
posted 15th March 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
அம்பாறை மாவட்டத்திலும் எதிரொலித்த போராட்டம்
அரசாங்கத்தின் புதிய வரிக்கொள்கையை மீளப் பெறுமாறும், மக்களின் ஜனநாயக வாக்களிப்பு உரிமைக்கு முட்டுக்கட்டை போட வேண்டாமென வலியுறுத்தியும், மேலும் பல கோரிக்கைகளை முன்வைத்தும் 40 இற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இன்று (15) முன்னெடுத்த வேலை நிறுத்தப் போராட்டம் அம்பாறை மாவட்டத்திலும் எதிரொலித்தது.
இதனால் மாவட்டத்தில் அத்தியாவசிய சேவைகள், பாடசாலைகள், தபாலக சேவைகள் என்பன முடங்கி மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கினர். குறிப்பாக வைத்தியர்கள், சிற்றூழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டதால் அவசர சிகிச்சைப் பிரிவின் சேவைகள் தவிர வைத்திசாலைகளில் ஏனைய சேவைகள் முடங்கிய அதேவேளை, தபால் சேவைகள் அத்தியாவசிய சேவையாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த போதிலும் அம்பாறைம மாவட்டத்தில் பிரதம தபாலகங்கள் உப தபாலகங்கள் என்பன மூடப்பட்டிருந்தன.
மேலும், அரச வங்கியான மக்கள் வங்கி மூடப்பட்டிருந்த நிலையில் தனியார் வங்கிகள் இயங்கியதை அவதானிக்க முடிந்தது.
இதேவேளை இந்த மாவட்டத்தின் பாடசாலை அதிபர்களும், ஆசிரியர்களும் இத்தொழிற்சங்கப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சுகவீன விடுமுறையில் நின்றதாலும், மாணவர்கள் வருகையின்மையாலும் பாடசாலைகள் வெறிச்சோடிக்கிடந்தன.
மேலும், ஒன்றிணைந்த அதிபர், ஆசிரியர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டில் கல்முனை நகர் சமாதான சதுக்கம் முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றும் நேற்று (14) நடைபெற்றது.
சுமார் ஒரு மணி நேரம் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அதிபர்கள், ஆசிரியர்கள் அரசுக்கு எதிராகப் பல கோஷங்களை எழுப்பியதுடன், ஆசிரியர்கள், மாணவர்கள் எதிர் நோக்கும் அவலங்களை வெளிப்படுத்தும் சுலோக அட்டைகளையும் ஏந்தியிருந்தனர்.
- மக்களின் ஜனநாயக உரிமையைப்பறிக்காதே
- கொப்பி இல்லை பேனை இல்லை, புத்தகத்திற்கும் பேப்பரில்லை
- பெற்றோர் மீது சுமையை சாட்டாதே
- வங்கித்திருடன் நாட்டை ஏப்பம்
- திருடர் கூட்டத்தை ஓட்டுவோம்
- நாட்டை சுரண்டுவோர் அவையினில், நாட்டை உயர்த்துவோர் வீதியில்
- பேராட்டத்திற்கு அடக்கு முறை, ஜனநாயகத்திற்க சாவு மணி
- வங்கித்திருடன் அரசனானான் நாட்டைத்தின்று ஏப்பம் விட்டான்
என்பன போன்ற கோஷங்களை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் எழுப்பிய அதேவேளை, பல கண்டன வாசகங்களைக் கொண்ட சுலோக அட்டைகளையும் ஏந்தியிருந்தனர்.
இலங்கை ஆசிரிய சேவை சங்க தேசிய உதவிச் செயலாளர் ஏ. ஆதம்பாவா, இலங்கை அதிபர், ஆசிரியர் சங்க இணைப்பாளர் ஐ.எல்.எம். ஜின்னா, இலங்கை ஆசிரியர் சங்க வலயப் பொறுப்பாளர் சாஹிர் ஹம்சா முகைடீன், அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்க செயற்குழு உறுப்பினர் ரீ.எம்.எம். ஹம்ரத் உட்பட முக்கிய ஸ்த்தர்கள் பலரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)