
posted 7th February 2023
பல்கலைக்கழக மாணவர்களின் அழைப்பின் பேரில் யாழ்ப்பாணத்தில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த பேரணி இன்று (07) மட்டக்களப்பில் நிறைவடைந்தது.
இதேவேளை தமிழ் மக்கள் மீதான அடக்குமுறை - ஆக்கிரமிப்பை கண்டித்து சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி பல்கலைக்கழக மாணவர்களின் அழைப்பின் பேரில் யாழ்ப்பாணத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த பேரணி நேற்று (06) மாலை கிழக்கு மாகாண எல்லையை அடைந்தது. தொடர்ந்து பயணித்த பேரணி இரவு 10 மணியளவில் திருகோணமலை வெருகலில் மூன்றாம் நாள் பயணத்தை நிறைவு செய்தது.
யாழ்ப்பாணப் பல்லைக் கழகத்திலிருந்து கடந்த சனிக்கிழமை முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமானது. முதல்நாளில் இரணைமடுவில் பேரணி நிறைவடைந்தது. இரண்டாம்நாள் பயணம் ஞாயிற்றுக்கிழமை பரந்தனிலிருந்து ஆரம்பமாகி முல்லைத்தீவு பண்டார வன்னியன் சிலையருகே நிறைவடைந்தது.
மூன்றாம் நாளான நேற்றைய தினம் பண்டாரவன்னியன் சிலை அருகே பேரணி ஆரம்பமானது. அங்கிருந்து நகர்ந்த பேரணி தொல்பொருள் திணைக்களத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட குருந்தூர்மலை பகுதியை சென்றடைந்தது. அங்கு ஆக்கிரமிப்புக்கு எதிராக மக்கள் குரல் எழுப்பினர். தொடர்ந்து நகர்ந்த பேரணி அளம்பில் துயிலும் இல்லத்தை அடைந்தது. அங்கு, துயிலும் இல்லத்தை மீட்பதற்கான போராட்டத்தை செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்களின் சார்பில் தாயார் ஒருவர் உருக்கமான கோரிக்கையை முன்வைத்தார். அத்துடன், அங்கு மாவீர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதன் பின்னர், பௌத்த ஆக்கிரமிப்பு மற்றும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள செம்மலை - நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை பேரணி அடைந்தது. அப்பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமிலிருந்த இராணுவத்தினர் அங்கு குவிந்திருந்தனர். போராட்டக்காரர்கள் ஆக்கிரமிப்பை நிறுத்துமாறும் இராணுவத்தை வெளியேறுமாறும் உணர்ச்சிகரமாக கோஷமிட்டனர். தொடர்ந்து பிள்ளையார் ஆலயத்தில் வழிபாடுகளை தொடர்ந்த பின்னர் வடக்கு - கிழக்கு மாகாணங்களின் எல்லையாக பறையனாறு பகுதியில் பெரும் எழுச்சியாகப் போராட்டம் நடைபெற்றது.
தொடர்ந்து தென்னமரவாடியூடாக பேரணி நகர்ந்து திரியாய் பகுதியை அடைந்தது. கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் பேரணியாக வந்து வடக்கிலிருந்து பேரணியாக வந்தவர்களை வரவேற்றனர். இதைத் தொடர்ந்து இரு பேரணிகளும் ஒன்றாகி திருகோணமலை நகரம் நோக்கி நகர்ந்தன. திருகோணமலை நகரத்தில் பட்டாசுகள் வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து நகர்ந்த பேரணி தமிழ் மக்கள் படுகொலைகள் செய்யப்பட்ட கிளிவெட்டி, குமாரபுரம் பகுதிகளில் அஞ்சலி செலுத்தியது. இரவு 10 மணியளவில் வெருகல் சித்திரவேலாயுதர் சுவாமி ஆலயத்தை அடைந்த பேரணி மூன்றாம் நாளை நிறைவு செய்தது.
இன்றைய தினம் மட்டக்களப்பை அடையும் பேரணி அங்கு போராட்டத்தை நிறைவு செய்யும். இதேவேளை சுதந்திர தினத்தை தமிழர் தேசம் மீதான ஆக்கிரமிப்பு நாள் (கரிநாள் என பிரகடனப்படுத்தி பல்கலைக்கழக மாணவ சமூகமும், சிவில் சமூகமும் வெளியிட்ட சுவரொட்டிகள் கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் ஒட்டப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)