
posted 26th March 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
அமரர் சைவப்புலவர் சு. செல்லத்துரை அவர்களின் நினைவு தினம்
இளம் தலைமுறையினரின் அறிவையும் ஆற்றல்களையும் வளர்த்து அவர்களை சமூகத்தில் உயரவைத்தவர் அமரர் சைவப்புலவர் சு. செல்லத்துரை அவர்கள் எனக் கல்வி அமைச்சின் மேலதிகச் செயலாளர் மேனாள் உடுவை. எஸ். தில்லைநடராசா தனது ஊடகச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 28ந் திகதி கலாபூசணம் சைவப்புலவர் சு. செல்லத்துரை அவர்களின் 85ம் ஆண்டு பிறந்தநாள் நினைவு தினத்தை முன்னிட்டு உடுவை.எஸ். தில்லைநடராசா மேலும் தெரிவிக்கையில்:
சுமார் எண்பது ஆண்டுகள் எம் மக்கள் மத்தியில் வாழ்ந்து, சுமார் அறுபது ஆண்டுகளாக இளம் தலைமுறையினரை குறிப்பாக மாணவர்களை நல்வழிப்படுத்திய அமரர் செல்லத்துரையுடன் அரை நூற்றாண்டுக்கு மேலாக பழகி எனது பல்துறை ஆற்றலைப் பெருக்கிக்கொள்ள அவரது வழிகாட்டல் அவ்வப்போது கிடைத்தது என்பதைப் பெருமையுடன் குறிப்பிடுகின்றேன்.
எண்ணம், சொல், செயல் எல்லாவற்றாலும் மிக மிகத் தூய்மையானவராக வாழ்ந்த செல்லத்துரை சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் சைவசமயக் கருத்துக்களையும், தமிழ்மொழியின் சிறப்புகளையும் அழகாகச் சொல்லி இளம் சந்ததியினரின் நாவன்மையையும், எழுத்தாற்றலையும் பலப்படுத்தியவர்.
அப்பெருந்தகை ஆசிரியர், அதிபர் ஆகிய பதவிகளுடன் நின்று விட்டாலும், அவரிடம் படித்த பல மாணவர்கள் அவரை விட உயர்ந்த பதவிகளில் நியமனம் பெற்று நிறைவேற்று அதிகாரிகளாக கடமையாற்ற வழி காட்டியவர் என்பதை பெருமையுடன் குறிப்பிடலாம்.
புலவரின் சிறந்த நிர்வாகத் திறமையும், பேச்சாற்றலும், கவிபுனையும் ஆற்றலும் நடிப்புத் திறனும் தனித்துவமானவை.
கல்விப் பணி, கலைப்பணி, தமிழ்ப் பணி, சமூகப் பணி, சைவ சமயப் பணி என பல் துறைகளில் பணியாற்றியவர்.
போட்டிகளில் நடுவராகக் கடமையாற்றும் போது, உறவினர் - தெரிந்தவர் என முகம் பாராது நடுநிலைத்தன்மையை சரியாகக் கடைப்பிடிப்பவர்.
அறுபதுகள் வரை பாடசாலைகளில் சைவப்புலவர்கள், பண்டிதர்கள், வித்துவான்கள் மாணவர்களுக்கு தமிழ்மொழியையும், சைவ சமயத்தையும் மிகத்தெளிவாகக் கற்பித்து சமூகத்தில் முந்தியிருக்க வைத்தனர். அத்தகைய ஆசிரியப்பெருமக்களுள் நினைவில் நிலைத்து நிற்பவர் அமரர் சைவப்புலவர் செல்லத்துரை.
1964 வரை உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரியில் மாணவனாக இருந்த காலத்தில் பண்டிதர் வேலுப்பிள்ளை, வித்துவான் கனகசபை ஆகியோரிடமிருந்து பல விடயங்களை தெரிந்து கொண்டேன். பின்னர் யாழ். இந்துக் கல்லூரியில் பண்டிதர் செல்லத்துரையிடமிருந்து பல விடயங்களை தெரிந்து கொண்டேன்.
அறுபதுகளில் பாடசாலை மாணவனாக பேச்சுப்போட்டியில் பங்கு பற்ற குரும்பசிட்டி சன்மார்க்க சபைக்குச் சென்றபோது, மதிய உணவு இடைவேளையில் மண்டபத்துக்கு வெளியே முகப்பில் கவிஞர்கள் அம்பி, நாகராஜன், சைவப்புலவர் செல்லத்துரை ஆகியோருடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. சுமார் 55 ஆண்டுகளுக்குப் பின்பும் அவர்களது உரையாடலின் சில பகுதிகள் எனது நினைவில் நிழலாடுகிறது.
