
posted 30th March 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
சிங்கள மொழியும், இனமும் இருந்தனவா? அறியுங்கள். பின்பு கதைப்போம். தொல்பொருள் திணைக்களமே விலகிப்போ
வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலயம் அழிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று வியாழக்கிழமை வவுனியாவில் நடக்கும் போராட்டத்துக்கு தமிழ் மக்கள் கூட்டணி ஆதரவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அந்தக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான க. வி. விக்னேஸ்வரன் நேற்று (28) அனுப்பிய அறிக்கையில்,
வவுனியா வெடுக்குநாறிமலை ஆதிசிவன் கோயில் அழிக்கப்பட்டமை மற்றும் கடந்த சில மாதங்களாக குருந்தூர் மலை, கன்னியா உட்பட பல வணக்கத் தலங்களில் சிவ வழிபாடு தடுக்கப்பட்டு குறித்த இடங்களை பௌத்த மரபுரிமைகளாக - விகாரைகளாக மாற்ற தொல்பொருள் திணைக்களமும், படையினரும் சேர்ந்து நடவடிக்கையில் இறங்கியுள்ளமை ஆகியவற்றை நாங்கள் வெகுவாகக் கண்டிக்கின்றோம்.
முக்கியமான ஒரு விடயத்தை அரசாங்க தொல்பொருள் திணைக்களத்தினரும், படையினரும் மறந்து விட்டார்கள். தற்போது இந்துக்கள் வணங்கும் வணக்கஸ்தல வளாகங்களில் பௌத்த எச்சங்கள் இருப்பது உண்மை என்றால் அவை தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்த காலத்தவையாக இருக்க வேண்டும். அதை முதலில் திணைக்களம் ஏற்றுக்கொள்ள வேண்டும். தமிழ் மக்கள் தமது பௌத்த சின்னங்களை பாதுகாக்க வேண்டும் என்று எண்ணாத நிலையில் சிங்கள பௌத்தர்கள் இந்தக் காரியத்தில் இறங்கியமை, குறித்த சின்னங்கள் இருக்கும் இடங்கள் சிங்கள - பௌத்த காலத்துக்கு உரியவை என்று காட்டுவதற்கேயாகும். ஆனால், சிங்கள - பௌத்தர்கள் குறித்த இடங்களில் என்றென்றுமே வாழ்ந்ததில்லை. தமிழ் பௌத்த கால எச்சங்களை சிங்கள பௌத்த கால எச்சங்கள் என்று காட்டத் தொல்பொருள் திணைக்களம் முயற்சிக்கும் அவர்களின் அந்த கரவான நடவடிக்கை உடனே நிறுத்தப்படவேண்டும்.
முதலில் குறித்த எச்சங்கள் எந்தக் காலத்தவை என்று அறிந்து அந்தக் காலத்தில் சிங்கள மொழியும், சிங்கள இனமும் இருந்தனவா என்று அறிந்த பின்னர், இவை பற்றி தமிழ் மக்களுடன் சேர்ந்து நடவடிக்கைகளில் ஈடுபடலாம். அவை தமிழ் பௌத்த கால சின்னங்கள் எனில் மாகாண சபைகளுக்கூடாகவே இவை பற்றி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். தான்தோன்றித்தனமாக மத்திய அரசின் கீழான தொல்பொருள் திணைக்களம் தமது தேவையற்ற இன ரீதியான மத ரீதியான இவ்வாறான செயல்களை உடன் நிறுத்த வேண்டும்.
எமது மக்கள் யாவரும் ஒன்று கூடி கண்டிப்பு செலுத்தும் போராட்டத்துக்கு நானும் எனது கட்சியான தமிழ் மக்கள் கூட்டணியும் எமது மனமார்ந்த ஆதரவைத் தெரிவித்துக் கொள்கின்றோம் என்றுள்ளது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)