
posted 1st March 2023
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வரிக்கொள்கையை நீக்குதல், உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தக் கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று (01) புதன் கிழமை முன்னெடுக்கப்பட்ட ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் கிழக்கு மாகாணத்திலும் எதிரொலித்தது.
இலங்கையின் 40 இற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் பங்கு கொண்ட இந்த அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தையொட்டிய ஆர்ப்பாட்டங்களும் பல முக்கிய பிரதேசங்களில் இடம்பெற்றன.
குறிப்பாக அரச வைத்திய அதிகாரிகள் மற்றும் சுகாதாரத்துறை சார்ந்தோர் வேலை நிறுத்தத்தில் பங்கு கொண்டதால் பல வைத்தியசாலைகளில் அவசர சிகிச்சைகள் மட்டுமே இடம்பெற்றதுடன், ஏனைய பிரிவுகள் இயங்காத நிலை காணப்பட்டது.
அதேபோல் அரச வங்கிகளான மக்கள் வங்கி, இலங்கை வங்கி என்பன மூடப்பட்டிருந்ததால், வாடிக்கையாளர்கள் வங்கி நடவடிக்கைகளுக்காக வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
எனினும் சில தனியார் வங்கிகள் கிழக்கில் வழமைபோல் இயங்கியதையும் அவதானிக்க முடிந்தது
இதேவேளை இன்று அம்பாறை மாவட்டத்தில் பல்வேறு தொழிற்சங்கத்தினரும் இணைந்து குறித்த கோரிக்கைகளை வலியுறுத்தி பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றிலும் ஈடுபட்டனர்.
அம்பாறை நகரின் றீகல் சந்தியில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அரச வைத்திய அதிகாரிகள் சங்க உறுப்பினர்கள் பல்கலைக்கழக விரிவுவரையாளர்கள், இலங்கை மின்சார சபையினர் உட்பட பல்வேறு தொழிற்சங்கத்தினரும் பங்கு கொண்டிருந்தனர்.
தமது கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்காதுவிடின் விரைவில் தொடர்வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதிக்கவுள்ளதாகவும் தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)