
posted 12th February 2023
இந்தியாவின் நிதி அனுசரணையில் யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கலாசார மத்திய நிலையம் நேற்று சனி (11) மக்களிடம் கையளிக்கப்பட்டது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இந்நிகழ்வு நேற்று முற்பகல் நடைபெற்றது.
யாழ். கலாசார மத்திய நிலையத்துக்கு, ''சரஸ்வதி மண்டபம்'' என பெயரிடுவதாக நிகழ்வில் உரை நிகழ்த்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்தார்.
இந்திய இணை அமைச்சர் கலாநிதி லோகநாதன் முருகனும் இந்திய இராஜதந்திரிகளும் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.
அத்துடன், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
அபிவிருத்தி பயணத்தில் இலங்கையையும் இந்தியா அரவணைத்து முன்னோக்கிச் செல்லும் என இதன்போது இந்திய இணை அமைச்சர் கலாநிதி லோகநாதன் முருகன் உறுதியளித்தார்.
இந்த நிகழ்வில் இந்திய இணை அமைச்சருக்கு ஜனாபதி ரணில் விக்கிரமசிங்க சார்பில் நன்றி பரிசும் வழங்கப்பட்டது.
600 பேர் வரை அமரக்கூடிய வகையில் 13 தளங்களுடன் யாழ். கலாசார மத்திய நிலையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிலையத்தில், மாநாட்டு மண்டபம், நவீன திரையரங்கு வசதிகள், டிஜிற்றல் நூலகம் ஆகியனவும் உள்ளன.
1.6 பில்லியன் ரூபா செலவில் யாழ். கலாசார நிலையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)