
posted 20th March 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
மதவாதம் புகாத அரசியல் சிறந்தது - உவைஸ்
சமாதானத்தை நிலைநாட்டுவது ஒரு இலேசான காரியமல்ல. மிகவும் கடினமான பணியாகும். அரசியல் ஊடகங்கள் அத்துடன் இனவாத அமைப்புக்கள் மதவாத அமைப்புக்கள் எமக்கு ஒரு சவாலாகவும் அமைந்திருக்கின்றன. இதற்கான ஒரு மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற நோக்கில் எதிர்காலத்தில் அரசியலுக்குள் எக்காரணம் கொண்டும் மதவாதத்தை புகுத்துக் கொள்ளாது இருப்பதே சிறந்தது ஆகும் என இலங்கை தேசிய சமாதான பேரவையின் சிரேஷ்ட நிகழ்ச்சி திட்ட முகாமையாளர் எம். உவைஸ் தெரிவித்தார்.
சமய சக வாழ்வுக்கான தேசிய சமாதான பேரவையும் தொடர்பாடலுக்கான பயிற்சி மையமும உள்ளுராட்சி மன்றங்களுடன் தொடர்பால் உள்ளவர்களுடன் பரிந்துரை செயல்பாடு அமர்வு ஒன்று மன்னாரில் நடாத்தப்பட்ட போது, எம்.உவைஸ் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்;
தேசிய சமாதான பேரவையானது நீண்ட காலமாக சமாதானத்துக்கான சம வாழ்வுக்கான ஒரு செயல்பாடாக இருந்து வருகின்றது.
எமது சமூக சமய தலைவர்கள், எமது சிவில் சமூக உறுப்பினர்கள் அத்துடன் அரச உத்தியோகத்தர்கள் இந்த செயல்பாட்டில் ஒரு குழுவாக இருந்து ஈடுபட்டு வருவதை நாங்கள் காண்கின்றோம்.
இலங்கையில் இலங்கை தேசிய சமாதன பேரவையூடாக மாவட்ட சர்வமதக் குழுக்கள் பிரதேச சர்மத குழுக்கள் ஊடாக சமாதானத்தை முன்னெடுப்பதில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது.
மன்னார் மாவட்டத்தில் 2017 ஆம் ஆண்டு முதல் தேசிய சர்வ மத குழு இயங்கி வருகின்றது. நாட்டில் சமய மோதல்கள் மிக தீவரமாக எழுந்துள்ள வேளையில் இதை ஒரு முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் நாட்டில் ஒரு நிரந்தர சமாதானத்தை கொண்டு வரும் நோக்குடன் ஒரு செயல் திட்டத்தையும் முன்னெடுத்தோம்.
இலங்கையில் சமய மோதல்கள் ஏற்பட்ட சமயம் இதற்குப் பின்னால் அரசியல் இருந்தமையினாலேயே பாரிய அழிவுகளை நாம் சந்தித்தோம்.
இதற்கு ஒருசில ஊடகங்களும் துணையாக செயல்பட்டன. இச் சமய மோதல்கள் மேல்மட்டத்திலிருந்து ஆரம்பிக்கப்படவில்லை. மாறாக இவைகள் கிராம மட்டங்களிலிருந்தே ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
இதன்போது அங்கிருந்த ஒரு குறைபாடு இவ்வாறான சம்பவங்களின் போது அப்பகுதிகளில் மத்தியஸ்தம் வகித்து அப் பிரச்சனைகளை தணிப்பதற்கு எவரும் முன் வந்திருக்கவில்லை.
அப் பகுதிகளில் மதத் தலைவர்கள், சிவில் சமூகம், அரச அதிகாரிகள் போன்றவர்கள் இருந்தபோதும் இவர்கள் ஒரு குழுக்களாக அங்கு இருக்கவில்லை.
இதை கவனத்தில் எடுக்கப்பட்டு மோதல்கள் ஏற்படும் பிரதேசங்களை தெரிவு செய்து ஒரு பொறிமுறையாக அப் பகுதிகளில் சர்வமதக் குழுக்களை உருவாக்கினோம்.
