
posted 30th March 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
பயனாளிகளை அச்சுறுத்தும் வன வளத் திணைக்களம்
‘இளம் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் தேசிய வேலைத் திட்டத்தின்’ கீழ் காணிகளை பகிர்ந்தளிக்கும் அரசாங்கத்தின் திட்டத்தில் முள்ளிவட்டவான், வாகனேரி, கிரான் பிரதேசங்களில் காணிகளை பெற்றவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு வன வளத் திணைக்களத்தினர் அச்சுறுத்துகின்றனர் என்று பயனாளிகள் தெரிவித்தனர்.
இந்த விடயம் தொடர்பாக கிழக்கு ஊடக மன்றத்தின் ஏற்பாட்டில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பயனாளிகள் கருத்து வெளியிடுகையில்,
2020 ஆண்டில் ஆட்சி புரிந்த ஜனாதிபதியின் திட்டத்தின்படி பயிர் செய்கைக்காக காணி கேட்டு விண்ணப்பித்திருந்தோம். இதன்படி 2022.06.16ஆம் திகதி முள்ளிவட்டவான் கிராமத்தில் அரை ஏக்கர் அளவில் 17 பயனாளிகளுக்கு கோறளைப்பற்று தெற்று கிரான் பிரதேச செயலாளர் மற்றும் செயலக காணி அதிகாரிகளும் நேரடியாக வருகை தந்து காணியை பகிர்ந்தளித்தனர். அதற்கான ஆவணங்களும் அளிக்கப்பட்டன.
இதனை துப்பரவு செய்து பயிர் செய்கை நடவடிக்கையில் ஈடுபடும் போது வனவளத் திணைக்கள அதிகாரிகள் குறித்த இடத்துக்கு வருகை தந்து தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசத்தில் எந்தவொரு பயிர்செய்கை நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டாம் என கூறுவதோடு சிலரை கைது செய்து சட்ட நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர். ஏனைய இடங்களில் அடையாளமிடபப்ட்டது போன்று எங்களுக்கு வழங்கப்பட்ட இடத்தில் எந்தவிதமான அளவைக் கல்லும் இடப்படவில்லை.
ஏழை மக்களான நாங்கள் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை பயிர்செய்கை நடவடிக்கைக்கு செலவு செய்துள்ளோம். தற்போது பலனின்றி போகும் நிலையில் உள்ளது. எந்த அதிகாரியின் கதையை கேட்பது என்று புரியாமல் உள்ளது.
இந்த விடயம் தொடர்பாக காணி வழங்கிய பிரதேச செயலக நிர்வாகத்திடம் நிலைமை தொடர்பாக தெரிவித்தபோதும் அவர்கள் பாராமுகமாக இருப்பது கவலையளிக்கிறது.
இரு தரப்பு அரச திணைக்கள நிர்வாகச் சிக்கலில் நாங்கள் அகப்பட்டுள்ளோம். எனவே, இது விடயத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் தலையிட்டு எமக்கு சாதகமான பதில் ஒன்றைப் பெற்றுத்தருமாறு கோருகிறோம் என்று கூறினர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)