
posted 8th March 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சமூக ஆதரவுக்கான ஒன்றுகூடல் நிகழ்வு நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இடம்பெற்றது
நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் கே.எல்.எம். ரயீஸ் தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம் சி பைசால் காசிம், நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம். தாஹிர், நிந்தவூர் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் சஹீலா இஸ்ஸதீன், நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எம்.எம். நஜீப், நிந்தவூர் அனர்த்த முகாமைத்துவ அணியின் பிரதிநிதிகள், பள்ளிவாசல் நம்பிக்கையாளர்கள், உலமாக்கள், பாடசாலை அதிபர்கள் பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது கருத்து தெரிவிக்கையில், சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ எம் றயீஸ், சமூக ஆதரவுக்கான நிலையத்தினை ஆரம்பிப்பது பற்றிய அறிமுக விளக்கத்தை முன்வைத்தார் .
அத்துடன் போதைப் பொருள் பாவனை ஒழித்து கட்டி ஆத்மீக ரீதியாக மக்களை நல்வழிப்படுத்த நிந்தவூரில் உள்ள ஜூம்ஆ பள்ளிவாசல்களில் போதைப்பொருள் விழிப்புணர்வு பற்றிய மார்க்கச் சொற்பொழிவுகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
நிந்தவூர் பிரதேசத்தில் இருந்து போதைப்பொருள் பாவனையை இல்லாமல் செய்வதற்கான முயற்சியில் நிந்தவூர் பொலிஸ் புலனாய்வு பிரிவினர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றனர். இவர்களது அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கது என குறிப்பிட்டார்.
நிந்தவூர் ஜும்மா பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் பொருளாளர் ஏ.எல். அன்வர்தீன் கருத்து தெரிவிக்கையில், போதைப்பொருள் பாவனையாளர்களை முதலில் இனங்காணல் வேண்டும். பின்னர் இதில் இவற்றில் இருந்து அவர்களை மீட்டெடுத்து புணர்வாழ்வு வழங்க முறையான திட்டம் அமைக்க வேண்டும் எனக் கூறினார்.
பாராளுமன்ற உறுப்பினர் எம் சி பைசால் காசிம் இதன் போது உரையாற்றுகையில், பள்ளிவாசல் நிர்வாகத்திற்கான உறுப்பினர்கள் தெரிவின் போது தொழுகையாளிகளையும், நேர்மையானவர்களையும், சமூக அக்கறை உள்ளவர்களையும், மாணவர்களுடன் தொடர்புடைய ஆசிரியர்களையும் தெரிவு செய்ய வேண்டும் .
மேலும் போதைப்பொருள் சார்ந்த பிரச்சினைகளை தீர்க்க பள்ளிவாசல் நிர்வாகத்திடம் தைரியம் காணப்படல் வேண்டும். போதைப்பொருள் விடயத்தில் பள்ளிவாசல்கள் முன்னின்று செயற்பட வேண்டும். பொலிஸ் இது தொடர்பிலான சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும்.
போதைப்பொருள் பாவனையாளர்கள் பற்றிய தகவல்களை நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக சமூதாய ஆதரவு நிலையத்திற்கு அறிவிக்க வேண்டும் . அதன் மூலம் தேவையான உணவள ஆற்றுப்படுத்தல்கள் முன்னெடுக்கப்படும். மாறாக மையவாடிகளில் போதைப்பொருள் பாவனையாளர்களுக்கு தனியான அடக்கஸ்தலம் பொருத்தமற்றது எனக் கூறினார்
நிந்தவூர் பொலிஸ் பொறுப்பு அதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் நஜீப் கருத்து தெரிவிக்கையில்,
நிந்தவூரில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துக் காணப்படுகின்றது. பலர் போதைவஸ்து வியாபாரத்தில் முதலீடு செய்கின்றனர்.
அண்மையில் போதைப்பொருள் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் 8 பேரினை விசாரணை செய்ததில் பலர் இதில் முதலீடு செய்துள்ளனர். இவர்களை தடுக்க முடியுமானால் அதுவே பாரிய வெற்றியாகும்.
