
posted 3rd March 2023
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
“கல்முனை மாநகர சபையில் இடம்பெற்றுள்ள நிதிக்கையாடல் தொடர்பில் உரிய நிருவாக மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், மக்களால் நிராகரிக்கப்பட்ட சிலர் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, உண்மைக்குப் புறம்பாக விஷமத்தனமான பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றனர். இதனை வன்மையாகக் கண்டிக்கின்றோம். இவ்வாறு கல்முனை மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றகீப் விசனம் வெளியிட்டார்.
மாநகர சபை மேயர் அலுவலகத்தில் அவர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் மேற்கெண்டவாறு கூறினார்.
கடந்த வியாழன் மாலை இடம்பெற்ற இந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேயருடன் உறுப்பினர்களான சட்டத்தரணி ரொஷான் அக்தர், ஏ.சீ.ஏ. சத்தார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி றகீப் தொடர்ந்து இது விடயமாக கருத்து வெளியிடுகையில் பின்வருமாறு கூறினார்.
“கல்முனை மாநகர சபையில் இடம்பெற்றுள்ள நிதிக்கையாடல் மோசடி விவகாரம் தொடர்பில் நிருவாக மற்றும் சட்டப்படியான அத்தனை நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டே வருகின்றன. இந்த மோசடியில் ஈடுபட்ட இரு ஊழியர்கள் உடனடியாக அமுலுக்குவரும் வகையில் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுளள்துடன், தலைமறைவாகியுள்ள அவர்களிருவரும் வெளிநாட்டுக்குத் தப்பி செல்ல முடியாதவாறும் நடவடிக்ககைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்த விவகாரம் தொடர்பில் மாநகர சபையில் உயர் மட்டக்குழு ஒன்றும் விசாரணைகளையும், நடவடிக்கைகளையும் எனது ஆலோசனையில் முன்னெடுத்து வருகின்றது. இந்த விவகாரத்தில் மேயராகிய நானும், சபை உறுப்பினர்களும் மிகவும் வெளிப்படைத் தன்மையுடன் செயற்பட்டு வருகின்றோம்.
ஆனால், மக்களால் நிராகரிக்கப்டப்ட சில விசமிகள், எம்மீது கொண்ட அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக சில தினங்களாக இந்த விவகாரத்துடன் சம்பந்தப்படுத்தி விஷமத் தனமான பிரச்சாரங்களை தொடுத்து வருவது கண்டிக்கத் தக்கதாகும். தம்மைப் புனிதர்களாகவும், கல்முனையைக் காக்க வந்தவர்களாகவும் மூடிகளைப் போட்டுக் கொண்டு முகநூல்களிலும், வெளிப்பரப்பிலும் இவர்கள் இத்தகைய விசமப்பிரச்சாரங்சகளை முன்னெடுத்து வுருகின்றனர்.
முழங்காலுக்கும் உச்சம் தலைக்கும் முடிச்சுப் போட முயலும் இப் பேர்வழிகள் என்னையும், உறுப்பினர்களையும் மட்டுமன்றி முஸ்லிம் காங்கிரஸின் தலைவரையும், பிரதேச முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் அவர்களையும் கூட சம்பந்தப்படுத்தி தமது விஷமத்தன பிரச்சாரத்தை செய்துவருவதை அவதானித்து வருகின்றோம்.
இத்தகைய இழி செயலில் ஈடுபடுபவர்கள் தம்மைப் புனிதர்களாகவும், ஏதோ கல்முனையைக் காக்க வந்தவர்களாகவும் காட்டிக்கொள்ள முனைவதுதான் வேடிக்கையாகும்.
நாம் மக்களுக்காக எமது கடமைகளையும் பொறுப்பேற்று மனச் சாட்சியுடன் செயற்பட்டு வருகின்றோம். மிகப் புனிதமாகவும், அமானிதமாகவும் எமது செயற்பாடுகளை முன்னெடுக்கின்றோம்.
இதனால் தான் எம்மீது சேறு பூசுவதற்கு சிலர் முயற்சிக்கின்றனர். ஆனால் மக்கள் தெளிவாகவேயுள்ளனர். எவ்வாறிருப்பினும் நடைபெற்றுள்ள நிதிக்கையாடல் மோசடி விடயத்தில் வெளிப்படைத் தன்மையுடன் கண்டிப்பான எமது செயற்பாடுகள் தொடரும்” என்றார்.
உறுப்பினர்களான சட்டத்தரணி ரொஷான் அக்தர், ஏ.சீ.ஏ. சத்தார் ஆகியோரும் கருத்து வெளியிட்டனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)