
posted 14th March 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
திடீர் மழையால் அவலத்தில் விவசாயிகள்
அம்பாறை மாவட்டத்தில் இன்று ஞாயிறு (11) அன்று பெய்த பெருமழையால், அறுவடை செய்யப்பட்ட பெருமளவு நெல் வீதிகளில் தேங்கிக்கிடப்பதுடன், விவசாயிகள் பெரும் அவலங்களுக்கும் உள்ளாகியுள்ளனர்.
இந்த மாவட்டத்தில் காலநிலை சீரடைந்திருந்த நிலையில் பெரும்போக நெல் அறுவடை வேலைகளைத் துரிதப்படுத்தியிருந்தனர்.
அதேவேளை மாவட்டத்தின் பல்வேறுபகுதிகளிலும் பிரதான வீதிகளின் இருமருங்குகளிலும், மற்றும் உள்ளுர் வீதிகளிலும், திறந்த வெளிகளிலும் அறுவடை நெல்லை வெய்யிலில் பரப்பி உலர வைப்பதிலும் பெருமளவில் விவசாயிகள் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் தான் வழமைபோல் இன்றும் காலையில் நூற்றுக்கணக்கான மூடை நெல்லை பரப்பி உலர வைத்த நிலையில் திடீரெனப் பெருமழை பெய்ததால் விவசாயிகள் பெரும் அல்லோல கல்லோலத்திற்கு உள்ளாகினர்.
இதனால் உலர வைத்த இடங்களிலேயே நெல்லை ஒன்று கூட்டி மூடி வைத்துள்ளதால் மழை ஓய்ந்து வெய்யில் இறைக்கும் வரை இரவு பகலாக வீதிகளில் பாதுகாப்புக்காக காத்திருக்கும் நிலமையும் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு வீதிகளெங்கும் நெல் தேங்கிக் கிடப்பதால் கூலித் தொழிலாளிகளுக்கும் பெரும் கிராக்கி ஏற்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு நாளாந்த வருமான வாய்ப்பும் கிடைத்து வருகின்றது.
அம்பாறை மாவட்டத்தில் பெரும்போக அறுவடை ஆரம்பித்தது முதலே மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து பெருமளவு கூலித்தொழிலாளர்கள் இங்கு வந்து முகாமிட்டு தினசரி வருமானத்துடன் விவசாய அறுவடை, நெல் உலர்த்துதல் முதலான தொழில்களில் ஈடுபட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
கால நிலை சீரடையும் நிலமை தென்படாததால் விவசாயிகள் பெரும் கலக்கத்துடன் காணப்படுகின்றனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)