
posted 13th February 2023
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அத்தியடிப் பகுதியில் பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அந்தப் பகுதியில் கணவனைப் பிரிந்து தனித்து வாழும் ஒரு பிள்ளையின் தாய் ஒருவரே சந்தேகத்துக்கிடமான முறையில் இறந்துள்ளார்.
சுப்பிரமணியம் கலாநிதி (வயது-52) என்ற பெண் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலை இடம்பெற்ற வீட்டுக்கு ஒரு நபர் நீண்ட காலமாக ஆடுகளுக்கு குழை வெட்ட, வீட்டு
வேலைகளுக்காக வருகை தருவார். நேற்று முன்தினம் காலையும் அவர் வழமைபோல் வருகை தந்து இரவு வரை வீட்டில் வேலை செய்து கொண்டிருந்துள்ளார். இறந்தவரின் மகள் வீட்டுக்குள் இருந்துள்ளார்.
வேலைக்காக வருபவரும் தாயாரும் சண்டை பிடிக்கும் சத்தம் கேட்டு மகள் வெளியே வந்து பார்த்தபோது வேலை செய்து கொண்டிருந்த வரை காணவில்லை எனவும் தாயார் இரத்தம் தோய்ந்த நிலையில் நிலத்தில் கிடந்தார் எனவும் விசாரணைகளின்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையின்போது குறித்த நபர் மரக்கட்டை ஒன்றினால் பெண்ணைத் தலையில் தாக்கி விட்டுச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் தடயவியல் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)