ஹக்கீமின் உரை - தொகுப்பு

இந்த ஆட்சியாளர்கள் மீது நாடுபூராகவும் மக்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற அதிருப்தி சாதாரணமானதல்ல.எனவே, முஸ்லிம் காங்கிரஸ் ஏனைய கட்சிகளோடும் இணைந்து நாட்டை மீட்பதற்கான பலமானதொரு போராட்டத்திற்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்தார்.

சம்மாந்துறை,முஸ்லிம் காங்கிரஸ் சார்பு எஸ்.ரீ.ஆர். இளைஞர் அணியின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா,அப்துல் மஜீத் நகர சபை மண்டபத்தில் அதன் தலைவர் ஹாபிழ் ஹாதிக் இப்ராஹிம் தலைமையில் , சனிக்கிழமை (19)நடைபெற்றபோது,அதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் காட்டமாகக் கூறினார்.

முன்னதாக, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் சம்மாந்துறை,நெல்லுபிட்டி சந்தியிலிருந்து வரவேற்கப்பட்டு,ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் உரையின் போது மேலும் தெரிவித்ததாவது,

ஒரு "நல்ல "ஜனாதிபதி கிடைத்திருக்கிறார். அவருக்கு நல்லது நடந்தால் அவரால் நடந்தது என்கிறார். சில விடயங்கள் பிழையாக நடந்துவிட்டால் தான் அதற்குப் பொறுப்பில்லை என்று சொல்வார். நாட்டு மக்களுக்காக ஆற்றுகின்ற உரையில் "அதற்கு நான் பொறுப்பில்லை" என்று சொல்கின்றார். இப்படியான ஒரு "நல்ல "ஜனாதிபதி எங்களுக்குக் கிடைத்திருக்கிறார்.

இந்த ஜனாதிபதி சம்பந்தமாக ஒருவர், "நீங்கள் திணைக்களம், திணைக்களமாக சென்று பார்க்கிறீர்கள். தயவுசெய்து பெற்றோல் நிலையத்தில் இருக்கின்ற வரிசையில் நின்று பாருங்கள் என்றும், தைரியம் இருந்தால் நீங்கள் இங்கு வாருங்கள் என்றும் இந்த நாட்டு ஜனாதிபதிக்கு ஒருவர் பதிவிட்டிருக்கிறார்.

இப்போது எங்கே நிம்மதி
என்ற பாட்டு எனக்கு ஞாபகத்துக்கு வருகின்றது.எங்கே பெட்றோல் அங்கே எனக்கோர் இடம் வேண்டும். எங்கே டீசல் அங்கே எனக்கோர் இடம் வேண்டும். எங்கே டீசல் அங்கே எனக்கோர் கடன் வேண்டும் என்றவாறாக பாடல் அமைய வேண்டும்.

இப்போது எல்லோரிடமும் கடன் கேட்டு திரிகின்றார்கள். நாட்டினுடைய பொருளாதார முகாமைத்துவம் இன்று படுமோசமாக, மக்களைப் படு பாதாளத்தில் தள்ளி இருக்கிறது. எந்த அரசாங்கமும்
ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்களில் இவ்வளவு மக்களின் சாபத்தைப் பெற்றதை நாங்கள் இதற்கு முன்பு கண்டதே கிடையாது. எல்லோரும் "வீட்டுக்குப் போ" என்று சொல்லுகின்ற அளவுக்கு இன்று ஆட்சியாளர்கள் மாறிவிட்டார்கள்.

முஸ்லிம்களின் கஷ்டத்திலும், நஷ்டத்திலும் தான் அவர்களது அரசியல் பிழைப்பு நடக்கிறது.

