமான சேவைகளை ஆற்ற வேண்டிய கட்டாய நிலமையையும் நாம் உணர்ந்து செயற்பட வேண்டும்.
இதேவேளை இன்றைய நிலையில் அரச நிதியைவிடவும், சமூகப் பிரமுகர்கள், தனவந்தர்களின் உதவிகளுடன் சமூகத்திற்குச் செய்ய வேண்டிய அபிவிருத்தி வேலைத் திட்டங்களைத் திட்டமிடவும் நாம் முயற்சிக்க வேண்டும்.
அரச பணி மூலம் நாம் ஆற்றும் சேவைகள் என்றும் தடம்பதிக்கத் தக்கதாகவும் அமைய வேண்டும்” எனத் தெரிவித்தார்.
நிந்தவூர் பிரதேச செயலகத்தில் கடமையாற்றி ஓய்வு பெற்ற மற்றும் இடமாற்றம் பெற்றுச் சென்ற உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் பலரும் நிகழ்வில் பாராட்டி கௌரவிக்கப்பட்டதுடன், கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)