புதிய யுகம் நோக்கிய பயணம்

“இனவாதம், மதவாதம், ஏழை, பணக்காரன் என்ற பேதமற்ற ஒரு இலங்கையை நாம் கட்டியெழுப்ப வேண்டும். அத்தகைய புதிய யுகம் ஒன்றை நோக்கிய பயணத்தை தேசிய மக்கள் சக்தி முன்னெடுத்துள்ளது.”

இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க கூறினார்.

நிந்தவூர் பிரதேச சபைக்கான உள்ளுராட்சி மன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டிடும் வேட்பாளர்களை ஆதரித்து இடம்பெற்ற “மக்கள் சந்தப்புக் “கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

நிந்தவூர் பிரதேச சபைக்கான முதன்மை வேட்பாளர் எம். சம்சுன் அலி தலைமையில் நிந்தவூர் அமீர் மஹால் மண்டபத்தில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தலைவர் அனுர குமார திஸா நாயக்க தொடர்ந்து உரையாற்றுகையில் பின்வருமாறு கூறினார்.

“பல்வேறு வளங்களையும் கொண்ட நம் நாடு ஆட்சியிலிருந்து வந்தவர்களால் குட்டிச் சுவராக்கப்பட்டு, நாடும், மக்களும் இன்று பெரும் இன்னல்களுக்குள் அகப்பட்டு பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

பல சந்தரப்பங்களில் மக்கள் வாக்களித்து அரசாங்கங்களை அமைத்தும் மக்களுக்கும், நாட்டுக்கும் விடிவற்றநிலையே தோற்றுவிக்கப்பட்டுள்ளது.
மக்களைப் பிரித்தாளும் சுய நல, அரசியல் வாதிகளான ஹக்கீம், றிசாட், ரணில், சஜித் போன்றோரிடமிருந்து விலகி மக்கள் விடிவுபெற வேண்டும்.
இனவாதம், மதவாதம், ஏழை, பணக்காரன் என்ற பேத மற்ற ஒரு இலங்கையைக் கட்டியெப்ப வேண்டிய நிலமை இன்று உருவாக்கியுள்ளது.

இந்தத் தேர்தலிலும் முஸ்லிம் பிரதி நிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும், ராஜபக்ஷக்களைத் துரத்த வேண்டுமெனக் கூறிக்கொண்டு முஸ்லிம் தலைமைகள் வருவார்கள். மக்களை உசுப்பேத்துவார்கள்.
பின்பு அதே ராஜபக்ஷக்களிடமும், ரணிலிடமும் மண்டியிட்டு தமது வழக்கமான அரசியல் வியாபாரத்தைச் செய்வார்கள்.

இத்தகைய கள்ளக் கூட்டத்தின் சீமெந்து, தகரம், பொதிகளுக்கு இன்னும் ஏமாறும் நிலையில் மக்கள் இன்றில்லை.

2015 இல் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன, தாம் ஜனாதிபதியானதும் ராஜபக்ஷக்களை நாட்டைவிட்டு தப்பி ஓட முடியாதவாறு விமான நிலையங்களை மூடி நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

ஆனால் மூன்று வருடங்களில் மஹிந்தவைப் பிரதமராக்கினர். அதே போல் மத்திய வங்கி கொள்ளை தொடர்பில் ரணிலை சிறையிலடைப்போமென்ற கோட்டாபய தரப்பினர் இன்று அவரை ஜனாதிபதியாக்கியுள்ளனர்.
ஆனால், மக்கள் பணத்தையும், நாட்டின் சொத்துக்களையும் சூறையாடி நாட்டையும், மக்களையும் இன்றைய வங்குரோத்து நிலைக்குக் கொண்டு வந்தவர்களைத் தண்டிக்கத்தக்க சக்தி தேசிய மக்கள் சக்தியிடமே உண்டு என்பதையும் மக்கள் இன்று உணர்ந்துள்ளனர்.

மக்கள் நம்பிக்கையை நாம் பாதுகாப்போம், மக்கள் அளிக்கும் வாக்குகளுக்குரிய மதிப்பையும், கௌரவத்தையும் நாம் தருவோம், புதிய மாற்றம் செய்வோம்.

இனவாத கட்சிகளுக்குச் சோரம் போக வேண்டுமா அல்லது தேசிய சமாதானத்தைக் கட்டியெழுப்பும் கட்சியின் ஆட்சி வேண்டுமா என்பதை மக்கள் தீர்மானிக்கும் நிலமை வந்துள்ளது.

நாமனை வரும் இலங்கையர் என்ற பேதமற்ற நிலையை உருவாக்கி சுபீட்சம் காண்பதற்காக இன்று தேசிய மக்கள் சக்தியுடன் மக்கள் அணி திரண்டு வருகின்றனர்.

நமக்கு மக்களனைவரும் ஐக்கியமாக வாழும் நாடு வேண்டும். அத்தகைய நாட்டை நாம் உருவாக்குவோம் தேசிய மக்கள் சக்தியின் அரசு அப்படியே அமையும்” என்றார்.

புதிய யுகம் நோக்கிய பயணம்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)