இங்கு சம்மாந்துறையில் ஒரு வீட்டில் ஒருவருக்கும் தெரியாமல் மிகப் பெரிய குண்டு வெடிப்புக்கான இரசாயனப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. நிந்தவூரிலும் அப்படித்தான். சாய்ந்தமருதில் தற்கொலை குண்டுதாரிகளாக தங்களை மாய்த்துக் கொண்டார்கள். ஆனால், இப்படியான ஒரு தீவிரவாதம் இந்த சமூகத்துக்குள் இருந்ததை நாங்கள் யாரும் காணவில்லை. எங்களுக்கு அப்படியான உணர்வு ஏற்படவுமில்லை. அந்தக் காலகட்டத்தில் இப்படியான ஒரு தீவிரவாதம் இருந்தது யாருக்கும் தெரியவில்லை. ஆனால், இவையெல்லாம் ஆரம்பித்தது அம்பாறையில் ஒரு கொத்துரொட்டி கடையில்தான் .அங்குதான் இந்தப் பிரச்சினைக்கான ஆரம்ப வித்து இடப்பட்டது. இப்போது நடக்கின்ற வழக்குகளில் இந்த விடயங்கள் சொல்லப்படுகின்றன. அதற்குப் பொறுப்பாக இருந்தவர்கள்தான் இப்போது
சட்டத்திற்கும் பாதுகாப்புக்கும் பொறுப்பாக இருக்கிறார்கள். அதனுடைய சூத்திரதாரிகளின் பெயர்களைக் குறிப்பிட வேண்டிய அவசியமில்லை.

நாட்டினுடைய கத்தோலிக்க மக்களின் பேராயர் ஜெனிவாவுக்கு போகிறார்: பாப்பரசரைச் சந்திக்கிறார். இந்த நாட்டு ஆட்சியாளருக்கெதிராக முறையீடு செய்கிறார். கார்டினல் ஆண்டகை சென்று பேசுவதென்றால் ஒன்றுமில்லை. தப்பித்தவறி
முஸ்லிம் ஒருவர் போனால் அவ்வளவுதான்.
எல்லோருக்கும் பீதி வந்திருக்கிறது. இந்த சமூகத்தை பீதி கொள்ள வைத்திருப்பதற்காக அப்படியானதொரு விடயத்தில் இவர்கள் வெற்றி கண்டிருக்கிறார்கள். எல்லோரும் அடங்கிப் போய் விட்டார்கள். இனியும் அடங்கி இருக்க முடியாது. அநியாயத்தைத் தட்டிக் கேட்க வேண்டும். அவர்களுக்குள் இருந்து நடந்த இரகசிய திட்டமிடல்கள் என்னவென்பதை புலனாய்வாளர்களே இன்று உச்ச நீதிமன்றத்தில் போய் மனித உரிமை வழக்கில் சொல்கிறார்கள் விசாரணைகளைத் திசை திருப்புவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

புதிய அறிக்கை என்னவென்றால், இந்த குண்டு வைப்புக்கு பின்னால் இலங்கையில் பாதுகாப்பு துறை இருந்ததா? என்பதை விசாரிக்க வேண்டும் என்பதாகும்.நேரடியாக அப்படியானதொரு கேள்வியை மனித உரிமை ஆணையாளரே முன்வைக்கிற அளவுக்கு விடயம் பெரிதாகிவிட்டது. ஏனெனில், இந்த விடயங்கள் இப்போது அம்பலத்துக்கு வருகின்றன. அப்பாவி இளைஞர்கள் ஆயிரக்கணக்கில் பிடிபட்டார்கள். ஆனால், முஸ்லிம் காங்கிரஸ் தலைவரையும் அதனோடு முடிச்சுப்போடலாம் என்று பார்த்தார்கள். எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தார்கள். ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் நான் மிகத் தீவிரமாக குறுக்கு விசாரணை செய்யப்பட்டேன். அதுவும் எனக்குத் தெரிந்த சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் குறுக்கு மறுக்காக கேள்விகள் கேட்டனர். ஆனால் நான் இலகுவில் பிடியில் அகப்படும் ஆள் அல்ல.

எனினும்,
இவற்றுக்குப் பின்னால் இருக்கின்ற இரகசியங்கள் இப்போது அம்பலத்துக்கு வந்து கொண்டிருக்கின்றன.

