
posted 14th March 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பு
இலங்கையில் முஸ்லிம் மக்களால் அனுஷ்டிக்கப்படவிருக்கும் புனித நோன்பு காலத்தை முன்னிட்டு பேரீச்சம்பழங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த விசேட பண்டங்கள் வரியைக் குறைப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க உத்தரவிட்டுள்ளமைக்கு சம்மாந்துறை பிரதேச சபையில் பெரு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்மாந்துறை பிரதேச சபையின் 60 ஆவது மாதாந்த அமர்வில் உரையாற்றிய ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ஏ. யூசுப்லெவ்வை, ஜனாதிபதியின் இந்த உத்தரவு தொடர்பில் சபையில் விளக்கி நன்றி தெரிவித்ததுடன், இது தொடர்பிலான நன்றிப் பிரேரணை ஒன்றை நிறைவேற்றி ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.
உறுப்பினர் யூசுப் லெவ்வை இந்த விடயம் தொடர்பில் சபை அமர்வில் உரையாற்றுகையில் பின்வருமாறு கூறினார்.
முஸ்லிம் மக்கள் அனுஷ்டிக்கும் புனித ரமழான் நோன்பு இம்மாதம் 23 ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 21 திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளது.
இதனிமித்தம் தினமும் நோன்பு திறப்பதற்கான பேரீச்சம் பழங்களுக்கு விதிக்கப்பட்ட விசேட பண்டங்கள் வரியை கிலோ ஒன்றுக்கு 200 ரூபாவிலிருந்து, ஒரு ரூபாவாகக் குறைப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க உத்தரவிட்டுள்ளார்.
அரசாங்கங்கள், நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், தொண்டர் அமைப்புக்கள் மற்றும் நலன் விரும்பிகளிடமிருந்து எவ்வித அந்நியச் செலவாணியும் தொடர்புபடாமல் பரிசாக அல்லது நன்கொடையாக அனுப்பப்படும் பேரீச்சம் பழங்களுக்கே இந்த வரிச் சலுகை வழங்கப்பட்டுள்ளது. ஜனாதியின் இந்த நடவடிக்கை முஸ்லிம் மக்களுக்கும், முஸ்லிம்களின் ஐம்பெரும் கடமைகளுள் ஒன்றான ரமழான் நோன்பு அனுஷ்டிப்புக்கும் கௌரமளிக்கும் செயற்பாடாகும்.
எனவே, இது விடயத்தில் ஜனாதிபதிக்கு நாம் பெருநன்றி தெரிவிப்பதுடன், சபை மூலம் இந்த நன்றிப் பிரேரணையை ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்குமாறும் கோருகின்றேன்” என்றார்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)