இவைகள் ஒரு சாதாரண சர்வமத குழுக்களாக அல்லது பொலிசார் கிராம அலுவலர்கள் சர்வமத தலைவர்கள் சமாதானத்தக்கான நியமிக்கப்பட்ட அரச உத்தியோகத்தர்கள் சமூகத்துடன் ஈடுபாடு கொண்ட சிவில் சமூக உறுப்பினர்கள் கொண்ட ஒரு வலுவான குழுக்களாகவே இது அமைக்கப்பட்டுள்ளது.
உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களையும் இதில் உள்வாங்க எண்ணிய போதும் இவர்களை உள்வாங்காதன் காரணம் இவர்கள் நேரடியாக அரசியல் ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பதனால் அரசியலை நாங்கள் இதற்குள் கொண்டுவர விரும்பவில்லை.
ஆனால், இவர்களுடனான உறவுகளை வளர்ப்பதில் நாங்கள் ஆரம்ப நாட்களிலிருந்து செயல்பட்டு வந்துள்ளோம்.
இலங்கையில் சமய முரண்பாடுகள் கொண்ட 14 பிரதேசங்களை தெரிவு செய்யப்பட்டு இவ்வேளை திட்டங்களை தற்பொழுது முன்னெடுத்து வருகின்றோம்.
இப் பகுதிகளிலுள்ள பிரதேச மற்றும் நகர சபைகளுடன் நாங்கள் தொடர்புகளை வைத்துக் கொண்டு நேரடியாக அவர்களுடன் கூட்டங்களை நடாத்தி ஒத்துளைப்புகளை பெற்று வந்திருக்கின்றோம்.
இலங்கையில் மதம் இனம் சார்பாக எதாவது மோதல்கள் பிரச்சனைகள் உருவாகும்போது இலங்கை தேசிய சமாதான பேரவையை தவிர வேறு எந்த அரசு சார்பற்ற நிறுவனமும் தலையிடுவதில்லை.
காரணம் மத ரீதியாக பிரச்சனைகள் உருவாகும்போது இவற்றை தீர்த்து வைப்பதில் மிக கடினமாக இருக்கின்ற போதும் இலங்கை தேசிய சமாதான பேரவை 2018 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை 53 பிரச்சனைகளை நாம் தணித்திருக்கின்றோம். இவைகள் மேலும் தொடர விடாமல் தணித்துள்ளோம்.
இப்பொழுது எமது நாடு பெரும் அபாய நிலையில் காணப்படுகின்றது. இதற்கு காரணம் மதவாதமும், இனவாதமும் முக்கியமாக இருக்கின்றது.
கடந்த அரசாங்கம் முழுக்க முழுக்க இனவாதத்தில் அரசியலை முன்னெடுத்து சென்றமையால் இப்பொழுது இந்த நாடு வறுமையும் பட்டினி சாவுக்கும் வித்திட்டுள்ளது என்பது யாவரும் அறிந்த விடயமாகும்.
ஆகவே, இதற்கான ஒரு மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற நோக்கில் எதிர்காலத்தில் அரசியலுக்குள் எக் காரணம் கொண்டும் மதவாதத்தை புகுத்துக் கொள்ளாது இருப்பதே சிறந்தது ஆகும்.
இது மேல் மட்டத்திலிருந்து உருவாகுவதை விட கீழ் மட்டமாகிய உள்ளுராட்சி மன்றங்களிலிருந்து உருவாக்கப்பட வேண்டும் என்பதே சிறந்தது.
அதற்காகவே உள்ளுராட்சி மன்றங்களுடன் தொடர்புள்ளவர்களுடன் ஒரு கலந்துரையாடலில் ஈடுபட நாங்கள் முனைந்துள்ளோம்.
ஆகவே இங்கு உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள், வேட்பாளர்கள் இருக்கின்றீர்கள். அத்துடன் சர்வ மதத் தலைவர்களும் இங்கு வீற்றிருக்கின்றார்கள். யாவரும் நல்லதொரு கலந்துரையாடி நாட்டில் எமது சமூகத்தில் சமாதனம் நிலைக்க செல்படுவோம் என உவைஸ் தெரிவித்தார்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)