எப்படியாவது முஸ்லிம் தலைமைகளின் தலைகளில் இவற்றைப் போட்டு தேங்காய் உடைக்கலாம் என்று பார்த்தார்கள். இன்று இதற்குப் பின்னால் ஒரு பெரும் சதி இருக்கிறது என்பது சம்பந்தமான சந்தேகம் பலமாக வலுத்துவிட்டது.

ஏனென்றால், இந்தப் பேச்சையும் இப்போது உளவுத்துறையினர் கொஞ்சம் பேர் கேட்டுக் கொண்டிருப்பார்கள். இதனுடைய பதிவும் கொஞ்சம் வெளியில் போகும். நானும் கொஞ்சம் கவனமாகத்தான் பேச வேண்டும். நான் இங்கு சொல்கின்ற விடயங்கள் அனைத்தும் இப்போது பகிரங்க வெளியில் சொல்லப்படுகின்ற விடயங்களாகும்.அவை மனித உரிமைகள் ஆணையாளரால் ஐக்கிய நாட்டு அறிக்கையில் சொல்லப்படுகின்ற விடயங்களாகும். உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மனுக்களில் சத்தியக் கடதாசிகளினால் கொடுக்கப்பட்டிருக்கின்ற தகவல்களாகும்.

எனவே, இவற்றையெல்லாம் நாங்கள் ஒளித்து மறைத்துப் பேச வேண்டிய அவசியம் இல்லை. இருந்தாலும் இந்த சமூகத்துக்கு எதிரான இந்தப் பாய்ச்சல் இனியாவது முடிவுக்கு வருமா என்றால்
அவை இலேசில் முடிகின்ற விடயங்கள் அல்ல. எப்போதும் அதனைச் சீண்டி விட்டு அதில் குளிர் காயலாம் என எத்தனிக்கின்றனர்.

பாலமுனையிலும் சிலை வைப்பதற்கான முயற்சி நடந்தது.இப்படி ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒன்றில் சீண்டிப் பார்ப்பது பிழைப்பாகி விட்டது.. அத்தோடு இந்தப் பெரும்பான்மை சிங்கள மக்களை கொஞ்சம் உசுப்பேத்தி விடுவதும் நடக்கின்றது. ஏனென்றால், தங்களுடைய ஆட்சி ஆட்டம் காண்கின்றது என்றவுடனேயே இருக்கின்ற ஒரே ஓர் ஆயுதமாக இடி இடிக்கும் போது இரும்பை தூக்கிக் கொண்டு செல்கின்ற மாதிரி, இந்த வேலையைத்தான் அவர்கள் பார்ப்பார்கள். எனவே, அதற்கு அஞ்சி ஒடுங்கி இனியும் பயந்து மூலையில் முடங்கிப் போய் இருக்கும் ஒரு சமூகமாக நாங்கள் இருக்க வேண்டிய அவசியமில்லை.

முஸ்லிம் காங்கிரஸ் என்ற இயக்கத்தின் வீரியம் இன்று ஏதோ விறைத்துப் போய் விட்டதாக சிலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இனி காலம் கனிந்து விட்டது. ஏனென்றால், இந்த இயக்கத்தை நம்பி இருக்கின்ற மக்கள் முன்னிலையில், சிலர் இந்த இயக்கத்துக்கு முரணான நோக்கத்தில் நடந்து கொள்கின்றார்கள் என்ற பரவலான விமர்சனம் பேசப்படுகிறது. அவர்களும் இதில் தெளிவு பெற வேண்டும் என்பதற்காகப் பொறுமையோடு இருந்தோம். ஏனென்றால், இந்தக் கட்சியை கூறு போடுவதற்கு பார்த்துக் கொண்டிருக்கின்ற சக்திகளுக்கு இடம் கொடுத்து விடக்கூடாது என்பதற்காக மிக நிதானமாக அந்த விடயங்களை கையாள்வது என்னுடைய பலவீனம் என சிலர் நினைக்கலாம். ஒவ்வொரு தேர்தல் முடிந்தவுடன் முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் பலத்தை சீர்குலைப்பதற்கு அதிகாரங்களைக் கொடுத்து மக்களை வசப்படுத்துவதற்கு நிறைய எத்தனிப்பது தொடர்ந்தும் எமது வரலாற்றில் நடந்துகொண்டு வருகின்றது. மறைந்த தலைவருடைய காலத்தில் இருந்து அது நடந்து வருகின்றது. அவரும்,நாங்களும் சந்திக்காத சவால்கள் இல்லை. நாங்கள் பேசாத வழக்குகள் இல்லை. தொடர்ந்தும் இவ்வாறான பிரச்சினைகள் எவை வந்தாலும் தைரியமாக அவற்றிற்கு முகம் கொடுப்பதற்கு பலமான இயக்கமும் போராளிகளும் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையோடு தான் இந்த இயக்கம் வாழ்ந்துகொண்டிருக்கிறது.