இதற்காக மக்கள் ஒத்துழைப்பு வழங்குவது குறைவு. போதைப்பொருள் தொடர்பில் இவ்வருடம் 42 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதனை தடுக்க பள்ளிவாசல்கள் முன்வர வேண்டும் .
பள்ளிவாசல்கள் மக்களை பள்ளியின் பக்கம் அழைக்க வேண்டும். இதன் மூலம் போதைப்பொருள் பாவனையை ஒழிக்கமுடியும். போதைப்பொருள் பாவனையை இந்தப் பிரதேசத்தில் இருந்து முற்றாக ஒழித்துக்கட்ட சட்டத்தை சரியாகப் பயன்படுத்துவேன்.
இந்த போதைப் பொருள் பாவனையை ஒழித்து கட்டுவதில் பாடசாலைகளின் ஒத்துழைப்பு குறைவு. அதிபர்கள் போதைப்பொருள் தொடர்பான விழிப்புணர்வு கூட்டங்களுக்கு பெற்றோர்களை ஒன்று திரட்டி தர வேண்டும். போதைவஸ்துக்கு அடிமையானவர்களை இனங்காணல் வேண்டும். அதற்கு நிபுணத்துவ குழுவை அமைக்க வேண்டும்.
நிந்தவூரில் உள்ள சில தென்னைந் தோப்புகளிலும் போதைப்பொருள் பாவனை நடைபெறுகின்றது. இது போன்ற பராமரிப்பற்ற இடங்களினை பராமரிக்க முறையான திட்டம் அமைக்க வேண்டும். போதைப்பொருள் பாவனையை தடுப்பதற்கான சமூக ஆதரவு நிலையத்தை பலப்படுத்தி, நிந்தவூரில் இருந்து இதனை ஒழித்துக்கட்ட அதிக பட்ச தண்டனையை பெற்றுக் கொடுக்க உதவுவேன் எனக் கூறினார்
ஆதார வைத்தியசாலையின் தாதிய உத்தியோகத்தர் உமர் அலி அவர்கள் உரையாற்றுகையில், நிந்தவூரில் உள்ள 32 உளவளத்துணை டிப்ளோமா முடித்தவர்கள் கொண்டு போதைப்பொருள் பாவனையாளர்களை நல்வழிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறினார்.
நிந்தவூர் ஜும்மா பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் ஏ எல் அன்வர்தீன் உரையாற்றுகையில்,
போதைப்பொருள் பாவனையாளர்களை இனங்கண்டு பொலிஸில் ஒப்படைத்தாலும் அவர்கள் விடுதலையாகின்றனர். போதைப்பொருள் ஒழிப்பில் மஹல்லா ரீதியாக ஐந்து பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட உள்ளதாகவும் சூறா சபையினை தாபிக்க வேண்டும் எனவும் முன்மொழிந்தார் .
ஆதரா வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அத்தியட்சகர் திருமதி ஸஹீலா இஸ்ஸதீன் அவர்கள் உரையாற்றுகையில் போதைப்பொருள் பாவனையாளர்கள் நேரடியாக அனுமதிக்கப்படுவதில்லை. ஆரம்ப தடுப்பு முறை, இரண்டாம் நிலை தடுப்பு முறைகளை மேற்கொள்கின்றோம். மூன்றாம் நிலை தடுப்பு முறைக்கு புதிய யுக்திகளை கையாள வேண்டும் எனக் கூறினார்.
சமூக ஆர்வலர் சம்சுன் அலி கருத்து தெரிவிக்கையில், போதைப்பொருள் ஒழிப்புக்கு இளைஞர் கழகங்களையும் உள்வாங்க வேண்டும் என்றார்.
நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிர் உரையாற்றுகையில், போதைப்பொருள் தொடர்பான அச்சுறுத்தல்களை மூடிமறைக்காமல் பள்ளிவாசல்கள் , கோயில்கள் செயற்பட வேண்டும் .
