
posted 31st March 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
வெடுக்குநாறிமலை விக்கிரகங்கள் அழிக்கப்பட்டதை எதிர்த்து கவனவீர்ப்பு பேரணி
வவுனியா வெடுக்குநாறிமலை ஆதிசிவன் விக்கிரகங்கள் உடைத்து எறியப்பட்டமையை கண்டித்து வவுனியாவில் நேற்று (30) வியாழன் கவனவீர்ப்பு பேரணி நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை - வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலயத்திலிருந்த சிவலிங்கம் மற்றும் விக்கிரகங்கள் அங்கிருந்து பெயர்க்கப்பட்டு வீசப்பட்டிருந்தன. தொல்பொருள் திணைக்களத்தின் கீழிருந்த இந்த ஆலயத்தில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தை கண்டித்தும், ஆலயத்தை மீள அமைக்க வலியுறுத்தியும் நேற்றைய தினம் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
வவுனியா கந்தசுவாமி கோயிலின் முன்பாக நேற்று முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமான இந்தப் போராட்டத்தில் வடக்கு மாகாணத்தின் பல இடங்களிலும் இருந்தும் மக்கள் எழுச்சியாக திரண்டிருந்தனர்.
கந்தசுவாமி ஆலயத்தில் தேங்காய் உடைத்து வழிபட்டதைத் தொடர்ந்து ஆரம்பமான பேரணி, மணிக்கூட்டு கோபுர சந்தியை அடைந்து, அங்கிருந்து பசார் வீதி ஊடாக ஹொரவப்பொத்தானை வீதியை அடைந்து, மருத்துவமனை சுற்றுவட்ட வீதி ஊடாக மாவட்ட செயலகத்தை சென்றடைந்தது.
ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்,
- வெடுக்குநாறிமலை மீதான தாக்குதல் கௌதம புத்தரின் ஆன்மிகத் தோல்வி
- ஈழத்தமிழனை வேரறுக்க நினைக்காதே
> வெடுக்குநாறி எங்களின் இடம்
- மதச் சுதந்திரத்தைத் தடுக்காதே
- தொல்பொருள் திணைக்களமே வெளியேறு
போன்ற வாசகங்களைத் தாங்கிய பதாகைகளையும் ஏந்தி கோஷங்களை எழுப்பினர்.
பேரணியாக சென்ற போராட்டக்காரர்கள் மக்கள் மருத்துவமனை சுற்றுவட்ட பகுதியில் அமைந்திருந்த தொல்பொருள் திணைக்களத்தின் பணிமனைக்கு சென்று அதன் வாயிலை மறித்து “தொல்பொருள் திணைக்களமே வெளியேறு”, என்று கோஷமிட்டனர்.
சுமார், 15 நிமிடங்கள் வரை குறித்த வாயிலை முற்றுகையிட்ட மக்கள் பின்னர் அங்கிருந்து வெளியேறி மாவட்ட செயலகத்துக்கு சென்றிருந்தனர். அங்கும் வாயிலில் நின்று கோஷங்களை எழுப்பினர்.
இதைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் ஜனாதிபதிக்கான மனுவை, மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் பீ. ஏ. சரத் சந்திரவிடமும், ஜனாதிபதியின் வடக்குக்கான இணைப்பாளரும் மேலதிக செயலாளருமான ஈ. இளங்கோவனிடமும் கையளித்தனர்.
ஜனாதிபதிக்கு இந்த விடயம் குறித்து தெரியப்படுத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளரும் அரச அதிபரும் இணைந்து வாக்குறுதி வழங்கியதையடுத்து போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்தப் போராட்டத்தில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம், சாள்ஸ் நிர்மலநாதன், சி. சிறீதரன், செ. கஜேந்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஈ. சரவணபவன், சிவசக்தி ஆனந்தன், சி. சிவமோகன், பொது அமைப்புக்கள், அரசியல் கட்சிகள், சமயப் பெரியோர்கள், சமூக ஆர்வலர்கள், பல்கலைகழக மாணவர்கள், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள், காணாமல் போன உறவுகளின் சங்கத்தினர், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
போராட்டம் நேற்று வியாழனமுற்பகல் 11.30 மணியளவில் முடிவடைந்ததைத் தொடர்ந்து, போராட்டக்கார்களில் ஒரு பகுதியினர் 6 பேருந்துகளில் வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்துக்கு சென்று வழிபட்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)