ஆனால், நேற்று முளைத்த காளான் இயக்கங்களுக்கு இவையெல்லாம் கிடையாது. அவர்கள் எல்லாம் முஸ்லிம் காங்கிரஸில்
இருந்து அரசியல் அடையாளத்தைப் பெற்றவர்கள். இப்போது அவர்களுக்கு இருக்கிற பெரிய சான்றிதழ் ஏதோ இந்த அரசாங்கம் எங்களைப் பழிவாங்கப்பார்க்கிறது என்று சொல்லிக் கொள்வதாகும்.. உங்கள் எல்லோரையும் விடவும் பழிவாங்கப்பட்டவர்கள் இந்த முஸ்லிம் காங்கிரஸில் இருக்கிறோம். எங்களை பழி வாங்குகிறான்; பழிவாங்குவான் என்று சொல்லிச் சொல்லி நாங்கள் அழுது திரியவில்லை. எங்களுடைய அரசியலில் இரண்டறக் கலந்த விடயங்களைப் பற்றி நாங்கள் அங்கலாய்க்கவில்லை. அங்கலாய்க்க வேண்டிய அவசியமுமில்லை. திடமாக உறுதியாக இவற்றுக்கெல்லாம் முகம் கொடுப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.

நிச்சயமாக இந்த ஆட்சியாளர்கள் மீது நாடுபூராகவும் ஏற்பட்டிருக்கின்ற அதிருப்தி சாதாரணமானதல்ல.அதில் முஸ்லிம் காங்கிரஸ் ஏனைய கட்சிகளோடும் இணைந்து பலமான ஒரு போராட்டத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. ஆனால்,அது இலேசான காரியம் அல்ல. ஏனென்றால், நாடு அப்படியான நிலைமைக்கு வந்துவிட்டது.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நாட்டிலும் பிச்சை வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு மில்லியன் ரூபாவை மீண்டும் இந்தியா கொடுத்திருக்கிறது. இன்னும் இரண்டரை மாதங்களில் அது முடிந்து விடும். அதுக்குப் பிறகு வெறெங்கு செல்வது? இப்படியே போய்க் கொண்டிருக்கலாம். ஆனால், ஒன்றை ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும். இதே மாதிரி நிலைமை கிரேக்கத்துக்கு வந்தது; லெபனானுக்கு வந்தது. ஏன் நாடு வங்குரோத்து நிலைக்கு வந்து விட்டால் வேறுவழியில்லை. கிரேக்கத்தில் நடந்தது ஒரு வருடத்தில் மூன்று முறை ஆட்சி அமைத்து அமைத்துப் புரட்டியது. எவருக்கும் ஆட்சி அமைக்க இயலாது.

மக்களுக்கு அறவே திருப்தி இல்லை. ஒவ்வொரு நாளும் விலைவாசி ஏறிக் கொண்டுதான் போகும். கட்டுப்படுத்த முடியாது. அதுதான் இப்போது வரப்போகின்றது. ஆட்சியைப் பிடிப்பதில் அவசரப்படுவதில் எந்தவிதமான பிரயோசனமும் இல்லை. இவர்களால் நாடு அப்படியே நாசமாகிப் போய்விட்டது.

