
posted 18th February 2023
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included]
குளப்பத்தை உயிர்ப்பிக்க கையிலெடுக்கப்படும் 13
தென்னிலங்கையில் பெரிய பிரச்னையை உருவாக்கவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 13 குறித்து பேசுகிறார். இதன் மூலம் ஆட்சியாளர்களுக்கு எதிராக சிங்கள மக்களை குழப்பி, வட மாகாண தமிழ் மக்களுக்கு எதிராக செயல்படுத்துகின்றார் என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸநாயக்க குற்றஞ்சாட்டியுள்ளார்.
நேற்று யாழ்ப்பாணம் வந்த அவர் டிம்பர் மண்டபத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அத்துடன், “மோசடியாளர்களே இந்த நாட்டை அழிவுக்கு கொண்டுவந்தனர். எனவே, நாட்டுக்கு நல்ல அரசாங்கம் தேவை. மோசடிக்காரர்களுக்கு தண்டனை வழங்குகின்ற அரசாங்கம் தேவை. அதற்காக அனைவரும் ஒன்றாக வேண்டும்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறுகின்றார் 13ஆவது திருத்தச் சட்டத்தை வழங்குவோம் என்று. பொலிஸ், காணி அதிகாரத்தை வழங்குவோம் என்று கூறுகின்றார். இது ஏன்? தென்னிலங்கையில் பெரிய பிரச்சனையை உருவாக்கி அங்கு ஆர்ப்பாட்டங்களை உருவாக்கவே. உண்மையான பிரச்சனை ஆட்சியாளர்களுக்கு எதிராக இருக்கின்றது. அதனைவிடுத்து ஆட்சியாளர்களுக்கு எதிராக சிங்கள மக்களை குழப்பி வட மாகாண தமிழ் மக்களுக்கு எதிராக செயல்படுத்துகின்றார்.
இந்த ஜனாதிபதி நான்கரை வருடங்கள் பிரதமராக இருந்தார். புதிய அரசமைப்பு யாப்பை தயாரிப்பதற்கு ஒரு சபை நிறுவப்பட்டது. அதற்கு ஒரு குழுவும் அமைக்கப்பட்டது. இதில் 82 கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. அதில் எந்தவோர் அறிக்கையும் புதிய அரசமைப்பு யாப்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பிக்கவில்லை.
வடக்கை சூடான நிலையில் வைத்திருக்க - அந்த நிலையை உருவாக்கவே - தேர்தல் வரும்போது 13 ஆவது திருத்தச் சட்டம் என்ற பந்தை வடக்கில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் க. வி. விக்னேஸ்வரனும் தென்னிலங்கை பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்காரவும் அடித்து விளையாடுகின்றனர் என்றார்.
QR இல்லையேல் பெற்றோல் இல்லை - வெட்டப்பட்டார் ஊழியர்
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் QR இல்லாமல் பெற்றோல் அடிக்க முடியாது என்று தெரிவித்த ஊழியர் மீது வாள் வெட்டுத் தாக்குதல்!
ஏ9 வீதி,யாழ், நாவற்குழி பகுதி எருபொருள் நிரப்பு நிலையத்தில் QR இல்லாமல் பெற்றோல் அடிக்க முடியாது என்று தெரிவித்த ஊழியர் மீது வாள் வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.
கையில் பலத்த காயங்களுக்குள்ளான ஊழியர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் 16 அன்று இரவு 11:00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்வத்தில் படுகாமடைந்தவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு யாழப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி்பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நெல்லை 160 ரூபாவிற்கு மேல் கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்
நெல்லை 160 ரூபாவிற்கு மேல் கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிளிநொச்சி பிரஜைகள் குழு செயலாளர் சிங்கராசா ஜீவநாயகம் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி பிரஜைகள் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
வெவ்வேறு விவசாயிகள் தமது உற்பத்திக்கான விலையை கேள்விக்கேற்ப மாற்றிக்கொள்கின்றனர். ஆனால் நெற் செய்கையாளர்கள் மட்டும் கொள்வனவாளரில் தங்கியிருக்கிறார்.
