
posted 21st March 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
அரசியலை வாழ்க்கையை கட்டியெழுப்புவதற்காகப் பயன்படுத்துங்கள்
மன்னார் மாவட்டத்தில் எமக்கு தெரிந்தும் தெரியாமலும் பாரிய அழிவு ஒன்று எற்படுத்தப்பட்டு வருகின்றது என்ற கசப்பான உண்மையை நாம் உணர வேண்டும். அரசியல் என்பது அது வியாபாரமல்ல. அது மக்களின் வாழ்க்கையை கட்டியெழுப்புவதற்காக, மக்களை வழிநடுத்துவதற்கான ஒரு சிறந்த சாதனமாகும். ஆகவே அரசியலில் கீழ்மட்டத்திலுள்ள உள்ளுராட்சி மன்றத்தின் அரசியல் வாதிகளாக இருப்பவர்கள் எமது பிரதேசத்தை காப்பாற்ற உயர்மட்ட கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என மௌலவி எஸ்.ஏ. அஸீம் அவர்கள் தெரிவித்தார்.
இலங்கை தேசிய சமாதன பேரவை மற்றும் தொடர்பாடல் மையத்தின் ஏற்பாட்டில் உள்ளுராட்சி மன்ற அரசியல் பிரதிநிதிகளுக்கான செயல் அமர்வில் மன்னார் நகர் மூர்வீதி ஜூம்மா பெரிய பள்ளிவாசல் பிரதான மௌலவியாகவும், மன்னார் மாவட்ட உலமா சபையின் உப தலைவராகவும் மன்னார் பிரஜைகள் குழுவின் பணிப்பாளர் சபையில் உறுப்பினராகவும் , மன்னார் மாவட்டத்தில் சர்வ மதத் தலைவர் குழுமத்தில் ஒரு முக்கியஸ்தராகவும் மற்றும் இலங்கை தேசிய சமாதான பேரவையின் மன்னார் மாவட்டத்தில் ஒரு உறுப்பினாராக இருந்து வரும் மௌலவி எஸ்.ஏ. அஸீம் அவர்கள் இவர்கள் மத்தியில் தொடர்ந்து தனது உரையில்;
இன்றைய காலத்தில் அரசியல் எவருக்கும் தெரியாது என்று சொல்ல முடியாத அளவுக்கு யாவரும் அரசியல் தொடர்பான கருத்துக்களை சொல்லுமளவுக்கு உள்ள கால கட்டத்தில்தான் நாம் தற்பொழுது இருக்கின்றோம்.
மன்னார் மாவட்டத்தை பொறுத்தமட்டில் சமய சக வாழ்வு என்பது கடந்த காலத்தில் ஒரு பேசும் பொருளாக இருந்துள்ளது.
மதங்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள், மோதல்கள், மதச் சின்னங்களை அழித்தல் , ஆர்ப்பாட்டங்கள் என பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றுள்ள நிலைகள் காணப்பட்டன.
சர்வதேசம் இவ்விடயத்தில் மன்னார் மாவட்டத்ததை திரும்பி பார்க்கும் அளவுக்கு சமீப காலமாக அரசியல் கலந்த துர்பாக்கிய நிலைகள் காணப்பட்டன.
இதை கவனத்தில் எடுத்துக் கொண்ட தேசிய சமாதான பேரவை சமய சக வாழ்வு இன ஐக்கியம் என்பவற்றை அரசியலில் ஒரு புரிந்துணர்வை எற்படுத்தி நல்ல எதிர்கால சமூகத்தை உருவாக்கும் நோக்குடன் ஒரு வேலைத் திட்டத்தை உருவாக்கியுள்ளது.
இதன் காரணமாக சில நனவுகள் வெற்றிக் கொண்டது. சில தோல்விளையும் கண்டுள்ளது. இருந்தும் தோல்வியை கண்டு நாம் பின் நிற்கவில்லை. அவற்றிலும் வெற்றிக்காண நாம் தொடர்ந்து முயற்சிகளை முன்னெடுத்துச் செல்லுகின்றோம்.
மன்னார் மாவட்டத்தில் ஒரு சில சமய சமூகப் பிரச்சனைகள் அரசியல் மயமாக்கப்பட்டு வந்தபோதும் யாவரும் பேசி சுமூக நிலைக்கு வருவதற்கு ஒரு களத்தை தேசிய சமாதான பேரவை உள்ளுர்மட்ட பிரதேச சமாதான பேரவையூடாக களம் அமைத்துள்ளது. அதில் இன்றைய இவ்வாய்ப்பானது எமக்கு நல்லதென்றென உணர்கின்றோம்.
