
posted 5th March 2023
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
சொலமன் சிறில் தெரிவு
யாழ்.மாநகர சபையில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் முதல்வர் வேட்பாளராக சொலமன் சிறில் தெரிவாகியுள்ளார்.
இன்று (05) ஞாயிறுகாலை தமிழ் அரசுக் கட்சியின் மாநகர சபை உறுப்பினர்களுடனான கலந்துரையாடலில் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டதாக, கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா அறிவித்துள்ளார்.
ஏற்கனவே முதல்வராக இருந்த சட்டத்தரணி வி. மணிவண்ணன் அந்தப் பதவியில் இருந்து விலகியதை அடுத்து முன்னர் முதல்வராக இருந்து பதவி இழந்த இ. ஆர்னோல்ட் மீண்டும் முதல்வரானார். ஆயினும் அவர் சமர்ப்பித்த வரவு - செலவுத் திட்டம் தோல்வியடைந்ததை அடுத்து மீண்டும் அவர் பதவி இழந்தார்.
இந்நிலையில் மீண்டும் இடம்பெறும் முதல்வர் தெரிவுக்கு இம்முறை சொலமன் சிறில் வேட்பாளராக நிறுத்தப்படவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ். மாநகரசபை முதல்வர் தெரிவு எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறும். எதிர்வரும் 19ஆம் திகதி உள்ளூராட்சிச் சபைகள் அனைத்தும் கலைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மீன்பிடிக்க அனுமதிக்கும் யோசனைக்கு முழுமையான எதிர்ப்பு
இலங்கை கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்களை மீன்பிடிக்க அனுமதிக்கும் யோசனைக்கு முழுமையான எதிர்ப்பை தெரிவிப்பதென வடக்கு மாகாணத் கடற்தொழிலாளர் சங்கங்களுக்கும், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் நேற்று நடந்த சந்திப்பில் இணக்கம் காணப்பட்டுள்ளது.
தமது முடிவை இலங்கை, இந்திய, தமிழக அரசுகளுக்கு எழுத்து மூலம் அறிவிப்பதுடன், மக்கள் போராட்டமொன்றை நடத்துவதென்றும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்களை மீன்பிடிக்க அனுமதிக்கும் யோசனை இந்திய அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த யோசனைக்கு இலங்கை அரசாங்கமும் கொள்கையளவில் இணக்கம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அண்மையில் பாராளுமன்றத்தில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரியும் இந்த யோசனை தொடர்பில் சாதகமான பிரதிபலிப்பை வெளியிட்டிருந்தார்.
இந்த யோசனைக்கு தாம் எதிரானவர் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா செய்தியாளர் சந்திப்பொன்றில் சூசகமாக தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இலங்கைக் கடற்பரப்பில் இந்திய மீனவர்களை அனுமதிக்கும் யோசனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக வடக்கு மாகாணத்திலுள்ள கடற்தொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும், வடக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் நேற்று சந்திப்பு இடம்பெற்றது. கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கவில்லை.
நேற்றைய சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் த. சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ. சுமந்திரன், சி. சிறிதரன், சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இலங்கைக் கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்களை அனுமதிப்பது தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அண்மையில் பாராளுமன்றத்தில் உரையாற்றிய விடயம் தொடர்பில், கடற்தொழிலாளர் சங்கங்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் கையெழுத்திட்ட எதிர்ப்பு கடிதத்தை இலங்கை, இந்திய அரசுகள், தமிழக அரசுக்கு அனுப்பி வைப்பதென நேற்று தீர்மானிக்கப்பட்டது.
இலங்கையிலுள்ள இந்திய தூதரகம், யாழிலுள்ள துணைத்தூதரகங்களில் கடிதங்கள் கையளிக்கப்படவுள்ளன.
அத்துடன், தேவைப்படின் இலங்கை அரச தலைவர்களை சந்தித்து பேசுவதென்றும் தீர்மானிக்கப்பட்டது.
இதுதவிர, இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்களை அனுமதிக்கும் யோசனைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டமொன்றை நடத்துவதென்றும் தீர்மானிக்கப்பட்டது.
மேலும், இழுவைமடி தொழில் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகளை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கையெடுக்குமாறும் அந்த கடிதத்தில் கோரவுள்ளனர்.
வாழ்வெட்டிற்கள்ளான இளைஞன்
அச்சுவேலி - மகிழடி வைரவர் கோவில் பகுதியில் ஞாயிறுமாலை (05) இளைஞர் ஒருவர் மீது வாள்வெட்டுக் குழு ஒன்று துரத்தி துரத்தி வாள்வெட்டு நடத்தியுள்ளது.
இரு குழுக்களுக்கிடையில் தொடர்ச்சியாக முறுகல் நிலை இருந்து வருவதாக அச்சுவேலி பொலிஸார் கூறினர்.
இந்நிலையில் ஒரு குழுவைச் சேர்ந்த இளைஞன் அச்சுவேலி நகருக்கு வந்த நிலையில் மற்றைய குழுவைச் சேர்ந்தவர்கள் அவரைத் துரத்தி துரத்தி வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர்.
சம்பவத்தில் பாரதி வீதி, பத்தமேனியைச் சேர்ந்த 27 வயதான இளைஞர் ஒருவரே வாள்வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் சிக்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
போதை மாத்திரை விற்பனையில் இளைஞன்*
யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த ஒருவர் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோண்டாவிலைச் சேர்ந்த 25 வயதுடைய ஒருவரே இவ்வாறு இன்று (05) ஞாயிறு கைது செய்யப்பட்டார்.
கோப்பாய் பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவு பொலிஸாருடன் நெருங்கிய தொடர்பை பேணி வரும் ஒருவரின் உறவினரே இவ்வாறு போதைமாத்திரை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் விசாரணைகளின் பின் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.
இதவேளை, 4 கிலோ கிராம் கஞ்சா போதைப் பொருளுடன் ஒருவர் கொடிகாமம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.
எழுதுமட்டுவாழ் பகுதியில் வைத்து கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய சந்தேக நபரே இன்று மாலை கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
அனலைதீவில் மாட்டிறைச்சியுடன் ஒருவர் கைது
அனைலதீவு பாலத்திலிருந்து ஊர்காவற்துறை கண்ணகை அம்மன் பாலம் ஊடாக இன்றைய தினம் 05.03.2023 ஞாயிற்க் கிழமை காலை 8:00 மணியளவில் கடத்தவிருந்த சட்டவிரோதமான ஒரு தொகை மாட்டிறைச்சியையும், அதனை கடத்தி வந்த நபரையும் அனலைதீவில் பாதுகாப்பு கடமையிலிருந்த பொலிசார் கைது செய்துள்ளனர்.
இக் குற்றச் செயலுடன் தொடர்புடைய சந்தேக நபர் யாழ் - மாதகல் என்னும் இடத்தைச் சேர்ந்தவர் என்றும், இவருக்கு அனைலைதீவில் கிராம சேவகர் பதிவு இல்லை என்றும் அவ் ஊர் மக்கள் தெரிவிப்பதோடு இந்த சந்தேக நபர் பல குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் என்று மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
மேலதிக விசாரணைகளை ஊர்காற்துறை பொலிசார் மேற்கொண்டுள்ளனர்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)