
posted 8th March 2023
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
ஏப்ரல் 25ஆம் திகதி
உள்ளூராட்சி தேர்தலை நடத்துவதற்கு எதிர்வரும் ஏப்ரல் 25ஆம் திகதி பொருத்தமான தினம் என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அத்துடன், தேர்தல் தொடர்பான அறிவித்தலை வெளியிடுவதற்கு மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
முன்னதாக, கடந்த மார்ச் 9ஆம் திகதி உள்ளூராட்சி தேர்தல் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், நிதி இன்மையால் தேர்தலை நடத்த முடியாதுள்ளது என்றும் அதனை ஒத்திவைப்பதாகவும் கடந்த பெப்ரவரி 24ஆம் திகதி தேர்தல் ஆணைக்குழு அறிவித்தது.
இந்த நிலையில், தேர்தலுக்கான நிதியை விடுவிக்க திறைசேரிக்கு உத்தரவிடுமாறு கோரி ஐக்கிய மக்கள் சக்தி தொடர்ந்த வழக்கு கடந்த 3ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இதில், தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை தடுத்து வைப்பதை தடுக்கும் இடைக்கால உத்தரவை உயர்நீதிமன்று பிறப்பித்தது.
இதைத் தொடர்ந்து இந்த வாரத்தில் தேர்தலுக்கான புதிய திகதியை நிதி அமைச்சு, அரச அச்சகம், பொலிஸ் மற்றும் பிற அதிகாரிகளுடன் கலந்துரையாடிய பின்னர் அறிவிப்பதாக தேர்தல் திணைக்களம் அறிவித்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இறைச்சியுடனான எலும்பு உயிரைப் பறித்தது
ஆட்டிறைச்சியின் எலும்பு மார்பு குருதிக் குழாயில் சிக்கியதால் குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்தார்.
தென்மராட்சி - மட்டுவில் தெற்கை சேர்ந்த லோகேந்திரகுமார் மேரி ஜெனிஸ்ரா (வயது- 46) என்ற இரு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்தார்.
நேற்று முன்தினம் திங்கள் இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் அறிய வருவதாவது,
குறித்த பெண், கடந்த 25ஆம் திகதி ஆட்டிறைச்சி சாப்பிட்டுள்ளார். ஆட்டிறைச்சியின் எலும்பு தொண்டைக்குள் சிக்கியுள்ளது. இதனால் அவர் வாழைப்பழம் சாப்பிட்டுள்ளார். எலும்பு மார்பு பகுதி வரை இறங்கி சிக்கியது.
மறுநாள் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெறுவதற்காக சென்றுள்ளார். அவருக்கு வாய் வழியாக கமெராவை செலுத்தி ஆராய மருத்துவர்கள் முற்பட்டுள்ளனர். ஆனால், இதற்கு உடன்பட அந்த பெண் மறுத்து வீட்டுக்கு சென்றுள்ளார் என்று தெரிய வருகிறது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் திங்கள் அந்தப் பெண் இரத்த வாந்தி எடுத்துள்ளார். இதையடுத்து உடனடியாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார்.
இறப்பின் பின்னர், கமெரா மூலம் பார்த்தபொழுது ஆட்டிறைச்சி எலும்பு குருதிக் குழாயில் குத்தியதாலேயே இரத்த வாந்தி ஏற்பட்டுள்ளது என்று மருத்துவ அறிக்கையிடப்பட்டது என்று விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டது.
இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் நேற்று..செவ்வாய் நடத்தினார்.


தங்க நகை திருடிய பெண் விளக்கமறியலில்
9 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஐந்தரைப் பவுண் தங்க நகையை திருடிய பெண் உட்பட இருவரை எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
இளவாலை - நுணசை சிவன் கோவில் திருவிழாவில் நேற்று முன்தினம் திங்கள் சங்கிலி அறுக்கப்பட்டது. முச்சக்கர வண்டியில் வந்த மூவர் கொண்ட குழு இந்தக் கைவரிசையை காட்டியது.
இந்தச் சம்பவம் தொடர்பில் இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
இதனடிப்படையில், விசாரணையில் ஈடுபட்ட இளவாலை பொலிஸார் பெண் உட்பட இருவரை கைது செய்தனர். மற்றொரு பெண் தலைமறைவானார். கைதான இருவரும் திருகோணமலையைச் சேர்ந்தவர்கள் என அறிய முடிகிறது. இதன்போது திருடப்பட்ட நகைகளும் மீட்கப்பட்டன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை பொலிஸார் நேற்று செவ்வாய்க்கிழமை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தினர். இதன்போதே அவர்களை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)