பலவகைச் செய்தித் துணுக்குகள்

கடல் அட்டை பண்ணைகளால் பாதிக்கபடும் இயற்கை வளம்

விஞ்ஞான ஆய்வின் படி வடபகுதியில் கடல் அட்டை பண்ணைகள் அமைப்பது இயற்கை வளத்தைப் பாதிக்கும் என தேசிய மீனவர் இயக்கத்தின் இணைப்பாளர் அன்ரனி ஜேசுதாசன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

கடலட்டைப் பண்ணையினால் பாதிக்கப்படும் வட மாகாண மீனவர் பிரதிநிதிகளை உள்ளடக்கி ஒரு கலந்துரையாடல் நடத்தப்பட்டது. அந்த கலந்துரையாடலில் கடலட்டைப் பண்ணை மீனவர்களுக்கு சாதகமானதா பாதகமாக இருக்கின்றதா? என்பது தொடர்பில் ஆராய்ந்தோம்.

ஒட்டுமொத்த விஞ்ஞானபூர்வமான கருத்தின்படி இலங்கை கடற்பரப்புக்குள் குறிப்பாக வடபகுதியில் அட்டைப்பண்ணை உருவாக்குவது ஒரு முறையற்ற விடயம். அது மீனவர்களுடைய எதிர்கால வாழ்வை பாதிக்கின்ற ஒரு விடயம்.

வடபகுதியில் மேற்கொள்ளப்படுகின்ற அட்டைப் பண்ணைகள், பாரம்பரிய மீன்பிடி முறைக்கு எதிரானதாகவும், இயற்கை வளங்களை அளிக்கின்றதாகவும் மீன்கள் புலம்பெயரும் இடங்களை தடுக்கின்ற மீன்கள் முட்டையிடும், குஞ்சு பொரிக்கும் இடங்களை பாதிக்கின்றதாகக் காணப்படுகிறது.

இலங்கையில் வடபகுதியில் 17 விதமான அட்டைகள் காணப்படுகின்றன. அந்த அட்டைகள் அழிக்கப்படுவதற்கு இந்த அட்டை பண்ணைகள் ஒரு காரணமாக இருக்கும்.

ஆகவே, இது தொடர்பாக அமைச்சரும் ஏனைய நிறுவனங்கள், கடற்தொழில் பரிசோதர்கள் ஆழமாக ஆய்வு செய்து உடனடியாக இந்த அட்டைப் பண்ணைகளை நிறுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கவேண்டும்.

முக்கியமாக சீனாவின் அட்டைக் குஞ்சுகளை கொண்டு வந்து தான் இந்த அட்டைப் பண்ணைகளில் வளர்க்கிறார்கள். இது கலப்பு முறையான ஒரு செயற்பாடாக காணப்படுகின்றது. இந்த விடயம் சாதாரணமாக வடபகுதியில் இருக்கின்ற இயற்கையாக உருவாகின்ற அட்டைகளின் அழிவுக்கு இது காரணமாக இருக்கின்றது.

தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் என்ற அமைப்பின் கருத்துபடி ஒரு ஆழமான ஆய்வை செய்து இந்த அட்டைப் பண்ணைகளை தடுப்பதற்குரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.




விபத்தினால் உயிரிழந்த இளம் குடும்பஸ்தர்

உழவு இயந்திரத்துடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் காயமடைந்தவர் உயிரிழந்தார்.

திருமணமாகி இரண்டு மாதங்களான தெல்லிப்பழையை சேர்ந்த பாலசுப்பிரமணியம் சயந்தன் (வயது - 29) என்பவரே உயிரிழந்தார்.

உயிரிழந்தவரும் அவரின் சகோதரனும் கடந்த ஜனவரி 17ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் கொடிகாமம் சென்று திரும்பிய போது இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயங்களுக்கு உள்ளான சகோதரர்கள் இருவரும் யாழ். போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தனர். இந்த நிலையிலேயே, ஒருவர் நேற்று முன்தினம் திங்கள் (13) உயிரிழந்தார்.



கரையொதுங்கிய மீனவரின் சடலம்

கடற்றொழிலுக்கு சென்ற போது படகு கவிழ்ந்ததில் காணாமல் போன மீனவரின் சடலம் கரையொதுங்கியது.

இந்தச் சம்பவத்தில் புதுக்குடியிருப்பு - வள்ளிபுனம் கரிதாஸ் வீதியை சேரந்த பி. ரவிச்சந்திரன் என்பவரின் சடலமே இவ்வாறு கரை ஒதுங்கியது.

கடந்த ஞாயிறு (12) மாலை இவரும் இன்னொருவருமாக வடமராட்சி கிழக்கு, குடாரப்பு கடற்பரப்பில் மீன்பிடிக்க படகில் சென்றிருந்தனர்.

இந்த நிலையில் படகு கவிழ்ந்துள்ளது. ஒருவர் நீந்திக் கரை சேர்ந்த நிலையில் மற்றவர் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்தார். இவரின் சடலம் நேற்று (14) செவ்வாய் குடாரப்பில் கரையொதுங்கியது.



தோற்கடிக்கப்பட்ட 2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம்

யாழ்ப்பாணம் மாநகர சபையின் மீண்டும் புதிதாக சமர்ப்பிக்கப்பட்ட 2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் 8 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

2023ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் முதல்வர் இ. ஆனல்ட்டால் நேற்று முற்பகல் 10.30 மணியளவில் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

45 உறுப்பினர்களை கொண்ட சபையில் 40 உறுப்பினர்களே பங்கேற்றனர்.

வரவு - செலவு திட்டத்திற்கு 16 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களும், மணிவண்ணன் அணி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஈ. பி. டி. பி. ஆகியவை எதிராக வாக்களித்தன. எதிராக 24 வாக்குகள் அளிக்கப்பட்ட நிலையில் 8 மேலதிக வாக்குகளால் வரவு - செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டது.

முதல்வர் ஆனல்ட் இன்னும் இரு வாரங்களில் வரவு - செலவு திட்டத்தை சமர்ப்பிக்க வேண்டும். இதுவும் தோல்வியடையும் பட்சத்தில் அவர் பதவியை இழப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


பலவகைச் செய்தித் துணுக்குகள்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)