போதைப்பொருள் சம்பந்தமானோருக்கென தனியான மையவாடி
போதைப்பொருள் சம்பந்தமானோருக்கென தனியான மையவாடி

நிந்தவூர் பிரதேச சபையின் அதிகாரத்திற்கு உட்பட்ட பிரதேசங்களில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடுவோர் மற்றும் போதை பொருள் பாவனையாளர்கள் மரணிக்கும் பட்சத்தில் அவர்களது வெற்று உடல் - ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்காக இங்குள்ள மையவாடி - இடுகாட்டில் ஒதுக்குப் புறமாக பிரத்தியேகமான இடத்தை பிரகடனப்படுத்தும் நிகழ்வு நாளை 2023.02.10 வெள்ளிக்கிழமை இடம்பெற உள்ளது.

நிந்தவூர் அனர்த்த முகாமைத்துவ அணியினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக, நிந்தவூர் பிரதேச சபை அமர்வில் இதற்கான தீர்மானம் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதற்கமைய நிந்தவூர் பிரதேசத்தில் உள்ள போதைப் பொருள் வியாபாரிகள் மற்றும் பாவனையாளர்களை அடையாளம் கண்டு நிந்தவூர் - 09ம் பிரிவில் உள்ள பிர்தௌஸ் மையவாடியில் அவர்களுக்கென புறம்பாக ஒதுக்கப்பட்ட இடத்தில் அவர்களது இறந்த உடல்கள் அடக்கம் செய்யப்பட உள்ளன.

இதற்காக போதைப்பொருள் பாவனையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களை இனங்காணுவதற்கு தேவையான நடவடிக்கைகள் பொலிஸாரின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது..

இதற்கு அமைய போதைப் பொருளுடன் தொடர்புபட்டவர்களை அடக்கம் செய்வதற்கான புறம்பான மையவாடியை அடையாளப்படுத்தி பிரகடனப்படுத்தும் நிகழ்வு நிந்தவூர் அனர்த்த முகாமைத்துவ அணியின் தலைவர் அல் ஹாஜ்.எம் பி எம் பாறூக் இப்றாகீம் தலைமையில் நிந்தவூர் பிர்தௌஸ் மையவாடியில் இடம்பெற உள்ளது

இந்த நிகழ்வில் நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம் ஏ எம் தாஹிர், நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ எம் அப்துல் லத்தீப், நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் றயீஸ், நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ எம் நஜீம், நிந்தவூர் பிரதேச சபையின் உறுப்பினர்கள் மற்றும் நிந்தவூர் அனர்த்த முகாமைத்துவ அணியின் அங்கத்துவ அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட நிந்தவூரில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்கள் முதலானோர் கலந்து கொள்ள உள்ளனர்

இது தொடர்பாக நிந்தவூர் அனர்த்த முகாமைத்துவ அணியினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக, நிந்தவூர் பிரதேசத்தில் உள்ள அனைத்து ஜும்மா பள்ளிவாசல்களிலும் இன்றுஇன்று போதைப்பொருள் பாவனைக்கு எதிரான விழிப்பூட்டும் வகையிலான விசேட ஜும்மா பிரசங்கம் நிகழ்த்தப்படவுள்ளதுடன் அதுகுறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களும் வீடு வீடாக விநியோகிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

போதைப்பொருள் சம்பந்தமானோருக்கென தனியான மையவாடி

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)