
posted 24th March 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
ஆடுகளமாக மாறப்போகும் சபைகள்
கலைக்கப்பட்ட உள்ளுராட்சி சபைகள் ஆளும் அதிகார சக்திகளின் ஆடுகளமாக மாறப்போகும் நிலை ஏற்படும் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜி. ஸ்ரீநேசன் எச்சரித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில் ஜனாதிபதியும் ஆளும் கட்சியினரும் எந்தவோர் தேர்தலையும் விரும்பவில்லை. இதற்கான மூலகாரணம் தேர்தலில் ஆளும் கட்சியினர் படுதோல்வி அடைவார்கள் என்ற அச்சமே ஆகும்.
இந்த நிலையில், உள்ளூராட்சிச் சபைகள் கலைக்கப்பட்டமையால், 340 உள்ளூராட்சி சபைகளும் ஆளுனர்களின் அதிகாரப் பிடிக்குள் வந்துள்ளன.ஏற்கனவே 9 மாகாண சபைகளும் ஆளுனர்களின் முழுமையான அதிகாரப் பிடிக்குள் வந்து 5 வருடங்களாக அடங்கிக் கிடக்கின்றன. ஆயின், நாட்டில் தேர்தல்கள் இல்லாத, மக்கள் பிரதிநிதிகள் இல்லாத சபைகளாக உள்ளூராட்சி சபைகள், மாகாண சபைகள் ஆக்கப்பட்டுள்ளன. எனவே ஆளுனர்கள் தமது அதிகாரங்களைக் கொண்டு ஜனாதிபதிக்கும், பொதுஜனப் பெரமுனக் கட்சிக்கும் மிகவும் விசுவாசமான அதிகாரிகளை நியமனம் செய்வதற்கு வாய்ப்புள்ளது. இவர்கள் உள்ளூராட்சி சபைகளின் ஆணையாளர்களாக, செயலாளர்களாக இருந்து பணியாற்றப் போகின்றார்கள். குறிப்பாக கிழக்கு மாகாண ஆளுனர் மாகாணசபையில் திருப்தியீனமாக நடந்துகொள்வது போல், உள்ளூராட்சி சபைகளின் அதிகாரிகள் நியமனத்திலும் நடந்து கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, தேர்தல் இல்லாத நிலையில் மாகாண சபைகளைப்போல், உள்ளூராட்சிசபைகளும் ஆளும் கட்சியின் அதிகார ஆடுகளமாக மாறப்போகின்றது. ஏற்கனவே பிரதேச செயலகங்கள், மாவட்டச் செயலகங்கள் மூலமாக மக்களுக்கான நிவாரணங்கள், தொழில் சார் உதவிகளில் ஆளும் கட்சி ஆதரவாளர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுவதாக மக்கள் கவலை வெளியிடுகின்றனர். குறிப்பாக, மட்டக்களப்பில் தோணிகள், வலைகள், துவிச்சக்கர வண்டிகள், வீடுகள், ஆடுகள், கோழிக் குஞ்சுகள், நிவாரணங்கள் வழங்குவதில் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளன என்று மக்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள். இப்படியான போக்குகள் உள்ளூராட்சி சபைகளிலும் தொற்றிக்கொள்ள வாய்ப்புள்ளது. தேர்தல்கள் இல்லாத மக்கள் பிரதிநிதிகள் இல்லாத சூழல் மேலும் மக்களுக்கு ஆபத்தாக அமைய இடமளிக்கலாம். ஏற்கனவே கிழக்கு மாகாண ஆளுனர், தமக்குச் சார்பான ஆணையாளர் ஒருவரை மட்டக்களப்பு மாநகர சபையில் நியமித்து மாநகர அபிவிருத்திகளை முடக்கியமை குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும், 2020 இல் பாராளுமன்றத் தேர்தலில் பூச்சியத் தோல்வியடைந்தவர், ஐக்கிய தேசியக் கட்சியை தலைமையேற்று வழிநடாத்தியவர், தற்போதைய ஜனாதிபதி ரணில் ஆவார். அப்படியான ஒருவர்தான் தற்போதைய ஜனாதிபதியாவார். பாராளுமன்றத்தில் மக்கள் வாக்குகள் மூலமாக, மக்கள் இறைமை மூலமாக ஒரு ஆசனத்தைக்கூட பெற முடியாத ஒருவர் அதிஷ்டவசமாக ஜனாதிபதியாகியுள்ளார். இப்படியான ஒருவர் உளவியல்ரீதியாக மக்களையும் தேர்தலையும் கண்டு அஞ்சவே செய்வார். இவர் தனது உச்சமான அதிகாரத்தையும், தந்திரோபாயத்தையும் கொண்டு தேர்தல்களை இயன்றவரை தவிர்க்கவே செய்வார். அதனையே அவர் செய்து கொண்டு வருகின்றார். தன்னை நிராகரித்த மக்களைப் பழி தீர்ப்பது போன்று ஜனாதிபதி செயற்படுகின்றார்.
அதேவேளை, தம்மைத் தேர்ந்தெடுத்த பொதுஜனப் பெரமுன அரசாங்கத்தையும், அந்தப் பாராளுமன்ற உறுப்பினர்களையும் பாதுகாக்கும் நோக்குடன் ஜனாதிபதி செயற்படுவது போல் தெரிகிறது. அதன் அடையாளமாக தேர்தல்கள் தவிர்க்கப்படுகின்றன. தேர்தலைக் கோரி ஆர்ப்பாட்டம் செய்யும் மக்கள் பொலிஸ் இராணுவ பலத்தினால் ஒடுக்கப்படுகின்றனர். அதில் இரு உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளன. மக்கள் இறைமை அற்ற ஜனாதிபதி மக்கள் போராட்டத்தினால் நிராகரிக்கப்பட்ட பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் பாதுகாவலராக மாறிவிட்டார். மக்களின் பணத்தை ஏப்பமிட்ட, மோசடிகள் செய்த ஆட்சியாளர்களின் பாதுகாப்புக் கவசமாக ஜனாதிபதி மாறியுள்ளார். நாட்டைக் கொள்ளையடிப்பது மட்டுமல்ல குற்றம், கொள்ளையர்ககளைப் பாதுகாப்பதும் குற்றமாகும் என்பதை ஜனாதிபதி அறிந்துகொள்ள வேண்டும்.
இந்த நிலையில், ஆளும் அதிகாரர்களின் நியமனக் களமாகவும், அரசியல் இலாப நோக்க ஆடுகளமாகவும் சபைைள் மாற இடமுண்டு. மக்களும் எதிர்க்கட்சிகளும் இணைந்தால் இதற்கான பதிலை விரைவாக அளிக்க முடியும். ஜனநாயக விரோத அதிகார சக்திக்கு மக்கள் சக்தியே அதிர்ச்சியான வைத்தியம் அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)