
posted 5th March 2023
உடற்பயிற்சியில் ஈடுபடும் மாணவர்களின் தொகையும் வெகுவாக குறைந்துள்ளதையும் நாங்கள் நோக்கக்கூடியதாக இருக்கின்றது. மேலதிக கற்றலில் காலை மாலையில் ஈடுபடுவதாலேயே இந்நிலை. இதனால் உடல், உள ரீதியாக மாணவர்கள் பாதிப்புகளுக்கு தள்ளப்படுகின்றனர் என பாடசாலை அதிபர் திரு.எஸ்.கே. பிகிராடோ இவ்வாறு தெரிவித்தார்.
பேசாலை மன். சென். பற்றிமா மகா வித்தியாலய தேசிய பாடசாலை வருடாந்த மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிக்கு தலைமை வகித்து உரையாற்றுகையில்,
பாடசாலையானது மாணவர்களின் கல்வியை நோக்கி முன்னெடுத்துச் செல்லுகின்றது. கல்வியின் நோக்கம் மாணவனிடமிருந்து முழு மனிதனின் வெளிக் கொணர்வே கல்வியின் நோக்கமாகும்.
மாணவனின் வெளிக் கொணர்வாக மாணவன் உடல் ரீதியாகவும் உளரீதியாகவும் தங்களை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும். இதனூடக அவர்கள் தங்கள் அறிவையும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.
மாணவர்கள் போஷாக்கு உணவுகளை உண்ண வேண்டும். நாளாந்தம் உடற் பயிற்சிகளிலும் அவர்கள் ஈடுபட வேண்டும்.
இன்றைய காலக்கட்டத்தில் பொருளாதார நெருக்கடிக் காரணமாக போஷாக்கு தன்மையில்லாத மாணவர்களின் தொகை அதிகரித்து வருகின்றன.
இவ்வாறு உடற்பயிற்சியில் ஈடுபடும் மாணவர்களின் தொகையும் வெகுவாக குறைந்துள்ளதையும் நாங்கள் நோக்கக் கூடியதாக இருக்கின்றது.
இதற்கு காரணம் காலை 6 மணியிலிருந்து 7.30 மணி வரை மேலதிக வகுப்புக்களும் பின் பாடசாலை கற்கையிலும், இதன் பிற்பாடு மாலை 3 மணி தொடக்கம் 6 - 7 மணி வரை மேலதிக கற்றலிலும் ஈடுபடுவதால் இவர்கள் உள ரீதியாகவும் உடல் ரிதியாகவும் பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றனர்.
இதை பெற்றோர் முக்கியமாக தங்கள் கவனத்தில் கொண்டிருக்க வேண்டும். இவ்வாறான செயல்பாடுகள் தொடருமானால் பிள்ளைகள் நெறி தவறிச் செல்லும் வாய்ப்புக்ளும் அதிகம் காணப்படுகின்றது.
இதனால் பாடசாலையும், குடும்பங்களும் பாதிப்புகளுக்கு தள்ளப்படுகின்றன.
இதனால் ஆசிரியர்களும், பெற்றோர்களும் பிள்ளைகளை சரியான முறையில் நெறிப்படுத்த வேண்டும்.
அறிவை மேம்படுத்த வேண்டுமானால் புலன்களுக்கும், தசைகளுக்கும் நன்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.
ஆகவே, மாணவர்கள் இணைப்பாட விதானத்திலும், கற்றல் செயல்பாட்டிலும் இணைந்து ஒன்றாக முன்னெடுக்கப்பட வேண்டும்.
பாடசாலை வகுப்பரையிலுள்ள நிகழ்ச்சி திட்டங்களுக்கு மேலாக இணைப்பாட விதான நிகழ்ச்சி திட்டங்களையும் மாணவர்களுக்கு புகட்டி வருகின்றோம்.
இந்த இணைப்பாட விதான திட்டத்தில் பிள்ளைகள் நல்ல பண்புகளையும், நல்ல மன நிலையிலும் இருக்க அவர்கள் வளர்க்கப்படுகின்றனர்.
இதன் ஒன்றாகவே இன்றைய இந்த விளையாட்டுப் போட்டிகளின் மூலமாக மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.
மாணவர்கள் தாங்களாகவே சுயமாக செயல்பட்டதை கடந்த சில தினங்களாக நாங்கள் அவதானித்துள்ளோம். நல்ல மனப்பாங்குடன் இந்த விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டதும் பாராட்டப்பட வேண்டியதொன்றாகும்.
விளையாட்டு மூலம் மாணவர்கள் சட்டங்கள் மற்றும் சவால்களுக்கு முகம் கொடுப்தையெல்லாம் கற்றுக் கொள்ளுகின்றார்கள்.
வெற்றித் தோல்வியை சமமாக மதிக்கின்றனர். தலைமைத்துவத்தில் மேன்மை அடைகின்றனர். குழுக்களாக இயங்கும் பண்பையும் தெரிந்து கொள்ளுகின்றனர்.
இதன் மூலம் இவர்கள் எதிர்காலத்தில் ஒரு நற் பிரஜைகளாக வளர்த்தெடுக்கப்படுகின்றார்கள் என இவ்வாறு தெரிவித்தார்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)