
posted 6th March 2023
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்த அரசு தாமதமின்றி முன்வர வேண்டும் என்று ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தவிசாளர் ஏ.எல். அப்துல் மஜீட் தெரிவித்தார்.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா அவர்களின் தலைமையில், ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான சட்ட முதுமாணி அல் - ஹாஜ் ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியான பங்குபற்றுதலுடன் ஏறாவூரில் நடைபெற்ற "தாருஸ்ஸலாம்" கிளை திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் தவிசாளர் மஜீட் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்வரும் மார்ச் 19ம் திகதி நடைபெரும் என எதிர்பார்க்கப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடாத்த விடாது தடுக்கின்ற அரசியல் முடிவை செயற்படுத்துவதற்காக இன்றைய ஜனாதிபதி நன்கு திட்டமிட்டு காய்களை நகர்த்திக்கொண்டிருக்கின்றார்.
வெளியான உயர் நீதிமன்றத்தின் இடைக்கால தீர்ப்பில், தேர்தல் நடாத்துவதற்கான நிதியை விடுவிக்குமாரு நிதியமைச்சின் செயலாளருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை தாமதமின்றி அமுல்படுத்த அரசு முன்வர வேண்டும் என ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தவிசாளர் அப்துல் மஜீட் தெரிவித்துள்ளார்.
நாட்டை மாறி மாறி ஆட்சி செய்து வந்த அரசுகள் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை கால வரையறையின்றி பிற்போட்டு வந்த வரலாறுகளை பின்னோக்கிப் பார்க்க முடியும்.
1970ம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த ஶ்ரீமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான அரசாங்கம் 5 வருடங்கள் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடாத்தாமல் பிற்போட்டது. அதேபோன்று 77ல் ஆட்சிக்கு வந்த ஜே.ஆர். ஜயவர்த்தன அரசாங்கம் 88ம் ஆண்டு வரையும், பின்னர் ஆட்சிக்கு வந்த பிரேமதாச அரசாங்கம் 94ம் ஆண்டு வரையும் தேர்தலைப் பிற்போட்டு வந்தது. இறுதியாக 2018ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10ம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இடம்பெற்றது. 5 வருடங்கள் பூர்த்தியாகும் நிலையிலும் தேர்தலை நடாத்த இன்றைய அரசு, அரசியல் காரணங்களுக்காக மக்களின் ஜனநாயக உரிமையான தேர்தலை பிற்போடுவதற்கான உச்ச கட்ட முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றமையை அவதானிக்க முடிகின்றது.
சிறுபான்மை இனங்களை பொறுத்தவரை, அதிலும் குறிப்பாக சிறுபான்மையிலும் சிறுபான்மையாக இருக்கின்ற முஸ்லிம்களாகிய நமக்கு உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மிகவும் முக்கியமானதாகும். நமது வரலாற்று வாழ்விடங்களில் அமைந்துள்ள உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக நமது மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்வதற்கு இது முக்கியமான ஒன்றாகும். பெரும்பான்மையான முஸ்லிம் உள்ளூராட்சி சபைகளை நாம் கைப்பற்றுவதன் மூலம் ஒன்று திரண்ட அரசியல் சக்தியாக நமது தேசியத் தலைமையின் கீழ் ஒன்றுதிரல்வதன் மூலம் நமது தேசியத்தையும் சுயநிர்ணய உரிமையையும் நிலைநாட்ட முடியும். எனவே முஸ்லிம் மக்கள் நடைபெறவிருக்கும் தேர்தல் முலம் ஒருமுகப்படுத்துவதற்கு எமது தலைமையின் கீழ் ஒன்றுபட வேண்டும். என அப்துல் மஜீட் தெரிவித்தார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)