மன்னார் மாவட்டத்தில் எமக்கு தெரிந்தும் தெரியாமலும் பாரிய அழிவு ஒன்று எற்படுத்தப்பட்டு வருகின்றது என்ற கசப்பான உண்மையை நாம் உணர வேண்டும்.
இந்த விடயத்தை உள்ளுர் அரசியல் பிரதிநிதிகளுக்கு தெளிவுபடுத்துவதன் மூலம் குறிப்பாக 30 கிலோ மீற்றர் நீளம் 4 கிலோ மீற்றர் அகலம் கொண்ட மன்னார் தீவில் மனிதர்கள் தொடர்ந்து வாழ முடியுமா என்ற ஒரு சந்தேகத்தில் இருந்து வருகின்றோம்.
மன்னார் தீவில் பொறுத்தப்பட்ட மின் காற்றாலையால் மன்னார் தீவு மக்கள் பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து வரும் இந்நிலையில் தொடர்ந்தும் பல நூறு காற்றாலைகள் பொறுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மறுபுறம் இதே தீவில் கனியவள மணல் அகழ்வுக்கான ஆய்வுகளும் முடிவுற்று அகழ்வுகளுக்கான ஆயத்தங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மன்னார் மாவட்ட மக்களிடம் இருந்த காணிகள் கைநழுவிய நிலையில், மீனவர்கள் தொழில் செய்ய முடியாத நிலை, அன்றாடம் கால்நடைகளின் மூலம் வாழ்வாதாரத்தை நம்பியிருந்தவர்கள் இவற்றை கைவிடும் நிலை, இவ்வாறு பனை, தென்னை வளங்களை இழக்கும் நிலை யாவும் மக்களைவிட்டு நழுவிச் சென்று கொண்டிருக்கின்றன.
மன்னார் மாவட்டத்தில் மூன்றில் இரண்டு பகுதி மக்கள் மன்னார் தீவிலேயே வாழ்ந்து வருகின்றனர். இந்த மக்களின் சனத்தொகைக்கு ஏற்ப நிலம் இருக்கின்றதா என்றால் இதுவும் எம்மிடமிருந்து படிப்படியாக பறிபோய்க் கொண்டு இருக்கினறது.
அத்துடன், இந்திய மீனவர்களினால் தொழில்களும் நாசமாக்கப்பட்ட நிலையில் வறுமைக்குள்ளும் நாம் நசுக்கப்பட்டு வருகின்றோம்.
யாராவது அரசியல் செய்ய வேண்டுமானால் மக்கள் அந்த இடத்தில் குடியிருக்க வேண்டும். மக்கள் குடியிருக்க அவர்களுக்கு நிலம் இருக்க வேண்டும்.
இவ்வாறான சூழ்நிலையிலேயே நாம் தேர்தலையும் எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றோம். அரசியல் என்பது வியாபாரமல்ல. அது மக்களின் வாழ்க்கையை கட்டியெழுப்புவதற்காக மக்களை வழிநடுத்துவதற்கான ஒரு சிறந்த சாதனமாகும்.
இன்று எங்கும் அரசியல் எதிலும் அரசியல் என்ற நிலையே காணப்படுகின்றது. இங்கு கூடியிருக்கும் நீங்கள் வெறுமனே வேட்பாளர்கள் அல்ல.
ஆகவே,
- எமது கட்சிகளின் சார்பாக நாம் மக்களுக்கு என்ன செய்யப் போகின்றோம்?
- நாம் எதிர்நோக்கும் அழிவுகளை நிறுத்துவதற்கு என்ன செய்யப் போகின்றோம்?
- இந்த மாவட்டத்தின் கல்வி, கலாச்சாரம், விழுமியங்களைப் பாதுகாக்க நாம் என்ன செய்யப் போகின்றோம்?
- எமது மாவட்டத்தின் அபிவிருத்திக்காக என்ன செய்யப் போகின்றோம்?
என்ற சிந்தனைகள் எம் ஒவ்வொரு மனதிலும் உதிக்க வேண்டும்.
ஆகவே, கீழ்மட்ட அரசியலில் இருக்கும் உள்ளுராட்சி உறுப்பினர்கள் மக்களுக்கு இவ்வாறான விடயங்களை தெளிவூட்ட வேண்டிய தேவைகள் இருக்கிறது.
அத்துடன் இவற்றை உங்கள் கட்சிகள் உயர் மட்டங்களுக்கு நீங்கள் எடுத்துச் செல்லும் தேவைகளும் உங்களுக்கு இருக்கின்றது.
ஆகவே, இவற்றை நீங்கள் உள்வாங்கி தூய்மையான அரசியலை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். எமது மாவட்டம், அதன் வளர்ச்சி, நவீனத்துவம் போன்ற எண்ணப்பாடுகள் உங்களிடம் குடிகொண்டிருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)