
posted 31st March 2022
மன்னார் மாவட்டத்துக்கு எரிபொருள் வருகின்ற வேளையில் மீனவர்களுக்கு எரிபொருள் வழங்கும் மீனவ சங்கங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுமாகில் மீனவர்கள் யாவரும் எரிபொருள் நிலையங்களில் நீண்ட வரிசையில் நின்று பெரும் சிரமத்தை நீக்கி, யாவரும் சிரமமின்றி தங்கள் மீன்பிடியில் ஈடுபட வாய்ப்பு ஏற்படும் என மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்க சமாசத்தின் செயலாளரும் வட மாகாணத்தின் கடற்தொழிலாளரின் இணையத்தின் பேச்சாளருமான முகமட் ஆலம் இவ்வாறு தெரிவித்தார்.
மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்க சமாசத்தின் செயலாளரும் வட மாகாணத்தின் கடற்தொழிலாளரின் இணையத்தின் பேச்சாளருமான முகமட் ஆலம் புதன்கிழமை (30.03.2022) காலை நடாத்திய ஊடக சந்திப்பின்போது தெரிவித்ததாவது;
எமது மீனவர்கள் தொடர்பாக நாங்கள் இரண்டு விடயங்களை சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
அதாவது இந்திய இலுவைப்படகு விடயமாகவும் மற்றும் எமது மீனவர்கள் எதிர்நோக்கும் எரிபொருள் தொடர்பாகவும் நாம் கவனத்துக்கு கொண்டு வரவேண்டிய நிலைக்கு உள்ளாகியுள்ளோம்.
இந்திய இலுவைப்படகு தொடர்பாக எங்களால் மேற்கொள்ளப்பட்ட அனைத்து செயல்பாடுகளும் எந்தவித முன்னேற்றம் காணப்படாத நிலையிலேயே காணப்படுகின்றது.
இது தொடர்பாக நாங்கள் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகள் மற்றும் போராட்டங்களால் எந்தவித முன்னேற்றம் இல்லாத நிலை தொடர்கின்றது.
புதிதாக ஆட்சி பீடம் ஏறிய அரசாங்கத்தின் கடற்தொழில் அமைச்சர் இவ்விடயத்தை தீர்த்து தருவார் என்று எதிர்பார்த்து இருந்தபோதும் அவைகள் தொடர்ந்தும் தொடர்கதையாகவே உள்ளது.
அண்மையில், கச்சத்தீவில் இந்திய மீனவர்களுடன் ஒரு உரையாடல் இடம்பெற்றது. அதில் இந்திய மீனவர்களின் வருகை தொடர்பாகவே சுட்டிக்காட்டப்பட்டது.
இந்திய இலுவைப்படகு மீனவர்கள் இலங்கை மீனவர்களுடன் பேசுவோம் என அங்கு தெரிவித்திருந்தனர். ஆனால் இலங்கை மீனவர்கள் குறிப்பாக வடபகுதி மீனவர்கள் எக்காரணம் கொண்டும் இந்திய இலுவைப்படகு மீனவர்களுடன் பேசுவதற்கு தயாரில்லை என்பதை நாம் இங்கு இதை பதிவு செய்கின்றோம்.
அடுத்து, எமது மீனவர்கள் தற்பொழுது எதிர்நோக்கும் பிரச்சனை எரிபொருள். இன்று பொது மக்களும் மீனவர்களும் நீண்ட நேரம் நீண்ட வரிசையில் நின்று இதை பெறவேண்டிய துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த நெருக்கடி ஏன் ஏற்பட்டது என்பது எமக்குத் தெரியவில்லை. குறிப்பாக எமது பகுதிக்கு வருகின்ற எரிபொருள் ஒரு படகுக்கு எவ்வளவு எரிபொருள் வழங்குவது என்பது சீர்செய்யப்படுமாகில் மீனவர்கள் தங்கள் தொழில்களை இழந்து எரிபொருள் பெறுவதில் ஏற்படும் சிரமத்தை தவிர்த்துக் கொள்ளலாம்.
இது தொடர்பாக நாங்கள் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் கடற்தொழில் உதவிப் பணிப்பாளர் ஆகியோருடன் உரையாடினோம். மன்னார் மாவட்டத்தில் மீனவ சமாசத்தின் கீழ் 33 மீனவ சங்கங்கள் இயங்குகின்றன.
சிறிய படகுகளான கண்ணாடி படகுகள் இப் பகுதியில் 3500 படகுகள் இருக்கின்றன. ஒரு படகுக்கு நாளாந்தம் 30 லீற்றர் எரிபொருள் தேவை என நோக்கும்போது, சுமார் ஒரு இலட்சம் லீற்றர் எரிபொருள் ஒரு நாளைக்கு மன்னார் மீனவர்களுக்குத் தேவைப்படுகின்றது.
மன்னார் மாவட்டத்துக்கு வரும் எரிபொருளை இங்குள்ள சங்கங்களுக்கு படகுகளின் நிலைகளுக்கு ஏற்ப சமமான அடிப்படையில் பிரித்து வழங்கும்போது மீனவர்கள் நீண்ட வரிசையில் இருந்து பெற வேண்டிய அவசியம் இருக்காது.
கடந்த காலங்களில் இவ்வாறான செயல்பாடுகளுடனே இங்கு நடைமுறைக்கு இருந்து வந்துள்ளது. ஆகவே மீனவர்களுக்கு எரிபொருள் வழங்கும் சங்கங்களுக்கு படகுகளின் எண்ணிக்கைக்கு எற்ப இங்குள்ள எரிபொருள் நிரப்பும் நிலையங்களின் மூலம் எரிபொருள் வழங்கும்படி நாம் சுட்டிக்காட்டியுள்ளோம் என இவ்வாறு தெரிவித்தார்.

வாஸ் கூஞ்ஞ
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House