
posted 7th March 2023
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
மட்டக்களப்பு - பொலனறுவை எல்லைப் பகுதியான தமிழ் மக்களுக்கு சொந்தமான மயிலந்தனைமடு மேச்சல்தரை பகுதியில் சிங்கள மயப்படுத்தலுக்காக திட்டமிடப்பட்ட மாதுறு ஓயா வலதுகரை திட்டத்திற்கு தமிழ் பிரதேசத்தின் ஒரு அங்குலம் நிலம் கூட வழங்க முடியாது. நிதி உதவி வழங்குகின்ற சர்வதேச நிறுவனங்கள் இதனை நிறுத்தவேண்டும் அல்லது அலுவலகங்களுக்கு முன்னால் போராட்டம் நடாத்தப்படும் எனத் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பொன்னம்பலம் கஜேந்திரகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தேசிய அமைப்பாளர் த. சுரேஸ் மற்றும் கட்சி ஆதரவாளர்களுடன் மயிலந்தனை மேய்ச்சல் தரை பகுதிக்கு நேற்று முன் தினம் ஞாயிற்றுக்கிழமை விஜயம் மேற்கொண்டு பண்ணையாளர்களை சந்தித்து அவர்களின் பிரச்னைகளை கேட்டறிந்தனர்.
இதன் பின்னர் அவர் மேலும் தெரிவிக்கையில்;
மட்டக்களப்பு - பொலனறுவை எல்லைப் பிரதேசமான மயிலந்தனைமடு பெரிய மாதந்தனை பிரதேசத்தில் மேச்சல்தரை பகுதியில் கால்நடை பண்ணையாளர்களை அச்சுறுத்தி மாடுகளை வெட்டி அவர்களை பரம்பரையான மேய்ச்சல்தரையில் இருந்து ஓட வைப்பதற்காக முழுமூச்சிலான திட்டம் கடந்த இரண்டு வாரத்தில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பண்னையாளர்களின் இந்த பிரச்னைகளை அவர்கள் பல இடங்களில் முறையிட்டனர். ஆனால் எந்த ஒரு இடத்திலும் அவர்களுக்கு முடிவு இல்லாமல் தொடர்ச்சியாக அவர்களின் வாழ்வே கேள்விக்குறியாகின்ற நிலை ஏற்பட்டுள்ளது
மதுறு ஓயா வலது கரையை சிங்களமயமாக்குதலுக்கான நோக்கத்தோடு இந்த பண்ணையாளருக்கு எதிராக நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்பது நன்றாக விளங்குகின்றது.
இதேவேளை கிழக்கு மாகாண ஆளுநர், வனவளதிணைக்களம், மகாவலி அபிவிருத்தி சபை போன்ற அனைத்து கட்டமைப்புக்களும் இங்குள்ள மேய்ச்சல்தரைக் காணிகளை அபகரிப்பதற்கான நடவடிக்கையை உறுதியாக இருக்கின்றனர்.
எனவே, தமிழ்ப் பிரதேசத்தை இனச் சுத்திகரிப்பு நடத்துவதற்கும் சிங்களக் குடியேற்றத்தை நடத்தி இங்குள்ள மக்களைப் பட்டினியில் சாவடிக்கின்ற நடவடிக்கையான மதுறு ஓயா அபிவிருத்திக்கு நிதி உதவி வழங்கும் சர்வதேச நிறுவனங்களே நீங்களும் தமிழ் இன சுத்திகரிப்புக்கு உடந்தையாக இருக்கின்றீர்கள்.
எனவே உங்களுக்கு இருக்கின்ற நிதியை எந்தவிதமான நிபந்தனையும் போடாமல் சிங்கள இனவாத சித்தாந்தத்திற்கு விலை போகின்றதற்கு இந்த நிதி பயன்படுத்தப்படுகின்றது என தெரிந்துவைத்திருக்க வேண்டும். இதை தடுத்து நிறுத்த முன்வரவேண்டும் அல்லது உங்கள் அலுவலகங்களுக்கு முன்னால் நாங்கள் போராட்டங்களை செய்வதை தவிர வேறு வழியில்லை.
கோட்டாபய காலத்தில் சந்தித்து இந்த விடயங்களை கூறி பாராளுமன்றத்தில் பெரிதுபடுத்தி பேசியபோது தற்காலிகமாக நிறுத்துவதாக உத்தரவாதம் தந்தாலும் கூட இன்று முன்னரைவிட தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இன்று ரணில் விக்கிரமசிங்க செல்லப்பிள்ளையாக நீங்கள் கருதி காப்பாற்றுகின்ற வேளையில் அவரின் ஆட்சி காலத்தில் இந்த இனவாத தமிழ் விரோதச் செயற்பாடுகள் அனைத்தும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்பது இன்று யதார்த்தம்.
எனவே நிதி உதவி செய்யும் சர்வதேச நிறுவனங்கள் உடனடியாக கொடுக்கக்கூடிய நிதி உதவிகளை நிபந்தனைகளை போட்டு இங்குள்ள மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துகின்றதை செய்யவேண்டும்.
இந்த திட்டம் மக்களுக்குரிய அபிவிருத்தி வேலைத்திட்டமாக இருக்க வேண்டுமே தவிர இந்த மக்களை அப்புறப்படுத்தி அவர்களின் வாழ்வாதாரத்தை இல்லாமல் செய்து ஒரு இன அழிப்புக்கு வழிவகைக்கின்ற முறையில் அமையக்கூடாது. இதையும் அம்பலப்படுத்துவோம். எனவே இந்த விடயங்களைக் கருத்தில் கொண்டு சரியான வகையில் இங்கே பரம்பரையாக இருக்கக்கூடிய தமிழர் தாயத்தில் இருக்கக்கூடிய உண்மையான சொந்தக்காரர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்றார்.

மேலதிக செய்திகள் | Additional News