எனவே, இந்தப் பிரச்சினையில் இருந்து மீள்வதற்கு இந்த "ஏழு மூளையாரை" நம்பிப்பயனில்லை.

எல்லாம் சாபம். பதைக்கப் பதைக்க முஸ்லிம்களுடைய
ஜனாஸாக்களை எரித்த சாபம் இந்த ஆட்சியை ஒருநாளும் சும்மா விட்டுவைக்காது. எத்தனை பேர் அழுது பிரார்த்தித்தார்கள்.

எப்படியான தைரியத்தில் பேசினார்கள். எங்கெல்லாம் முஸ்லிம் ஊர்கள் இருக்கின்றனவோ அங்கெல்லாம் கொரோனா பரவல் என்று கூத்துக் காட்டினார்கள். குறிப்பாக அவ்வாறாகச் செயற்பட்ட
இரண்டு ஊடகங்கள் இருக்கின்றன. அந்த ஊடகங்கள் கூட இப்போது விழுந்தடித்துக்கொண்டு எதிர்கட்சிகளுடைய கூட்டங்களைக் காட்டுகின்றனர். காலையிலேயே பத்திரிகைக் கண்ணோட்டம் வாசிக்கின்ற பெயர் பெற்ற ஊடகங்கள்- இந்த அரசாங்கத்தின் ஊதுகுழலாக இருந்த ஊடகங்கள் இன்று இந்த அரசாங்கத்தைத் தாறுமாறாக விமர்சிக்கின்றன. ஏனென்றால், விமர்சிக்கா விட்டால் ஊடகத்தை ஒருவரும் பார்க்க மாட்டார்கள். அதற்காக விமர்சிக்கிறார்கள். இந்த சூழலில்தான் இன்று நாங்கள் இனிமேலும் அடங்கிப் போய் ஒடுங்கிப்போய் இருப்பதை விடவும் மிகத் தெளிவாக இந்த போராட்டத்தில் இறங்க வேண்டும்.முஸ்லிம் காங்கிரஸ் எத்தனையோ ஆட்சி மாற்றங்களை உருவாக்கியது .

எங்களால் செய்ய முடியும் என்பதை நாங்கள் கூட்டாக, அனைத்து சிநேக சக்திகளோடும் இணைந்து சாதிக்க வேண்டும்.

இன்று சகோதர தமிழ் சமூகத்தோடு எங்களுக்கு சில முரண்பாடுகள் இருக்கலாம். ஆனால், நாங்கள் சினேகபூர்வமாக அவர்களையும் அரவணைத்துப் போகின்ற ஓர் அரசியலைத் தான் செய்து கொண்டிருக்கின்றோம். இப்போது நாளைக்கோ, நாளை மறுநாளோ ஜனாதிபதி
தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் சந்திக்கப் போகிறாராம் என்று ஒரு கேள்வி. அதற்கு உள்ளேயும் சில பிரச்சினைகள் போய்க் கொண்டிருக்கின்றன. ஜனாதிபதி தமிழ் தேசியக் கூட்டமைப்போடு பேசி இனி ஒரு பிரயோசனமும் கிடையாது . வேறு வழி இல்லாமல் பேசுகிறார்.

மேற்கு நாடுகளிலிருந்து வருகின்ற அழுத்துக்காக போய்
சும்மா சாட்டுக்குப் பேசுவது எல்லோருக்கும் தெரியும்.

இப்போது சர்வகட்சி மாநாடு என்று எங்களை அழைத்து இருக்கிறார்கள். எதிர்வரும் 23ஆம் திகதி எங்களுக்கு அழைப்பு வந்திருக்கிறது. இந்த சர்வகட்சி மாநாட்டுக்கு ஆலோசனைகளை அவர்களுக்கு முதலில் எழுதி தரட்டுமாம் என்று சொல்லி இருக்கிறார்கள்.

