
posted 1st February 2023
இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதற்கு நாடு தயாராகிவருகின்றது.
எதிர்வரும் 4 ஆம் திகதி (04.02.2023) இடம்பெறவிருக்கும் நாட்டின் சுதந்திர தின பிரதான நிகழ்வு தலைநகரான கொழும்பில் இடம்பெறவிருக்கின்றது.
அதேவேளை நாட்டில் மாவட்ட செயலகங்கள் (கச்சேரி) பிரதேச செயலகங்கள் உட்பட அரச நிறுவனங்களிலும் சுதந்திர தின நிகழ்வுகள் பரவலாக இடம்பெறவுள்ளன.
குறிப்பாக சுதந்திர தினத்தையொட்டிய விசேட மத வழிபாடுகள், மர நடுகை சிரமதான மற்றும் இரத்ததான நிகழ்வுகளும் அன்றைய தினம் இடம்பெறவுள்ளன.
மேலும், நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தையொட்டி இன்று பெப்ரவரி முதலாம் திகதி முதல் ஒரு வாரகாலத்திற்கு
அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியைப் பறக்க விடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதுடன், அது தொடர்பான சுற்றறிக்கை பொது நிருவாக உள் நாட்டலுவல்கள் அமைச்சினால் வெளியிடப்பட்டுமுள்ளன.
இந் நிலையில் தலைநகர் கொழும்பில் நடைபெறவிருக்கும், ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க தலைமையிலான பிரதான சுதந்திர தினக் கொண்டாட்ட நிகழ்வை இலங்கை தமிழரசுக்கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, சுதந்திர மக்கள் காங்கிரஸ், கத்தோலிக்க திருச்சபை என்பன புறக்கணிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்துடன் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனம் செய்துள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் சுதந்திர தினத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ் பல்கலைக்கழகத்திலிருந்து கிழக்கு மாகாணம் நோக்கி, வந்தாறு மூலை கிழக்கு பல்கலைக்கழகம் வரை எதிர்ப்புப் பேரணி ஒன்றை நடத்துவதற்கும் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
காணாமற்போனோர் அமைப்பு மற்றும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உட்பட மேலும் பல அமைப்புக்கள் இந்த கரிநாள் பேரணி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
கொழும்பில் நடைபெறவிருக்கும் பிரதான சுதந்திர தின நிகழ்வில் ஐந்து சார்க் நாடுகளின் 5 வெளியுறவுத் துறை அமைச்சர்கள் உள்ளிட்ட உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலிருந்து 3250 விருந்தினர்கள் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கே பணமில்லையெக் கூறும் அரசு, இவ்வளவு பெரும் எடுப்பில் சுதந்திர தினக் கொண்டாட்டத்தை நடத்த வேண்டுமா? எனும் கேள்விகணைகளை எதிர்க் கட்சிகள் தொடுத்துவருவதும் சுட்டிக் காட்டத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)