
posted 18th March 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
மீண்டும் ஆரம்பமான நிந்தவூர் பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம்
நிந்தவூர் பிரதேச செயலக ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர், புத்துயிர் பெற்று கடந்த வெளிக்கிழமை (17) நடைபெற்றது.
நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ.எம். அப்துல் லத்தீபின் ஏற்பாட்டிலும், பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் புதிய தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள திகாமடுள்ள மாவட்டப்பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் தலைமையிலும் கூட்டம் நடைபெற்றது.
நிந்தவூர் பிரதேச பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எம். சுல்பிகாரின் வரவேற்புரையுடன் ஆரம்பமான கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் எம். பைஸால் காசிம், நிந்தவூர் பிரதேச சபை உப தவிசாளர் வை.எல். சுலைமாலெவ்வை, சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர். கே.எல்.எம். றயிஸ், வைத்திய அத்தியட்சகர் டாக்டர் சஹிலா இஸடீன், ஆயுள்வேத வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எம். நபீல், பொலிஸ் பொறுப்பதிகாரி ஏ.எம்எம். நஜீப் உட்பட பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் திணைக்களங்களின் உயரதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் காட்டு யானைகளின் பிரவேசத்தால் நிந்தவூர் பிரதேச விவசாயிகள், பொது மக்கள் அடைந்து வுரும் நஷ்டங்கள், உயிராபத்துக்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன், தாமதமின்றி நிந்தவூரில் வனவிலங்கு பாதுகாப்பு திணைக்கள உப அலுவலகம் ஒன்றைத் திறக்க ஆவன செய்வதெனவும் முடிவு செய்யப்பட்டது.
அத்துடன் அட்டப்பளம் பிரதேசத்திலேற்பட்டுள்ள கடலரிப்பு அனர்த்தம், நிந்தவூரில் மூடப்பட்ட சதொச கிளையை மீளத் திறத்தல், நிந்தவூர் குவாஸி நீதிமன்றம், மத்தியஸ்த சபை என்பவற்றுக்கான பொதுக் கட்டிடம் ஒன்றை நிர்மாணிக்க காணி ஒதுக்குதல், போன்ற பல்வேறு பிரதேச பிரச்சினைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டன.
மேலும் பிரதேச முக்கியத்துவம் வாய்ந்த மேற்படி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டடத்திற்கு தலைமை வகித்து கச்சிதமாக வழிநடத்திய பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப், பிரதேச மட்டப் பிரச்சினைகளை ஒரே கூரையின் கீழ் ஆராய்ந்து தீர்வுகளைக் காணும் வாய்ப்புக் கிடைத்துள்ளதுடன், முக்கியமான இந்த ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பொறுப்பு கிடைத்தமை பெரும் பேறு எனவும் தெரிவித்தார்.
பெரும்பாலும் இக்கூட்டத்தில் மக்கள் பிரச்சினைகள் தொடர்பில் எடுக்கப்படும் தீர்மானங்களுக்கான தீர்வுகளை அடுத்த கூட்டத்தின் மீளாய்வின் போது பெரும்பாலும் எட்டப்பட வேண்டுமென்ற திடசங்கற்பத்தைத் தாம் பூண்டுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் கூட்டத்தில் உரையாற்றும் போது கூறினர்.
நியமனம் தவிரவும் அம்பாறை மாவட்டத்தின் தமிழ், முஸ்லிம் பகுதிகளின் பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக்களின் தலைவர்களாக தேசிய காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாவுல்லா, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் ஆகியோர் அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, சாய்ந்தமருது, சம்மாந்துறை, இறக்காமம் பிரதேச செயலகங்களின் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்களுக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாவுல்லா தலைவராகவும், பொத்துவில், நிந்தவூர் கல்முனை வடக்கு, கல்முனை, நாவிதன்வெளி, காரைதீவு ஆகிய பிரதேச செயலக ஒருங்கிணைப்புக்குழுத் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரபும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சுமார் நான்கு வருடங்களுக்குப் பின்னர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களுக்குப் புத்துயிரளிக்கப்பட்டுள்ளமை குறித்து பிரதேச மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)