
posted 11th February 2023
இந்திய - இலங்கை நட்புறவுக்காக அமைக்கப்பட்ட கலாசார மத்திய நிலையம் இன்று சனிக்கிழமை (11) காலை 9 மணிக்கு திறந்து வைக்கப்படவுள்ளது. அத்துடன், இன்று மாலை நாட்டின் 75ஆவது தேசிய சுதந்திர தினமும் அங்கு கொண்டாடப்படவுள்ளது.
இந்த நிகழ்வில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்த்தன, இந்திய இணை மத்திய அமைச்சர் எல். முருகன் , இந்தியாவை ஆளும் பா. ஜ. கவின் தமிழகத் தலைவர் அண்ணாமலையும் பங்கேற்கவுள்ளனர்.
இந்தியாவின் நிதியுதவில் - சுமார் 120 கோடி ரூபா செலவில் 12 மாடிகளுடன் கொண்டதாக இந்த மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கலாசார நிலையத்தில் 600 பேரை உள்ளடக்கக் கூடியதான திரையரங்கப் பாங்கிலான திட்ட ஏற்பாட்டுடனான மண்டபம், இணையதள ஆராய்ச்சி வசதிகளுடன் கூடிய பல்நோக்கு அமைப்பிலான நூலகம், கண்காட்சி மற்றும் கலைக்காட்சி வெளியிடம், அருங்காட்சியகம், நிறுவன அலகுகள், சங்கீத மற்றும் அதனுடன் இணைந்த இசைக் கருவிகள், நடனங்கள், மொழிகள் உள்ளிட்ட வகுப்புக்களை நடத்துவதற்கான வசதிகளும் உள்ளன.
இதேவேளை, இந்நிகழ்வு முடிந்த பின்னர் மாலை 5 மணிக்கு இலங்கையின் சுதந்திர தின நிகழ்வுகள் இந்த மண்டபத்தில் நடைபெறும். இதில் 5 மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் சுதந்திர நாள் ஊர்தி பவனி நடைபெறும். இரவு 7 மணிக்கு முற்றவெளி மைத்தானத்தில் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.