ஆலோசனைகளை எழுத்தில் தரச் சொன்னால், "ஜனாஸாக்களை எரித்ததற்கு பாவ
மன்னிப்புக்
கேளுங்கள் " என்று முதலில் சொல்ல வேண்டும். இப்போது எல்லாவிடத்திலும் தாராளமாக நல்லடக்கம் செய்ய விடுகிறார்கள். எல்லாம் இரவோடிரவாக நடந்தது. வேறொன்றுமில்லை இதெல்லாம் ஜெனீவா பேரவையின் பிரதிபலன். சென்றமுறை ஜெனீவாவில் பிரேரணை நிறைவேறப்போகிறது. என்பதற்காக இம்ரான்கானைக் அழைத்துவந்து வைத்து அவர் சொல்கிறார் என்பதற்காக ஒரு நாடகத்தை காட்டி,ஜனாஸாக்களை எரிக்கின்ற விடயத்தில் ஒரு மாற்றம் செய்தார்கள். ஆனால், கொரோனாவில் மரணித்தால் ஒட்டமாவடிக்குத்தான் கொண்டு செல்ல நேர்ந்தது.

இப்படியான ஒரு நாடகத்தை நடித்து முழுக்க முழுக்க கேலிக்கூத்தாக இந்த விடயத்தை மாற்றி உலகத்தில் ஓர் இடத்திலும் இல்லாத இந்த அநியாயத்தை செய்த
இந்த ஆட்சியாளர்களுக்கு கூஜா தூக்கிய யாரும் இனி அடுத்த தேர்தலில் எப்படி வாக்குக் கேட்பது? அதுவும், இந்த கட்சியின் பெயரில் எப்படி அவர்கள் தேர்தல் கேட்பது?

இதைத்தான் நான் அவர்களுக்கு சொல்கிறேன்.அவர்கள்மன்னிப்பு கேட்கும் நிலைமை எதிர்காலத்தில் வரப்போகின்றது.இதைச் சொல்லும்போதுகல்முனையில் இருந்து சிலபேர் கைதட்டுகிறார்கள். போய் சொல்லுங்கள்.

இன்று எம்.பி. மார்கள் கொஞ்சப்பேர் ஒரு பக்கம்; தலைவர் மறு பக்கம். கட்சி எல்லாம் பாதிக்கப்பட்டு விட்டது
என்ற நோக்கத்தில் இங்கு நிலைமையைப் பார்க்க இலங்கையின் நாலாபுறத்திலிருந்தும் வந்திருக்கிறார்கள்.இவர்கள் அனைவரும் இந்த இயக்கம் ஆழமாக வாழ வேண்டும் என்ற உணர்வில் இருப்பவர்கள். இந்த உணர்வு இருக்கும் வரை இந்த இயக்கம் வாழும். இந்த உணர்வோடு இளைஞர்களும் கட்சிகளின் போராளிகளும் இருக்கும் வரை இந்தத்
தலைமைக்கும் தயக்கம் கிடையாது. பயமில்லாமல் பீதியில்லாமல் எதையும் எதிர் கொள்ளலாம்.

எனவேதான், அந்த முடிவோடு மிக தெளிவாக இந்த இயக்கத்தை வாழ வைப்பதற்கு இன்று சம்மாந்துறையில் இளைஞர்கள் புறப்பட்டு உள்ளதுபோல் ஒவ்வோர் ஊரிலும் இளைஞர்கள் புறப்பட வேண்டும். ஒரு யுக மாற்றம் நிகழ வேண்டும். அதற்கான தருணம் வந்து விட்டது. இது ஒரு நிலைமாறு காலம். இந்த நிலைமாறு காலத்தில் இந்த இயக்கம் புடம்போடப்பட்டு வீரியத்துடன் இன்னும் வீறுநடை போட்டுப் பயணிக்க வேண்டும். அதற்கு எல்லாம் வல்ல இறைவன் துணை நிற்பான் என்ற பிரார்த்தனையோடு விடைபெறுகிறேன் என்றார்.

ஹக்கீமின் உரை - தொகுப்பு

ஏ.எல்.எம்.சலீம்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House