
posted 18th March 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
ஜனாதிபதியின் அதிகாரமா? மக்களின் ஜனநாயக உரிமையா?
மக்களாணை பெறாத ஜனாதிபதியின் அதிகாரத்திற்கும், மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கும் இடையே தற்போது பலப்பரீட்சை நடைபெறுகின்றது என்று மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜி. ஸ்ரீநேசன் குறிப்பிட்டார்.
சமகால அரசியல் நிலை குறித்து அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது. வரிச்சுமை, மின்சாரக் கட்டண உயர்வு, வருவாய்க் குறைவு என்பவற்றுக்கு எதிராக மக்கள் ஜனநாயக ரீதியாக வீதிக்கிறங்கி போராடுகின்றனர். மேலும் உள்ளூராட்சி சபைத் தேர்தலைத் தடுப்பதிலும் ஜனாதிபதி தனது அதிகாரத்தினைப் பிரயோகித்து வருகின்றார். சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவின் தேர்தல் செயற்பாடுகளை நிதியமைச்சர் என்ற அதிகாரத்தினால் ஜனாதிபதி கட்டி வைத்துள்ளா். இவ்வாறான நிலையில் எதிர்க்கட்சிகள் மக்களுடன் வீதிக்கு இறங்கிப் போராடி வருகின்றனர். அதாவது ஜனநாயக ரீதியாக வன்முறைகள் இல்லாமல் போராட்டங்கள், எதிர்ப்புகள் நடைபெறுகின்றன. ஆனால், ஜனாதிபதி தனது மாமனாரான ஜெயவர்தனாவைப் போன்று அதிகார இரும்புக்கரம் கொண்டு போராட்டங்களை ஒடுக்கி வருகின்றார். ஆர்ப்பாட்டங்களின் போது இரண்டு மனித உயிர்கள் காவு கொள்ளப்பட்டுள்ளன. இதற்கான காரணங்கள் என்னவென்று தெரியவில்லை. ஆனால், காலாவதியான கண்ணீர்ப்புகைக் குண்டுகள் போராட்டத்தின் போது பொலிசாரால் தாராளமாகப் பிரயோகிக்கப்பட்டுள்ளன. அவை இருவரின் உயிர்களை பறித்துள்ளதாக கூறப்படுகிறது. சட்டபூர்வமான அரச பொலிசார் எவ்வாறு சட்டபூர்வமற்ற காலாவதியான கண்ணீர்ப் புகையைப் பயன்படுத்தினார்கள் என்ற கேள்வி எழுகின்றது. மேலும், இராணுவச் சீருடை அணிந்தவர்கள் இரும்புக் கம்பிகள் அல்லது தடிகளோடு வந்திருப்பதை புகைப்படங்கள் காட்டுகின்றன. அவர்கள் இராணுவத்தினர் அல்லர் என்று அரச தரப்புத் தகவல்கள் கூறுகின்றன. அப்படியாயின், இராணுவ சீருடையில் குண்டர் படையொன்றை களத்தில் இறக்கிய அதிகாரக் குண்டர் யார் என்ற கேள்வி எழுகின்றது.
இப்படியான நிலையில், ஜனாதிபதி ரணில் மக்களாணை அற்றவராக இருந்தாலும், மக்களின் போராட்ட உரிமைகளை ஒடுக்குவதற்கு நிறைவேற்றுத்துறை அதிகாரத்தை உச்சமாகப் பயன்படுத்துகின்றார். அதிகாரங்கள் ஆட்சியாளர்களுக்கு இனிப்பாக இருக்கலாம். ஆனால், மக்களுக்கு கசப்பாகவே இருக்கின்றது. மக்களுக்கு கசந்தால் மக்களுக்கான ஆட்சியென்ற ஜனநாயகத்தின் அர்த்தம் பொய்யாகிவிடும்.
அபிப்பிராய வாக்ககெடுப்பு ஆய்வொன்றின்படி ஏறத்தாழ 85 சதவீத மக்கள் ஆளும் கட்சியினரான ரணில், ராஜபக்ச தரப்பினரை நிராகரிக்க முற்பட்டுள்ளனர்.இதனால், தேர்தலையும் மக்களையும் கண்டு ஆட்சியாளர்கள் அச்சமடைகின்றார்கள். இதுதான் உள்ளூராட்சித் தேர்தலை தவிர்ப்பதற்கான முதன்மைக் காரணமாகும். இத்தாலிய நாட்டின் சர்வாதிகாரி முசொலினி தேர்தல் மூலமாகவே ஆட்சிக்கு வந்தார். பின்னர் தேர்தலை இல்லாமலாக்கி நாட்டின் சர்வாதிகாரியானார். நாட்டின் பொருளாதாரப் பின்னடைவை காரணம் காட்டியே முசோலினி தேர்தல்களைத் நிறுத்திய பின்னர் சர்வாதிகாரியானார். ஆனால் ரணில் அவர்கள் தேர்தல் இல்லாமலே ஜனாதிபதியானவர் என்பதை நாமறிவோம். இதனால் ஜனாதிபதி மக்களையும் தேர்தலையும் கண்டு இரட்டை அச்சம் அடைகிறார். கூடவே ஆத்திரமும் கொள்கிறார் என்று உளவியல் ரீதியாக எண்ணத் தோன்றுகிறது. அதிசக்தி வாய்ந்த வல்லரசு பக்கமாக ஜனாதிபதி ரணில் சாய்ந்தமையால் தான் அதீத சக்தி பெற்றதாக நினைக்கிறாரோ தெரியவில்லை. அரசனை நம்பி புருசனைக் கைவிட்ட கதையாக, ஜனாதிபதி மக்களைக் கைவிட்ட கதை மாறவும் கூடும். தனிமனித ஜனாதிபதியின் அதிகாரம் வெல்லுமா? மக்களின் ஜனநாயக உரிமை வெல்லுமா? என்பதற்கு விரைவில் மக்கள் சக்தியே பதிலளிக்கும். அதிகாரத்தில் மிதந்த பல அதிகாரர், சதிகாரர் வரலாற்றில் காணாமல் போனதை நம்மவர்கள் அதிகார மமதையால் மறந்து விடுகின்றார்கள்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)