
posted 4th March 2023
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
வெற்றி, தோல்வியை சமமாக மதித்து உங்கள் விளையாட்டு திறமையையும், ஒழுக்கத்தையும் எண்பித்துள்ளீர்கள். இது உங்கள் பாடசாலை அல்லது கிராமத்துக்கு மட்டும் பெருமை அல்ல. மாறாக இது எமது நாட்டுக்கே பெருமையை உண்டுபண்ணும் என 'மெசிடோ' நிறுவன மன்னார் பணிப்பாளர் யாட்சன் பிகிராடோ தெரிவித்தார்.
வியாழக்கிழமை (02) நடைபெற்ற மன்.சென் பற்றிமா மத்திய மகா வித்தியாலய தேசிய பாடசாலை வருடாந்த இல்ல விளையாட்டு போட்டிகளின் இறுதிநாள் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக 'மெசிடோ' நிறுவன மன்னார் பணிப்பாளர் யாட்சன் பிகிராடோ கலந்து கொண்டு இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்;
கடந்த ஒரிரு வருடங்கள் பாடசாலைகளில் கொவிட் மற்றும் பொருளாதார சிக்கல் காரணமாக பாடசாலைகளில் இல்ல விளையாட்டுப் போட்டிகள் நடைபெறாது தடைபட்டுக் காணப்பட்டன.
ஆனால் இவ்வருடம் பாடசாலைகளில் நடைபெற்று வரும் மெய்வல்லுனர் போட்டி மன். சென். பற்றிமா மத்திய மகா வித்தியாலய தேசிய பாடசாலையில் மிக சிறப்பாக நிகழ்த்தப்பட்டதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
இப் பாடசாலை மாணவர்கள் கடந்த காலத்தில் பலதரப்பட்ட சவால்களுக்கு முகம் கொடுத்து வந்தபோதும் மாவட்டம், மாகாணம் மற்றும் தேசிய மட்டங்களிலும் பல சாதனைகளை படைத்து வருவது பெருமைக்குரியது.
ஒரு விவசாயி தான் வளர்க்கும் மரத்தை நன்மையாகவும் அல்லது பயனற்றதாகவும் பாவிக்க முடியும்.
அவன் வளர்க்கும் மரத்திலிருந்து விழும் இலைகளை தனது பயிர்களுக்கு உரமாக பாவித்து மேலும் அப் பயிரை செழிப்படையச் செய்கின்றான் என்றால் அவ் விவசாயிக்கு பெரும் நன்மையாக மாறுகின்றது.
அவ்வாறே பாடசாலை பழைய மாணவர்கள் சென் பற்றிமா நாயகியின் அருள் கொண்டு ஒன்றுபட்டவர்களாக மிகவும் சிறப்பாக இவ்விளையாட்டுப் போட்டியை முன்னெடுத்துச் செல்வதை பார்க்கின்றபோது இப் பாடசாலைக்கு பெருமையை ஈட்டிக் கொடுப்பதில் மகிழ்வாக இருக்கின்றது.
மாணவர்களே நீங்கள் மாவட்ட மட்டத்தில் ஒரு வெற்றிப் பதிவை இடும்போது நான் பேசாலையான் என சொல்லுவீர்கள். மாகாண மட்டத்தில் அல்லது தேசிய மட்டத்தில் ஒரு பதிவை வைக்கும்போது நான் மன்னாரான் அல்லது வட மாகாணத்தான் என சொல்லி பெருமைபடுவீர்கள்.
ஆகவே நீங்கள் ஒரு கிராமத்துக்கு மட்டுமல்ல இந்த நாட்டின் ஒரு சொத்தாக காணப்படுகின்றீர்கள்.
இன்று இங்கு நான் உங்கள் விளையாட்டுக்களை கவனித்தபோது நீங்கள் வெற்றித் தோல்வியை சமமாக மதித்து செயல்பட்டதை கவனித்துக் கொண்டு இருந்தேன்.
இதுதான் ஒரு விளையாட்டு வீரனுக்கு வேண்டியதொன்றாகும். அதையே நீங்கள் வெளிப்படுத்தி இப் பாடசாலைக்கு எமக்குமுன் பெருமையை ஈட்டிக் கொடுத்துள்ளீர்கள் என தெரிவித்தார்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)