
posted 12th February 2023
எஸ் தில்லைநாதன்
மனதை மாற்றிக்கொண்ட பா.உ. னாக்கள்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அளித்த வாக்குறுதிகளை உரிய காலத்துக்குள் நிறைவேற்றாத காரணத்தால் அவர் கலந்துகொள்ளும் எந்தவொரு பொது நிகழ்வுகளிலும் பங்கேற்பதில்லை என்று தமிழ் எம். பிக்கள் தீர்மானித்திருந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் யாழ்ப்பாண கலாசார நிலையத் திறப்பு விழாவிலும் பங்கேற்பதில்லை என்ற நிலைப்பாட்டிலேயே அவர்கள் இறுதி வரையில் இருந்துள்ளனர்.



இருப்பினும், வெள்ளிக்கிழமை (10) இரவு இந்திய மத்திய இணையமைச்சர் எல். முருகன் மற்றும் தமிழக பா. ஜ. க. தலைவர் அண்ணாமலை ஆகியோருடன் நடைபெற்ற விருந்துபசாரத்துடனான சந்திப்பின் பின்னர் அந்த முடிவை சில தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாற்றிக்கொண்டுள்ளனனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்த சந்திப்பின்போது, இணை அமைச்சர் முருகன் மற்றும் அண்ணாமலை ஆகியோர் யாழ்ப்பாண கலாசார மண்டபத்தைக் கையளிக்கும் வரலாற்று நிகழ்வில் அவர்களை பங்கேற்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை சாதகமாக பரிசீலிப்பதாக அதில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையிலேயே, யாழ்ப்பாண கலாசார நிலையத் திறப்பு விழா நிகழ்வில் தமிழ் எம்.பி.க்கள் பங்கேற்றிருந்தனர் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் சுமந்திரன், சிறீதரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
எஸ் தில்லைநாதன்
13ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக அமுலாக்க வேண்டும் - சுரேஷ் பிறேமச்சந்திரன்
இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்கு உடனடியாக சந்தர்ப்பம் ஒன்றை ஏற்படுத்துமாறு இந்திய இணை அமைச்சர் எல். முருகன் மற்றும் தமிழக பா. ஜ. க. தலைவர் அண்ணாமலை ஆகியோரிடத்தில் கோரிக்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான ரெலோவின் செல்வம் அடைக்கலநாதன், ஈ. பி. ஆர். எல். எவ்வின் சுரேஷ் பிறேமச்சந்திரன் ஆகியோரே மேற்படி கோரிக்கை விடுத்ததுடன் 13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுலாக்குவதற்கு இந்தியாவின் மேற்பார்வையுடன் பொறிமுறை ஒன்றை உருவாக்குமாறும் பரிந்துரைத்துள்ளனர்.
யாழ்ப்பாணம் வந்துள்ள இந்திய இணை அமைச்சர் எல். முருகன் மற்றும் அண்ணாமலை ஆகியோரை நேற்று சனி (11) இரவு சந்தித்துப் பேசியபோதே அவர்கள் இந்தக் கோரிக்கையை முன்வைத்தனர்.
அச்சமயத்தில், சுரேஷ் பிறேமச்சந்திரன், 13ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக அமுலாக்க வேண்டும் என்பது இந்தியாவின் நீண்டகாலக் கோரிக்கையாக உள்ளது. ஆனால், தற்போது இலங்கையில் அதற்கு எதிரான போராட்டங்கள் வலுவடைந்து வருகின்றன.
இதேநேரம், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் 1987ஆம் ஆண்டு உடன்படிக்கை செய்துகொள்ளப்பட்டதை அடுத்து அரசமைப்பில் உள்ளீர்க்கப்பட்ட 13ஆவது திருத்தச்சட்டத்துக்கும் தற்போது நடைமுறையில் காணப்படுகின்ற அதன் வடிவங்களுக்கும் இடையில் பெரும் வேறுபாடுகள் காணப்படுகின்றன என்றும் சுட்டிக்காட்டினார்.
எஸ் தில்லைநாதன்
சடலமாக மீட்க்கப்பட்ட வயோதிபர்
தொண்டைமானாறில் தோட்ட கிணறு ஒன்றிலிருந்து வயோதிபர் ஒருவரின் சடலம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.
இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டவர் அண்ணா சன சமூக நிலையம், கெருடாவில் தெற்கு தொண்டைமானாறைச் சேர்ந்த ஆ. பாலசிங்கம் (வயது- 71) என்பவராவார்.
வீட்டிலிருந்து சற்றுத் தொலைவில் உள்ள தோட்டக் கிணற்றிலிருந்து சடலம் மீட்கப்பட்டது.
பிரேத பரிசோதனைக்காக சடலம் பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
வாஸ் கூஞ்ஞ
நூறு கோடி மக்களின் எழுச்சி
மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியம் எதிர்வரும் 14.02.2023 செவ்வாய் கிழமை காலை 9 மணியிலிருந்து காலை 11 மணிவரை பெண்களுக்கெதிரான வன்முறையற்ற வாழ்வைக் கொண்டாடுவோம் என்ற நூறு கோடி மக்களின் எழுச்சி நிகழ்வினை நடாத்துக்கின்றது.
நடைபெற இருக்கும் இவ்நிகழ்வானது மன்னார் மாவட்ட செயலகத்துக்கு முன்னால் சுமார் நூறு பெண்களுடன் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பெண்களுக்கான அமைப்பின் மாவட்ட இணைப்பாளர் திருமதி மகாலட்சுமி குருசாந்தன் தெரிவித்துள்ளார்.
குறித்த இவ்நிகழ்வில் பாடல்கள் மற்றும் பெண்கள் பறை அடித்தல் போன்ற நிகவுகள் இடம்பெற இருக்கின்றன.
எஸ் தில்லைநாதன்
இறந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
கிளிக் செய்யவும் >>> வீடியோ
கிளிநொச்சி போலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பாள்குளம் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்றைய தினம் சனிக்கிழமை வழமைபோன்று மேசன் வேலையினை முடித்துவிட்டு வீட்டில் படுத்து உறங்கிய நிலையில் இன்று இனம் காணப்பட்டுள்ளார்.
முருகன் இரத்தினகுமார் என்ற 36 வயதுடைய மூன்றுபிள்ளைகளின் தந்தையே இவ்வாறு இறந்த நிலையில் இனங்காணபட்டுள்ளார். மனைவி பிள்ளைகளுடன் உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த சமயம் தனிமையில் படுத்து உறங்கிய நிலையில் இவ்வாறு சடலமாக இனம் காணப்பட்டுள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி போலிசார் மேலதிய விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில், பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.


எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)