போதைப் பொருளை ஒழிக்க வேண்டுமானால் பள்ளி நிர்வாகத்திடம் இருக்கும் அச்சத்தைப் போக்க வேண்டும். போதைப்பொருள் வியாபாரிகள் மற்றும் பாவனையாளர்களின் பெயர்களை காட்சிப்படுத்தல் வேண்டும் .
பொலிஸ் நிலைய பொறுப்பு அதிகாரி தெரிவித்தாவது; கைது செய்யப்பட்ட போதை பாவனையாளர்களின் பெயர் விலாசத்தை தெரிவிக்க வேண்டும். ஜனாசாக்களை அடக்கம் செய்ய வேண்டுமானால் பிரதேச சபையிடம் முன்அனுமதி பெறப்படல் வேண்டும்.
போதைப்பொருள் பாவனையை தடுக்க போதைப்பொருள் பயன்படுத்தி மரணித்த ஜனசாக்களை மையவாடிகளில் அடக்க தனியான இடத்தை ஒதுக்க அறிவித்தல் பலகையை சபையின் தீர்மானத்துடன் காட்சிப்படுத்தினோம் எனக் கூறினார்.
நிந்தவூர் பிரதேச சபையின் மு. கா. சார்பான வன்னியார் வட்டார வேட்பாளர் ஆசிப் பைசால் கருத்து தெரிவிக்கையில்; நிந்தவூரில் போதை பொருள் பாவணையாளர்களை பிரத்தியேகமான மையவாடியில் அடக்கம் செய்வதெனின் அங்கு சிகரட் பாவனையாளர்களின் ஜனாசாக்களையும் சேர்த்து அடக்கலாம் என்ற திட்டத்தை முன்மொழிந்தார்.
நிந்தவூர் பிரதேச செயலக நிர்வாக கிராம சேவை உத்தியோகத்தர் ஏ எல் பைறூஸ் , போதைப்பொருள் பாவனையை ஒழிக்க பிரதேச செயலக கட்டமைப்புக்குள் நின்று ஆதரவு வழங்குவதாக உறுதிகூறினார். அத்துடன் சமுதாய ஆதரவு நிலையத்திற்கு பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள கட்டிட இடவசதியை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும்.
சட்டத்தரணி மர்சூம் மௌலானா, சிகரட்டும் போதைப்பொருள் . போதைப்பொருள் ஒழிப்புக்காக உச்சகட்ட நடவடிக்கை மேற்கொண்டாலும் அதை ஒழிக்க முடியவில்லை. அதனால் இவ்விடயத்தை விட்டு வேறொரு தலைப்பினை பேசலாம். ஜம்இய்யத்துல் உலமா சபையுடன் இது தொடர்பாக பேச வேண்டும் .
அனர்த்த முகாமைத்துவ அணியின் உறுப்பினர்கள் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்கு தொடர்ந்தும் முயற்சித்து வருகின்றனர்.
உதவி கல்வி பணிப்பாளர் எம் ஏ எம் றஸீன் கூறுகையில், போதைப்பொருள் ஒழிப்பு பற்றி தெளிவாக பேச வேண்டும் எனக் கூறினார்.
இந்த ஒன்று கூடலில், ஒருவர் போதைப்பொருள் பயன்படுத்தி அல்லது விற்று அல்லது உடந்தையாகி அவருக்கெதிராக நீதிமன்றத்தில் தண்டனை வழங்கப்பட்டு தொடர்ந்து பள்ளிவாசல்கள் மூலம் அறிவுரைகள் வழங்கப்பட்டும் கூட அவர் மீண்டும் திருந்தாமல் மரணித்தால் அவரை நிந்தவூர் மையவாடியில் தனியான இடத்தில் அடக்கம் செய்வது பற்றி ஜும்ஆ பள்ளிகளில் தெளிவூட்டல் சொற்பொழிவு இரண்டுவார காலத்தில் செய்யபட கால அவகாசம் வழங்கப்படுவதென என ஏகமானதாக தீர்மானிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)