நிபந்தனையற்ற சுதந்திரம்

“பிரித்தானியர்களிடமிருந்து நிபந்தனையற்ற சுதந்திரத்தைக்கோரி நின்றவர்கள் முஸ்லிம்கள் இந்த வரலாற்று உண்மை இலங்கையின் சுதந்திரத்திற்காகப் போராடிய முஸ்லிம் தலைவர்களை நினைவு கூருகின்றது”
இவ்வாறு, முஸ்லிம் மரபுரிமைகள் முகாமைத்துவ நிலையத்தின் தலைவர் சட்டத்தரணி மர்சூம் மௌலானா கூறினார்.

முஸ்லிம் மரபுரிமைகள் முகாமைத்துவ நிலயத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இலங்கையின் 75 ஆவது சுதந்திர தின நிகழ்வுக்கு தலைமை வகித்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

நிலையத்தின் தலைமைக் காரியாலயமானை நிந்தவூர் ஸாலிமிய்யா நல்லிணக்கமைய மண்டபத்தில் நிகழ்வு நடைபெற்றது.

அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எம்.ஏ.எம். முர்ஷித், செயலாளர் ஐ.எல்.ஏ. அஸீஸ் ஆகியோரின் ஒழுங்கமைப்பிலும், நெறிப்படுத்தலிலும் சிறப்புற நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்வில் நிந்தவூர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர். கே.எல்.எம். றயிஸ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

அத்துடன் பேராதனைப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் முபிஸால் அபூபக்கர், நிந்தவூர் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரி அதிபர் ஹாமிம் ஸதகா ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.

ஆரம்பத்தில் இலங்கையின் தேசியக் கொடி ஏற்றப்பட்டு அல் - ஹாஜ் நபருல்லா மௌலானா அவர்களால் விஷேட துஆ பிரார்த்தனையும் நடத்தப்பட்டது.
தலைவர் சட்டத்தரணி மர்சூம் மௌலானா தொடர்ந்து உரையாற்றுகையில் பின்வருமாறு கூறினார்.

“இலங்கைக்கான சுதந்திரத்தை அன்று உள்ளக சமூக முரண்பாடுகள் தாமதப்படுத்தும் கள நிலையினைத் தீர்க்கமாக உணர்ந்த மர்ஹூம் டாக்டர். ரி.பி. ஜாயா அவர்கள்,

பிரித்தானியர்களிடமிருந்து நிபந்தனையற்ற சுதந்திரத்தைக் கோர வேண்டியதன் அவசியத்தை நாட்டின் தலைவர்களுக்குத் தெளிவூட்டி நமது சுதந்திர தாகத்தைத் தீர்த்தார் என்ற வலாற்று உண்மையை மறந்து விட முடியாது.

இந்த வகையிலும் சுதந்திர தினத்தைக் கொண்டாடுவது நமக்கான பூரண உரிமையாகும்.

இவ்வாறெல்லாம் நாட்டை நேசித்தவர்களென மார்தட்டும் உரிமை கொண்ட இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றை திட்டமிட்டு அரசியல் சூனியப் புள்ளிக்குள் தள்ளிவிடும் சூழ்ச்சியும் தொடர்கின்றது.

ஆனாலும் முஸ்லிம்களின் நீண்ட நெடிய வரலாறு சிதைக்கப்படுவதற்கு எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது.

எனவே தான் இந்த நாட்டு முஸ்லிம்களின் மரபுரிமைகளைப் பாதுகாக்கும் பொறுப்பு மிக்க பணியை முன்னெடுக்கின்றோம்” என்றார்.

மேலும் சிரேஷ்ட விரிவுரையாளர் முபிஸால் அபூபக்கர் உரையாற்றுகையில், இலங்கை முஸ்லிம்களின் மரபுகளை பாதுகாப்பதன் மூலம் சமூகத்தின் இருப்பைத் தக்க வைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதுடன்,
பூர்வீகங்களே எம்மைப் பாதுகாக்குமெனவும், இருப்பின் அடையாளங்களாகவுள்ள சியாரம்களைப் பாதுகாத்து, தூர்ந்துபோன நம் கலைக்களைப் பாதுகாப்பதிலும் மிக அவதானம் தேவை எனவும் கூறினார்.

நிபந்தனையற்ற சுதந்திரம்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)