
posted 5th March 2023
இலங்கையில் பிரசித்திபெற்ற கத்தோலிக்க யாத்திரைத் தலங்களில் ஒன்றான கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழா நேற்று (04) சனிக்கிழமை பெருந்திரளான மக்களுடன் கூட்டுத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு நிறைவடைந்தது. இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலங்கை - இந்திய பக்தர்கள் பங்கேற்றனர்.
கச்சதீவு அந்தோனியார் ஆலய திருவிழா நேற்று முன்தினம் வெள்ளி மாலை 4 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. தொடர்ந்து இரவு விசேட நற்கருணை ஆராதனைகள் இடம்பெற்று சுற்றுப்பிரகாரமும் நடைபெற்றது.
திருவிழாவின் நிறைவு நாளான நேற்று (04) சனிகாலை 6 மணிக்கு திருச்செபமாலை இடம்பெற்றது. 6.30 மணிக்கு ஆயர் மற்றும் அருட்தந்தையர்கள் வரவேற்கப்பட்டு 7 மணிக்கு திருவிழா கூட்டுத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
திருவிழா திருப்பலி கொழும்பு மறை மாவட்டத்தின் துணை ஆயர் அருட்தந்தை அன்ரன் ரஞ்ஜித் பிள்ளைநாயகம் மற்றும் யாழ்ப்பாணம் மறை மாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ப. யோ. ஜெபரட்ணம் அடிகளார் ஆகியோர் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்டது.
கொரோனா தொற்று பரவலால் கடந்த வருடங்களில் பக்தர்களுக்கான அனுமதி மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் இந்த ஆண்டே பக்தர்களின் பங்கேற்புக்கு அனுமதி வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)