
posted 20th March 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
வட கடல் பகுதி குத்தகைக்கு கொடுப்பதை எதிர்த்து ஆர்ப்பட்ட ஊர்வலம்
இலங்கை வடக்குக் கடல் பகுதியில் வரி அறவீடு செய்து இந்திய மீனவர்களுக்கு வாரத்தில் மூன்று நாட்களுக்கு குத்தகைக்கு வழங்குவது மற்றும் இந்திய மீனவர்களின் தொடர்ச்சியாக இலங்கைக் கடல் பகுதியில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுவதை கண்டித்தும் வடக்கு மாகான மீனவர்கள் ஒன்றிணைந்து எதிர்வரும் 23ம் திகதி மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை மன்னார் மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ் ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்து மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று மன்னார் மாவட்ட மீனவ சங்கங்களின் சமாசப் பிரதிநிதி எல்.எம். ஆலம், மன்னார் மாவட்ட கடற்தொழில் சமாஜத் தலைவர் அல்பேட் யஸ்ரின் சொய்சா, மன்னார் பனங்கட்டுகொட்டு மீனவ சங்க முகாமையார் அன்ரன் சங்கர் கேட்டுக்கொண்டதற்கிணங்க அவர்கள் இணைந்து ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையில்;
வடக்குக் கடல் பகுதியில் வரி அறவீடு செய்து இந்திய மீனவர்களுக்கு வாரத்தில் மூன்று நாட்களுக்கு குத்தகைக்கு வழங்குவது தொடர்பாகவும் இந்திய மீனவர்களின் தொடர்ச்சியாக இலங்கைக் கடல் பகுதியில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுவதை கண்டித்தும் வடக்கு மாகான மீனவர்களாகிய நாங்கள் ஒன்றிணைந்து எதிர்வரும் 23ம் திகதி மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை மன்னார் மாவட்டத்தில் ஏற்பாடு செய்துள்ளோம்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வர்த்தகர்கள் சிவில் சமூக அமைப்புகள், தனியார் போக்குவரத்து சங்கங்கள் விவசாயிகள் என்று அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறு ஆர்ப்பாட்டப் பேரணியின் ஏற்பாட்டுக் குழுவினரால் தெரிவிக்கப்பட்டது.
இவ்வாறு இந்திய மீனவர்களுக்கு கடல் தொழில் செய்வதற்கு அனுமதி வழங்குவதை பரிசீலிப்பதாக கடந்த 22- 02- 2023 அன்று நாடாளுமன்றத்தில் வெளிவிவகார அமைச்சரால் தெரிவிக்கப்பட்ட கருத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மன்னார் மாவட்டம் மற்றும் வட மாகாணம் தழுவிய மீனவர்களும் மீனவ சமாசங்களும் தங்களுடைய கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.
இதற்கு அப்பால் இந்த தீர்மான யோசனையை நாடாளுமன்றத்தில் உடனடியாக நிராகரித்த குறிப்பாக வடமாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களின் உரையையும் நாங்கள் வரவேற்கிறோம்.
இதற்கு அப்பால் இந்த விடயத்தை அரசு பரிசீலனை கூட செய்யாமல் உடனடியாக இதனை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியும் இலங்கை அரசு கவனத்தில் எடுக்காத நிலையும் காணப்படுகின்றது.
இலங்கை, இந்திய மீனவர்கள் கடந்த 2016 இல் எடுத்துக் கொள்ளப்பட்ட நடைமுறைக்கு இணங்க பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும் என்பதை வலியுறுத்தியும் எதிர்வரும் 23ஆம் தேதி மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் எதிர்ப்புப் போராட்டம் ஆரம்பிக்கப்படுகிறது.
இந்த ஆர்ப்பாட்டமானது மன்னார் நகர சபை பொது விளையாட்டு மைதானத்தில் அரம்பிக்கப்பட்டு மன்னார் மருத்துவமனையின் பிரதான பாதையூடாக சென்று மன்னார் புதிய பேருந்து நிலையத்தில் இறுதி நிகழ்வுகள் நடைபெற உள்ளன.
மேலும் இது மீனவர்கள் சார்ந்த பிரச்சனைகள் மட்டுமல்ல வடமாகாணத்தில் இருக்கின்ற அனைவரின் பிரச்சினையாக இருக்கின்றது.
இன்று வடபகுதியில் நடைபெறும் இந்த பிரச்சினை எதிர்காலத்தில் இலங்கை முழுவதையும் அவர்கள் ஆக்கிரமிக்கக்கூடும் என்பதனை இங்கு நாங்கள் பதிவு செய்கின்றோம்.
எனவே, அன்றைய தினம் அனைவரும் முழுமையாக கடல் தொழிலை நிறுத்தி, வர்த்தக நிலையங்களை மூடி ஒத்துழைப்பை தருமாறு நாங்கள் கேட்டுக் கொள்கின்றோம். இதற்கான உத்தியோகபூர்வ கடிதங்களை அந்தந்த அமைப்புகளுக்கும், சங்கங்களுக்கும் நாங்கள் விரைவில் அனுப்ப இருக்கின்றோம்.
இதற்கு அப்பால் நாங்கள் ஒன்றைக் கூற விரும்புகின்றோம். இலங்கை அரசும், இந்திய அரசும் தங்கள் எதிர்காலத்தில் மேற்கொள்ள இருக்கின்ற அபிவிருத்திக்காக நாட்டின் தேசிய வளங்களை யாருக்கும் கையளிப்பதற்கு அனுமதிக்க முடியாது. அந்த செயற்பாட்டின் மூலமாக எமது மீனவ சமூகத்தை வறுமைக்கோட்டிற்குள் தள்ளுவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என ஏற்பாட்டுக் குழுவினர் சார்பில் ஆலம் தெரிவித்தார்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)