அரசின் கொள்வனவின் அடிப்படையில் சந்தையில் அரிசி மலிவாக இருக்க வேண்டும். ஆனால் அரிசியின் விலையோடு ஒப்பிடுகையில் சுரண்டல் காணப்படுகிறதாகவே உள்ளது.
அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பரந்தன் பகுதிக்கு வந்தபோது நெல்லினை 100 ரூபாவிற்கு கொள்வனவு செய்யுமாறு கூறினார். ஆனால் விவசாயிகள் அதற்கு தயாரில்லை.
அந்த விலைக்கு விவசாயிகள் வழங்க தயார் இல்லை என ஊடகங்கள் மூலம் அறிகின்றோம். இவ்வாறான நிலையில், இந்த கொள்வனவு விலையை அவர்கள் ஏற்கவில்லை என்பது புலனாகின்றது.
இன்றைய சூழலில் உற்பத்தி செலவானது 235,000 தொடக்கம் 240,000 வரை ஏற்படுகிறது. ஆனால் அரசாங்கத்தின் சந்தை விலையினடிப்படையில் 175000 ரூபாவை விவசாயிகள் பெறுவதே அரிதாக உள்ளது.
இதனால் விவசாயிகள் ஒவ்வொருவரும் 25000 ரூபாவிற்கு மேலாக இழப்பினை சந்திக்கின்றனர். அவர்களின் உற்பத்தி செலவுக்கு மேலதிகமாக இவ்வாறு இழக்கின்றனர்.
விவசாயத்திற்கான மானியம் வழங்கப்படவில்லை. பசளை, மருந்துகள் பெற்றுக் கொடுக்கப்படவில்லை. அதிக விலை கொடுத்து கறுப்பு சந்தையில் அவற்றை பெற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில், அரசாங்கம் நெல்லிற்கான விலை நிர்ணயத்தினை 160 ரூபாவிற்கு மேல் அதிகரித்து கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு நடந்தாலே விவசாயிகள் தொடர்ந்தும் விவசாயத்தில் ஈடுபடலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
வெற்றிலைக்கேணி பகுதியில் இந்திய இழுவை மடி படகுகளால் இரண்டு மீனவர்களுக்கு சொந்தமான 20 வலைகள் நாசம்...!
வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் இந்திய இழுவை மடி படகுகளால் இரண்டு மீனவர்களுக்கு சொந்தமான 20 வலைகள் நாசமாக்கப்பட்டுள்ளன.
வெள்ளி (17) இரவு 9.00 மணியளவில் வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் 2 கிலோ மீற்றர் தொலைவில் உள்நுழைந்த இந்திய இழுவை மடி படகுகள் குறித்த மீனவர்களின் வலைகளை அறுத்துச் சென்றுள்ளனர்.
கடற்படை அருகில் இருந்தும் நாளாந்தம் அத்துமீறி தமது வாழ்வாதாரத்தை அழித்துச் செல்லும் இந்திய இழுவைமடி படகுகளை ஏன் இவர்களால் கைது செய்ய முடியவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்?
இந்திய இழுவைமடி படகுகளால் அறுத்துச் செல்லப்பட்ட வலைகள் சுமார் 5 இலட்சம் ரூபாவிற்க்கும் அதிகம் என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துடன் தமக்கு நஸ்ட ஈட்டை பெற்றுத்தருமாறும் கோரிக்கை விடுக்கின்றனர்.
எங்களுடைய வாழ்க்கையை அழித்தொழிக்கும் இந்திய மீனவர்களின் அத்துமீறலை இலங்கை அரசாங்கம் தடுத்து நிறுத்தாவிடில் தற்கொலை செய்யும் நிலைக்கு தாம் தள்ளப்படக்கூடிய சூழ்நிலை உருவாகும் என அவர்கள் எச்சரித்துள்ளனர்.
கடற்றொழில் சம்பந்தமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு கடற்படை மற்றும் நீரியல்வளதிணைக்களம் தயக்கம் காட்டுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)