
posted 15th March 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
பிரத்தியேக வகுப்புகளால் அறநெறி பாடசாலைகளுக்கான பாதிப்பை எதிர்த்து கவனயீர்ப்பு போராட்டம்
மன்னார் மாவட்டத்தில் வாரத்தில் ஒருமுறை, ஞாயிற்றுக் கிழமைகளில், நடாத்தப்பட்டு வரும் ஆன்மீகக் கல்வி கற்பித்தல் நேரங்களில் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்புக்கள் கல்வி நிலையங்களில் நடாத்தப்படுவதால் ஆன்மீகத்தில் பிள்ளைகளை வளர்த்தெடுக்க முடியாத நிலை உருவாகி வருவதாக மன்னார் இந்து மதபீடத்தின் ஏற்பாட்டில் புதன்கிழமை (15) மன்னார் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக காலை 9.30 மணி முதல் அடையாள கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
இக் கவனயீர்ப்பு போராட்டத்தில் இந்து மதக் குருக்கள் அறநெறி பாடசாலை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
அதாவது மன்னார் மாவட்டத்தில் அறநெறிப் பாடசாலைகளில் ஆன்மீகக் கல்வி கற்பித்தல் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் காலை 8 மணி முதல் காலை 11 மணி வரை நடைபெற்று வருகின்றது.
ஆனால் இந்த நேரங்களில் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்புக்கள் கல்வி நிலையங்களிலும், சில பாடசாலைகளிலும், பிரத்தியேகமாக வீடுகளிலும் நடைபெற்று வருவதனால் அறநெறி பாடசாலைகளுக்கு மாணவர்களின் வரவு குறைவடைந்து செல்வதாக தெரிவிக்கப்பட்டது.
இவ்வாறான செயல்பாட்டை உடன் நிறுத்த வேண்டும் எனக்கோரியே மன்னார் இந்து மதபீடத்தின் ஏற்பாட்டில் இக் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
இப் பேராட்டத்தின்போது இவர்களால் ஏந்தப்பட்டிருந்த பதாதைகிளில்;
- 'இன்றைய தலைமுறைக்கு ஆன்மீகக் கல்வி மிக முக்கியம்.'
- 'ஞாயிறு தினத்தில் காலை பிரத்தியேக வகுப்புக்களை நிறுத்தவும்.'
- 'அறநெறி பாடசாலை நேரத்தில் பிரத்தியேக வகுப்புக்கள் வேண்டாம்.'
- 'ஞாயிறு பிரத்தியேக வகுப்புகளுக்கு தடை விதிக்கவும்.'
- 'ஆன்மீக கல்வியை ஊக்குவிப்போம்.'
போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகள் போராட்டக்காரர்களால் ஏந்தப்பட்டிருந்தன.
ஈற்றில் ஞாயிறு பிரத்தியேக வகுப்புக்களை நிறுத்தக்கோரி வடக்கு மாகாண ஆளுநருக்கு மகஜர் ஒன்று மன்னார் மாவட்ட அரசாங்க அதிபருக்கூடாக கிடைப்பதற்கு கையளிக்கப்பட்டது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)