காலத்தின் தேவை

உள்ளூர் அதிகார சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக பலர் முண்டியடித்துக் கொண்டு தேர்தல் களத்தில் குதித்துள்ளனர்.இவர்களில் சிலர் சுயநலன் பாராது சமூகப் பணியாற்றியவர்கள். இன்னும் சிலர் எதிர்கால அரசியலை இலக்காகக் கொண்டு சமூகப் பணியில் தலைகாட்டியவர்கள். சிலர் சமூகத்திற்கும் தமக்கும் எவ்வித தொடர்பும் இன்றி இருந்தவர்கள். இவ்வாறான நிலையில் வாக்காளர்களாகிய பொது மக்கள் தமது தேவைகளை நன்கறிந்து உண்மைத்துவமான முறையில் சேவையாற்றக் கூடியவர்களை தேர்ந்தெடுக்க வேண்டியது காலத்தின் தேவையாகும்.

இவ்வாறு முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மு. இராஜேஸ்வரன் குறிப்பிட்டார்.

உள்ளூர் அதிகார சபைக்கான தேர்தல் தொடர்பில் ஊடகங்களுக்கு அவர் கருத்து தெரிவிக்கையில்,

எந்த தேர்தலாயினும் அதனை உரிய காலத்தில் நடாத்த வேண்டும். இதுவே ஜனநாயக வழிமுறையாகும். இதனை விடுத்து தேர்தல்களை உரிய காலத்தில் நடத்தாமை, தேர்தல்களை ஒத்தி வைத்தல், பிற்போட முனைதல் என்பன ஜனனாயக விரோத செயற்பாடாகும்.

உள்ளூர் அதிகார சபைக்கான தேர்தலை பிற்போடுவதற்காக திரை மறைவில் பல முயற்சிகள் இடம்பெற்ற வண்ணமுள்ளது. இருப்பினும் தேர்தல் உரிய தினத்தில் நடைபெறுமாயின் தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் இத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சமூகப் பெறுமானத்தையும், அவர்களின் கடந்த காலச் செயற்பாடுகளையும் நன்கு அலசி ஆராய்ந்து பொருத்தமானவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டியது பொது மக்களின் தலையாய கடமையாகும்.

எனவே தமிழ்த் தேசியத்தின் இருப்புக்கு பாதகம் ஏற்படாத வகையில் எமது மக்கள் பொருத்தமானவர்களை இனங்கண்டு வெற்றி பெற வைக்க வேண்டுமென்று கேட்டுள்ளார்.

காலத்தின் தேவை

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)