
posted 20th March 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
உள்ளூராட்சி சபைகளினது ஊழல்களை விசாரிக்க ஆணைக்குழு வேண்டும்
உள்ளூராட்சி சபைகளின் ஊழல்களை விசாரிக்க அரசாங்கம் உடனடியாக விசேட ஆணைக்குழு ஒன்றை நியமிக்க வேண்டும் என்று ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் செயலாளர் நாயகமும், சுகாதார துறை முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம். ரி. ஹசன் அலி தெரிவித்தார்.
இவர் நிந்தவூரில் நேற்று (19) ஞாயிற்றுக்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்து இது தொடர்பாக பேசியபோது மேலும் தெரிவித்தவை வருமாறு;
உள்ளூராட்சி சபைகள் 19 ஆம் திகதி நள்ளிரவு முதல் கலைக்கப்பட்டு உள்ளன. அதே நேரத்தில் பல சபைகளிலும் ஊழல்கள் இடம்பெற்று உள்ளன என்று குற்றம் சாட்டப்பட்டு வருகின்றது. ஊழல்கள் சபை உறுப்பினர்களுடன் சம்பந்தப்படுத்தி பேசப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
எனவே சபைகளைக் கலைத்துள்ள அரசாங்கம் ஊழல்கள் தொடர்பாக விசாரிக்க உடனடியாக விசேட ஆணை குழு ஒன்றை நியமிக்க வேண்டும். நாடு இன்று எதிர்கொண்டு உள்ள பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய காரணம் ஊழல் ஆகும். எனவே ஊழல் குறித்த விசாரணை உடனடியாக நடத்தப்பட வேண்டும்.
ஊழல் பெருச்சாளிகளை மக்கள் அடையாளம் காண வேண்டியது அவசியம். அப்போதுதான் எதிர்கால தேர்தல்களில் சரியானவர்களுக்கு வாக்களிப்பார்கள். இதற்காகவும் உடனடியாக ஊழல் விசாரணை நடத்தப்பட்டு ஊழல் பெருச்சாளிகள் அம்பலப்படுத்தப்பட வேண்டும் என்று நாம் வலியுறுத்துகின்றோம்.
இதே நேரம் கலைக்கப்பட்ட சபைகளின் நிர்வாகம் மாகாண ஆளுனர்களுக்கு கீழ் கொண்டு வரப்படவே கூடாது. மேலும், கலைக்கப்ப்பட்ட சபைகளின் நிர்வாக கட்டமைப்புக்குள் எந்த வகையிலும் கலைக்கப்பட்ட உறுப்பினர்கள் மீண்டும் உள்ளீர்க்கப்படவும் கூடாது.
ஏனென்றால் சபைகளில் இடம்பெற்று இருக்கக் கூடிய ஊழல்கள் மறைக்கப்படவும், ஊழல்களோடு சம்பந்தப்பட்டு இருக்க கூடிய உறுப்பினர்கள் காப்பாற்றப்படவும் இவை வழி ஏற்படுத்தி விடும்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)