அந்த உரையாடலின் பின்னர் வித்துவான் சொக்கன், வித்துவான் க.ந. வேலன், சைவப்புலவர் வேந்தனார், பண்டிதர் பொன். கிருஷ்ணபிள்ளை, பண்டிதர் க.கி. நடராஜன், வித்துவான் க.சி. குலரத்தினம், வித்துவான் பொன். முத்துக்குமாரன் ஆகியோரது அறிவுரையும் பெறக்கூடியதாக அதிர்ஷ்டம் அமைந்தது.
சைவப்புலவர் செல்லத்துரை நாற்பத்தேழு (47) நூல்களை எழுதியுள்ளார். அவரது ஒவ்வொரு நூல்களும் பெறுமதியானவை. என்னைப் பொறுத்தளவில் ஒவ்வொரு நூல்களிலும் எல்லோருக்கும் பயன் தரும் விடயங்கள் பல உண்டு. அவற்றில் வாசிப்பவர்களை ஊக்குவிக்ககூடிய உயர்ந்த கருத்துக்களைக் காணலாம்.
அவரது சிந்தையினில் நிறைந்திருக்கும் அவரது வாழ்க்கைத்துணை சிவகாமியம்மையை நினைந்து ஒவ்வொரு ஆண்டும் பயனுள்ள நூல் ஒவ்வொன்றை வெளியிட்டார்.
கல்வி அமைச்சில் கடமையாற்றியபோது, ஒரு தடவை கொழும்பு பிரபல மகளிர் கல்லூரி ஒன்றில் நாடகப்போட்டி நடுவராக நான் சென்றபோது நாடகங்கள் தரமற்றவையாக இருந்ததை அவதானித்து, புலவர் செல்லத்துரையை அணுகும்படி தெரிவித்தேன். புலவரின் நாடகங்கள் கொழும்பு பிரபல மகளிர் கல்லூரி மாணவிகளால் மேடையேற்றப்பட்டதோடு நூல்வடிவிலும் வெளியாகின.
புலவர் அரங்கக் கலைகளான உரை நாடகங்கள், இசை நாடகங்கள், நாட்டிய நாடகங்கள், சிந்து நடைக் கூத்துக்கள், இசையும் கதையும், வில்லிசைகள் இப்படி பல்வேறு கலைப்படைப்புக்களை மேடையேற்றி அவற்றை நூல் வடிவிலும் உருவாக்கியுள்ளார்.
மன்னாரில் கடமையாற்றிய காலத்தில் இந்தியப்பேரறிஞர்கள் கி.வா. ஜகந்நாதன் கவியோகி சுத்தானந்தபாரதி, அ.ச. ஞானசம்பந்தன் ஆகியோருடனும் நீடித்த தொடர்புகளைப் பேணிவந்துள்ளார்.
வீட்டுத் தோட்டம், நிதிப் பயன்பாடு, நிர்வாக ஒழுங்கு முறைகள், அறிக்கை தயாரித்தல், போட்டிகளை ஒழுங்காக நடத்தல், மாணவர்களை பங்கு பற்ற வைத்து பரிசில் பெற வைத்தவர். ஏறக்குறைய எல்லா துறைகளிலும் நல்லதொரு வழிகாட்டியாக திகழ்ந்தவர்.
கொழும்பு - இணுவில் சுக வாழ்க்கைப் பேரவை தலைவராகக் கடமையாற்றி நிகழ்ச்சிகளை ஒழுங்கமைத்ததுடன், காலாண்டு சஞ்சிகையையும் தொடர்ந்து வெளியிட்டு வைத்தவர்.
எந்த ஒரு விடயமானாலும் முழுமையாகவும் - சரியாகவும் விரைவாகவும் செய்ய வல்லவர். ஆசிரியர், எழுத்தாளர், விமர்சகர் எனப் பல விடயங்களில் முன்னணியில் திகழ்ந்த அமரர் கனக செந்திநாதன் அவர்களைப் பற்றி ஒரு கட்டுரை எழுதித் தரும்படி கேட்டார். அந்த விடயம் பிரசுரமான நூல் வெளியீட்டின் போது என்னையும் அழைத்து பேச வைத்து அவரது உறவினர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.
2019ல் 'திருமந்திர விருந்து' நூலை இணுவிலில் வெளியிட்டபோது என்னையும் அழைத்து அறிஞர்கள் பலருக்கு அறிமுகம் செய்து வைத்தார். இவற்றை மறக்க முடியாது.
சைவப்புலவர் செல்லத்துரை அமரராகி இரண்டு ஆண்டுகள் கடந்தாலும் எங்கள் எல்லோர் நெஞ்சங்களில் வாழ்கிறார் என்பதை குறிப்பிட்டு, அவரது வழிகாட்டல் முன்னோட்டமாக செயற்பாடுகள் தொடர்ந்தும் வழிகாட்டும் என்பதைத் தெரிவித்து, அவரின் ஆத்மா சாந்தியடையவும், குடும்பத்தினர் யாவரும் நலம் பெற இறைவனை பிராத்திக்கின்றேன் என உடுவை.எஸ்.தில்லைநடராசா தெரிவித்துள்ளார்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)