
posted 7th February 2023
13ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதால் ஏற்படும், சாதக பாதகங்களை அறிய பௌத்த துறவிகள் அடங்கிய சர்வமத குழு யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது.
மூன்று பௌத்த பீடங்களைச் சேர்ந்த மகாநாயக்க தேரர்கள் உட்பட 20 பௌத்த துறவிகள் அடங்கிய சர்வமதக் குழு யாழ்ப்பாண சர்வமதக் குழுவின் அழைப்பின் பேரில் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது.
13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் மக்களின் நிலைப்பாடு மற்றும் வடக்கு-கிழக்கில் எவ்வகையான தாக்கத்தைச் செலுத்தும், அதனை நடைமுறைப்படுத்துவதால் ஏற்படும்
சாதக, பாதக விடயங்கள் தொடர்பில் மதத் தலைவர்கள், சமூக மட்ட பிரதிநிதிகளின் கருத்துக்களை அறிவதற்காகவே இந்தக் குழுவினர் யாழ். வந்துள்ளனர்.
இந்த குழுவினர், யாழ்ப்பாணத்தில் உள்ள மதத் தலைவர்கள், சமூக மட்ட பிரதிநிதிகள், வட மாகாண ஆளுநர் மற்றும் வடக்கில் செயற்படும் அரச அதிகாரிகளுடன் சந்திப்பில் ஈடுபடவுள்ளதாக யாழ்ப்பாண சர்வமதக் குழுவின் இணைப்பாளர் அருட்தந்தை டிக்சன் தெரிவித்தார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)