
posted 14th March 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
குறுகிய காலத்தில் நிறைவான சேவை
சம்மாந்துறை பிரதேச சபையின் புதிய தவிசாளராக, தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் பதவியேற்ற குறுகிய காலத்துள் நிறைவான மக்கள் சேவையை ஆற்றிவருவது பாராட்டத்தக்கதாகும்”
இவ்வாறு சம்மாந்துறை பிரதேச சபையின் உறுப்பினரும் முன்னாள் பிரதி தவிசாளருமான எம்.ஏ. தம்பிகண்டு புகழாரம் சூட்டினார். சம்மாந்துறை பிரதேச சபையின் மாதாந்த சபை அமர்வில் உரையாற்றும் போதே புதிய தவிசாளர் தொடர்பில் மேற்கண்டவாறு கூறினார்.
சபையின் 60 ஆவது மாதாந்த சபை அமர்வு தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் தலைமையில் சபை சபா மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது உரையாற்றிய உறுப்பினர் எம்.ஏ. தம்பிக்கண்டு மேலும் பின்வருமாறு கூறினார்.
“நமது புதிய தவிசாளர் மாஹிர் அவர்கள் பதவியேற்ற குறுகிய காலத்துள் நிறைவான மக்கள் சேவைகளை முன்னெடுத்துவருவது பாராட்டுக்குரியதாகும்.
பொறுப்பு வாய்ந்த தவிசாளர் பதவிக்கு முன்னுதாரணமாகத் திகழும் அவர் மக்களின் காலடிக்கே சென்று மக்கள் பிரச்சினைகளைக் கேட்டறிந்தும், நேரில் அவதானித்தும் தம்பணியை வெற்றிகரமாக முன்னெடுத்து வருகின்றார்.
சம்மாந்துறைப் பிரதேசத்திற்கும், மக்களுக்கும் எதிர்காலத்திலும் அவரது சேவைகள் தொடர வேண்டுமெனப் பிரார்த்திக்கின்றேன்.
இதேவேளை, சம்மாந்துறையில் இயங்கி வந்த இலங்கை போக்குவரத்து சபையின் சாலை (டிப்போ) கொரோனா காரணமாக கல்முனை டிப்போவுடன் இணைத்து மாற்றப்பட்டுள்ளது. இந்த சாலை சம்மாந்துறைக்கு மிக முக்கியமான தேவையாகும். எனவே உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து மீண்டும் சம்மாந்துறை பஸ் டிப்போவைத் திறந்து சேவைகள் தொடர ஆவன செய்யப்பட வேண்டும்.
அதேபோல் 200 இற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றிய சம்மாந்துறை பல நோக்கு கூட்டுறவுச் சங்க சமாஜம் புனருத்தாபனம் செய்யப்பட்டு மக்களுக்கு கூட்டுறவு சேவை கிடைக்கவும் ஆவன செய்யப்பட வேண்டும்” எனவும் உறுப்பினர் தம்பிக்கண்டு தமது உரையில் வலியுறுத்தினார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)