
posted 9th March 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
“குழந்தைகளின் நிகழ்வுகளில் அரசியல் அல்லது இனவாதம் பேசாதீர்கள். பிஞ்சு மனங்களில் நஞ்சை விதைக்காதீர்கள்”.
இவ்வாறு மாவடிப்பள்ளியில் இடம்பெற்ற முன்பள்ளி நிகழ்வொன்றில் உரையாற்றிய காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் வேண்டுகோள் விடுத்தார்.
மாவடிப்பள்ளி அனைத்து பாலர் பாடசாலைகள் சம்மேளன மாணவர்களின் வருடாந்த கலை நிகழ்ச்சியும், பரிசளிப்பும் சம்மேளனத் தலைவர் எம்.எச்.எம். அஸ்வர் தலைமையில் மாவடிப்பள்ளி அல் - அஸ்ரப் மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் மேலும் தெரிவிக்கையில்;
காரைதீவு பிரதேச சபைக் காலத்தில் நாங்கள் அதிகளவு அபிவிருத்தியை செய்தது மாவடிப்பள்ளியில் தான். இன, மத பேதமில்லாமல் நான் சேவையாற்றியுள்ளேன். என் மீது பலரும் விமர்சனங்களை முன்வைக்கிறார்கள். இந்த மேடையிலும் இனவாதக் கண்ணோட்டத்துடன் மின்விளக்கு தொடர்பாக கோரப்பட்டது. அரசியல் இனவாதம் பேசுவதற்கு இது உரிய இடமல்ல. எனவே வேறு பொது இடத்தில் அழைத்தால் விமர்சனங்களுடன் நான் நேரடியாக விவாதிக்க தயாராக உள்ளேன்.
கொரோனா காலத்தில் ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டபோது முஸ்லிம்களுடன் சேர்ந்து நான் போராடியபோது தாம் எதுவும் செய்யாமல் முடங்கி கிடந்து மொட்டுக்கு ஆதரவு திரட்டியவர்கள் இப்போது தான் வெளியே வந்து தங்களை நல்லவர்களாக காட்டிக்கொள்ள, என்னை இனவாதியாக சித்தரிக்கிறார்கள். நான் கொரோனா காலத்தில் நிறைய உதவிகளை முஸ்லிம்களுக்கும் செய்துள்ளேன். நீர் இணைப்புக்களை, மின்சார இணைப்புக்களை கூட எனது சொந்த நிதியில் வழங்கியுள்ளேன். அதனை விளம்பரப் படுத்தவில்லை. நான் மக்களுக்காக மக்களுடன் பயணிக்கிறேன். விமர்சனங்களையிட்டு நான் அலட்டிக்கொள்வதில்லை.
காரைதீவு மாவடிப்பள்ளி பிரதான வீதி தெரு விளக்குகளை வீதி அபிவிருத்தி அதிகாரசபை பொருத்திய போது எங்களிடம் தெரிவிக்கப்படவில்லை.
பொருத்திய பின்னர் அதற்கான மாதாந்த மின்கட்டணத்தை செலுத்துமாறு எம்மிடம் கேட்டனர்.
எம்மிடம் கேளாமல் எந்த அனுமதியையும் பெறாமல் செய்த வேலைக்கு நாம் கவனம் செலுத்தவேண்டிய அவசியம் இல்லை. இருப்பினும் சபையில் உறுப்பினர் றனீஸ் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அதனைப் பொறுப்பேற்றோம்.
அதனை நாங்கள் வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் கேட்டபோது, அவர்கள் அது தமக்குச் சொந்தமான வேலையென்றும் அதை நாங்கள் தடுக்கப்போகின்றோம் என்ற தோரணையிலும் கருத்து வெளியிட்டனர்.
உண்மையில் இந்த வீதி காரை தீவுக்கோ மாவடிப்பள்ளிக்கோ மட்டும் உரித்தானதல்ல. நாட்டின் சகல பாகங்களிலும் இருந்து வரும் சகல பயணிகளுக்குமானது.
எனவே மக்கள் மற்றும் பயணிகள் நன்மை கருதி உடன்பட்டோம் என்றார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)