
posted 17th March 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
அக்கரைபற்று வலய தியாகிகள் நினைவு
“தியாகிகளை நினைவு கூருவோம், அவர்தம் உறவுகளைக் கௌரவிப்போம்”
எனும் தலைப்பில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்) வருடாந்தம் நடத்தி வரும் நிகழ்வின் தொடர்ச்சியான ஐந்தாவது நிகழ்வு அக்கரைப்பற்றில் உணர்வு பூர்வமாக நடைபெற்றது.
அக்கரைப்பற்று 7, 8, 9 ஆம் பிரிவுகள், நாவற்காடு, கோளாவில், கோளாவில் வடக்கு, பனங்காடு, கண்ணகிபுரம், ஆலையடிவேம்பு, அளிக்கம்பை, சின்ன முகத்துவாரம் முதலான பிரதேசங்களை உள்ளடக்கிய அக்கரைப்பற்று வலய நிகழ்வாக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மட்டக்களப்பு – அம்பாறை பிராந்திய ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் ஏற்பாட்டுக் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வு அக்கரைப்பற்று – 8 பாவேந்தர் சனசமூக நிலைய மண்டபத்தில் நடைபெற்றது.
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அரசியல் உயர்பீட உறுப்பினர் தோழர் சர்மாவின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், பெருமளவிலான தியாகிகளின் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டதுடன் பிரதேச முக்கியஸ்தர்கள் மற்றும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் முக்கியஸ்த்தர்களும் கலந்து கொண்டனர்.
மிகவும் உணர்வு பூர்வமாக இடம்பெற்ற நிகழ்வில் மறைந்த கட்சியின் செயலாளர் தியாகி தோழர் க. பத்மநாபாவின் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன், மறைந்த தியாகிகளுக்காக இரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
மேலும் தியாகிகளை நினைவு கூருமுகமாக அவர்களது உருவப்படங்கள் வைக்கப்பட்டு உறவுகளால் விளக்கேற்றியும் வைக்கப்பட்டதுடன் தியாகிகளின் உறவுகள் கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
ஈழவிடுதலைப் போராட்டத்தில் உயிர் நீத்த எமது குறித்த பகுதி தியாகிகளை அவர்கள் குடும்பத்தினரோடு ஒன்று சேர்ந்து நினைவு கூருவதை நோக்காகக் கொண்டு, குறிப்பிட்ட பகுதித் தோழர்களுடனும், உள்ளுர் மட்டத்தலைவர்கள் சமூகப் பெரியோர்கள், மதத்தலைவர்களின் பங்குபற்றுதலுடனும் இந்த நிகழ்வு இடம்பெறுவதாக உயர் பீட உறுப்பினர் தோழர் சர்மா கருத்து வெளியிட்டார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)