
posted 31st March 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
ஆதிசிவன் ஐயனார் ஆலய கட்டமானம் பற்றி கட்டளை வழங்குக - சட்டத்தரணிகள்
குருந்தூர்மலை பகுதிக்கு நீதிவான் நேரில் வந்து அங்கு கட்டுமானங்கள் இடம்பெறுகின்றனவா என்பதை பார்வையிட்டு கட்டளை வழங்கவேண்டும் என்று ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தினர் நீதிமன்றில் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்.
முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையில் நீதிமன்ற கட்டளையை மீறி பௌத்த விகாரை அமைக்கும் பணிகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது என்று குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயம் சார்பில் கடந்த 02.03.2023அன்று நீதிமன்றில் மன்றில் முறையீடு ஒன்று செய்யப்பட்டது.
இந்நிலையில் குருந்தூர்மலை விவகாரத்தில் அவ்வாறு நீதிமன்றக்கட்டளை மீறப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் மற்றும் தொல்லியல் திணைக்கள தரப்பினர் 30.03.2023 ஆம் திகதியன்று நீதிமன்றில் தோன்றி தமது அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும் என்று முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் ரி. சரணராஜா உத்தரவிட்டிருந்தார்.
இதற்கமைய, இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
தொல்லியல் திணைக்களம் சார்பில், தொல்லியல் திணைக்களப் பணிப்பாளர்நாயகம் அனுரமானதுங்க உள்ளிட்ட குழுவினரும், பொலிஸாரும் மன்றில் முன்னிலையாகியிருந்தனர்.
குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகம் சார்பில் முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், கந்தையா சிவநேசன், சமூக ஆர்வலர் ஜூட் நிக்சன் உள்ளிட்டவர்கள் மன்றில் முன்னிலையாகியிருந்தனர்.
இதன்போது, தமது தரப்பில் மூத்த சட்டத்தரணிகளும் அதிகாரிகளும் நீதிமன்றுக்கு வர முடியாத நிலை உள்ளதால் தவணை வழங்குமாறு பொலிஸாரும், தொல்பொருள் திணைக்களமும் நீதிவானிடம் கோரினர்.
இந்நிலையில் குருந்தூர்மலைப் பிரதேசத்திலே நீதிமன்றக் கட்டளையை மீறி பௌத்த விகாரைக்குரிய கட்டுமானப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதானது, நீதிமன்றத்தை அவமதித்து இடம்பெறுகின்ற செயல்பாடு என, குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயம் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியிருந்தனர். அத்துடன், பொதுமக்கள் நீதிமன்றின் மேல் வைத்திருக்கின்ற நம்பிக்கையைக் கேள்விக்கு உள்ளாக்கும் செயல்பாடு என்றும் அவர்கள் வாதிட்டனர்.
மேலும், குருந்தூர் மலைப் பிரதேசத்திற்கு நீதிவான் நேரடியாக வருகைதந்து அங்கு இடம்பெறும் விடயங்களை பார்வையிட்டு, ஏற்கனவே இருந்த நிலையை விட புதிதாகக் கட்டடங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றனவா, அல்லது மேம்படுத்தல் செய்யப்பட்டிருக்கின்றனவா என்பதனைப் பார்வையிட்டு, அதனடிப்படையில் வலிதான கட்டளை ஒன்றை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தொல்லியல் திணைக்களம் மற்றும், பொலிஸார் அறிக்கை சமர்ப்பிப்பதற்காக ஏப்ரல் 27ஆம் திகதிக்கு வழக்கை ஒத்தி வைத்தார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)